

நான் என் சிறு வயதுகளில் இருக்கும்போது என்னுடைய ஹீரோவாக ஒருவர் இருந்தார். எனக்கு மாமா முறை அவர். ரொம்ப ஜாலியான ஆள். காலையில் கிளம்பி, தோட்டத்துக்குப் போய் நாளெல்லாம் வேலை செய்வார். நான் எப்போது தோட்டத்துக்குச் சென்றாலும் அவரைத் தேடுவது வழக்கம். காரணம் அவர் சொல்லும் கதைகள்.
தோட்டத்தின் வேலிப் பகுதிகளிலும் கிணற்றையும் மோட்டார் ரூமை ஒட்டிய இடங்களிலும் மொச்சை, தட்டாங்காய் ஆகிய கொடிகள் படர்ந்திருக்கும். மாமா காய்ந்த சோளத் தட்டைகளைச் சேகரித்துத் தீவைத்து அதில் மொச்சைக் காய்களை வேக வைப்பார். நானும் என் வயதொத்த ஓரிரு சிறுவர்களும் சுற்றிலும் அமர்ந்து இருப்போம். காய்கள் வேகிற வரை மாமா சும்மா இருக்க மாட்டார். ஒரு கதையை எடுத்துவிடுவார்.
‘‘நாலு வருசம் முன்னால இதே மாதிரி ஒரு நாள் நான் தனியா மொச்சை வேக வெச்சிக்கிட்டிருந்தேனா... அப்ப பாத்து திடீர்னு ஒரு பூதம் வந்துருச்சு.’’
“அப்புறம்?” என்று நாங்கள் பீதியுடன் கேட்க, அவர் சகஜமாகத் தொடர்ந்து சொல்லுவார், ‘‘அந்த பூதம் நாலஞ்சு நாளா சாப்பிடல போலிருக்கு. என்கிட்ட வந்து என்னடா வேக வெச்சுக்கிட்டு இருக்கேனு கேட்டுச்சு. நான் பயப்படுவனா? இது மாதிரி எத்தன பூதத்தப் பாத்திருக்கேன்? என்னா சொன்னேன் தெரியுமா? ‘நடந்து வரும்போது, ஒரு குறளிப் பேய் என்கிட்ட சேட்ட பண்ணுச்சு. அதைப் பிடிச்சு வாங்கருவாளால அரிஞ்சு உப்புப் போட்டு வேக வெக்கிறேன்’னு சொன்னேனா? அது பயந்திருச்சு. ‘குறளிப் பேயையே வேக வெச்சுத் திம்பியா நீ’ன்னு கேட்டுச்சு. அதுக்கு நானு ‘குறளிப் பேய் என்னா பெரிசு? எனக்கு ரொம்ப நாளா உன்னைய மாதிரி பூதத்தை நெய் விட்டுப் பதமா வதக்கித் திங்கணும்னு ஆசை’ன்னு சொன்னேனா? அவ்வளவுதான்... பயபுள்ள... ஒரே ஓட்டமா பயந்து ஓடிருச்சு இல்ல?"
நாங்கள் வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்போம். அந்த மாமாவிடமிருந்து சளைக்காமல் கதைகள் வந்துகொண்டேயிருக்கும். நல்லப் பாம்பை உயிரோடு பிடித்தது, ஆற்றில் விழுந்து உயிருக்குத் தவித்த மூன்று பேரை இவர் ஒரே ஆளாகக் குதித்து நீந்தி, ஒரு கையால் பிடித்துக்கொண்டு கரை சேர்த்தது, இரவு தோட்டத்தில் திருட வந்த திருடர்களைக் கல்லால் அடித்தே விரட்டியது என்று விதவிதமான அனுபவங்களைச் சுவாரசியமாகச் சொல்வார். எல்லாக் கதைகளிலும் ஹீரோ அவர்தான். அவர் சொல்வது எல்லாமே கதை சுவாரசியத்துக்காகச் சொன்ன கற்பனைகள்தான் என்பது எனக்கு வெகு காலம் கழித்து நான் வளர்ந்த பின்புதான் தெரியவந்தது. ஆனால், அந்தப் பருவத்தில் அவர் சொன்ன அந்தக் கற்பனைகள் எனக்குள்ளே ஒரு விசித்திர உலகத்தை உருவாக்கின. அதில் ஒரு தவிர்க்க இயலாத நபராக நானும் இருந்தேன். அவ்விதமான கற்பனை உலகங்களும் அவை நமக்களிக்கும் சுவாரசியங்களும் எந்தப் பொழுதுபோக்கு தீம் பார்க்குகளாலும் தர இயலாத அனுபவங்கள்.
சிறிய வயதில் அவ்வாறான கற்பனைகளும் கதைகளும் நமக்குள் ஒரு பிரதேசத்தைத் திறந்துவிடுகின்றன. நம்முடைய கற்பனாசக்தியை அவை தீட்டிக் கூர்மைப்படுத்துகின்றன. மனிதனின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இந்தக் கற்பனாசக்தி மிகவும் அத்தியாவசியமானது. புதுப்புதுக் கற்பனைகளை விரிக்க விரிக்க மனம் விசாலமடைகிறது. அதன் ஆற்றல் அதிகரிக்கிறது.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட பிள்ளைகளுக்குக் கதை சொல்லும் வழக்கம் இருந்துவந்தது. தொலைக்காட்சியின் வருகைக்குப் பின் அந்த வழக்கம் மெல்ல மெல்லத் தேய்ந்து மறைந்துவிட்டது. இதனால், பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றவர்களும் இழந்தது அதிகம். ஆனால், அந்த இழப்பின் அருமையை உணராமல்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். வாழ்க்கை, நெருக்கடிகள் அதிகமுள்ளதாகவும், நின்று பேசவும் அமர்ந்து யோசிக்கவும் அவகாசம் இல்லாததாகவும் கடந்த இருபதாண்டுகளில் மாறி, அவசர கதியில் வேகமெடுத்திருக்கிறது. அதன் காரணமாகப் பல நுட்பமான விஷயங்களைத் தவற விடுகிறோம். அந்த நுட்பமான விஷயங்கள் பொருளியல்ரீதியாக நேரடியான பலனைத் தராதவையாக இருக்கலாம். ஆனால், அவைதான் வாழ்க்கையை அர்த்தமாக்குபவை. கதை கேட்பதும், கதை சொல்வதும், கதையை வாசிப்பதும் அப்படியான அர்த்தமுள்ள செயல்கள். அவற்றை மீட்டெடுப்பது மிகவும் அவசியமான ஒன்று.
- பாஸ்கர் சக்தி, ‘பூவரசம் வீடு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா. தொடர்புக்கு: bhaskarwriter@gmail.com