Last Updated : 26 Jan, 2022 07:50 PM

 

Published : 26 Jan 2022 07:50 PM
Last Updated : 26 Jan 2022 07:50 PM

ஆர்.முத்துக்கண்ணம்மாள் c/o விராலிமலை, சுப்பிரமணியசாமி! - சதிராட்ட நாயகியின் அசாதாரண கதை

படம்: எம்.மூர்த்தி

முத்துக்கண்ணம்மாளுக்கு வயது 84 ஆகிறது. மஞ்சள் பூசிய முகம், நெற்றி நிரப்பும் குங்குமப் பொட்டு, எடுப்பாக மிளிரும் இரண்டு மூக்குத்தி சகிதமாக புன்னகையுடன் காட்சியளிக்கிறார். உடல் ஒத்துழைக்காவிட்டாலும் கூட சதிராட்டம் ஆட எந்த நிமிடத்திலும் தயாராகவே இருக்கிறார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று (ஜன.25) அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுவெள்ளம் போல் ஊடக வெளிச்சம் பாய உற்சாகம் குறையாமல் பேட்டி கொடுத்துவரும் முத்துக்கண்ணம்மாள், தனது பொருளாதார நிலை மீது ஒளி பாய வேண்டும் என்பதை அத்தனைப் பேட்டிகளிலும் அடிநாதமாக ஒலிக்கச் செய்துள்ளார். அதனை அரசும், புரவலர்களும் பரிசீலிக்க வேண்டிய அத்தனை நியாயங்களும் அவருடைய பேச்சில் வெளிப்படுகிறது.

ஆர்.முத்துக்கண்ணம்மாள் c/o விராலிமலை சுப்பிரமணியசாமி: ஆர்.முத்துக்கண்ணம்மாள் c/o விராலிமலை சுப்பிரமணியசாமி, இப்படித்தான் இவருக்கு 7 வயதிலேயே அடையாளம் ஏற்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் கோயிலுக்கு என்று இளம்பெண்களை பொட்டுக்கட்டி விடும் நேர்த்திக்கடன் செய்யப்பட்டது. அப்படித்தான் முத்துக்கண்ணம்மாளுக்கு அவரது பெற்றோர் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 7 வயதில் விராலிமலை சுப்பிரமணியசுவாமிக்கு அவர் நேர்ந்து விடப்பட்டார். விராலி மலை கோயில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலின் 32 தேவரடியார்களில் முத்துக்கண்ணம்மாள் தான் இப்போது உயிருடன் இருக்கும் கடைசி சதிராட்டக் கலைஞர்.

என் பாதமும், நாவும் ஓய்வதில்லை... 7 வயதில் தொடங்கிய தனது பயணம் குறித்து முத்துக்கண்ணம்மாள் பேசுகையில், "என் அப்பாதான் எனது குரு. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் நடனப் பயிற்சிக்காக எழுந்திருப்பேன். எனக்கு அது என்றுமே இவ்வளவு சீக்கிரம் என்று தோன்றியதே இல்லை. நான் ஆடும்போது பாட்டையும் பாட வேண்டும் என்பதில் அப்பா மிகவும் கவனமாக இருப்பார். அதில் கொஞ்சம் பிசகினாலும் போதும் கோபித்துக் கொள்வார். அச்சு பிறழாமல் பாடி, ஆடுவேன். அதை ஆத்மார்த்தமாகச் செய்வேன். அப்போதெல்லாம் விராலிமலைக்கு தினமும் இரண்டு முறை ஏறி இறங்கி சாமியின் முன் பாடி ஆடுவேன். ஆனால் வயதாக ஆக அது முடியாமல் போய்விட்டது. சதிராட்டம் என்பது பரதநாட்டியத்தை ஒத்த கலையே. பரதம் தெரிந்திருந்தால் சதிராட்டம் பழகுவது எளிது. இன்றும் எனக்குப் பிறகு இந்த சதிராட்டம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காகக் கற்றுக் கொடுக்கிறேன். ஆனால், வயது காரணமாக குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை" எனக் கூறுகிறார்.

தேவரடியாரைக் கொண்டாடிய விராலிமலை.. இந்த வார்த்தையை ஒரு பெண்ணின் மாண்பைக் குறைக்க மட்டுமே சமூகம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், விராலிமலையில் இருந்த 32 தேவரடியார்களின் நிலைமை எப்படி இருந்தது என விவரிக்கிறார் முத்துக்கண்ணம்மாள். "என்னுடைய 7 வயதில் எனது வாழ்க்கை இதுதான் என்றனர். நான் அதை வாஞ்சையுடன் ஏற்றுக் கொண்டேன். எனக்கு நடனம்தான் எல்லாம் ஆகிப்போனது. புதுக்கோட்டை மகாராஜா ராஜகோபால தொண்டைமானின் கொடையில் நாங்கள் வாழ்ந்தோம்.

என்னுடன் சேர்த்து இங்கு 32 பேர். நாங்கள் கோயிலில் நடனமாடுவோம். வீடுகளில் சுப நிகழ்ச்சிகளில் ஆடுவோம். ஊர்ப் பெரியோர் எங்களுக்குப் பணமும், பரிசும், பட்டும் தருவார்கள். எங்களுக்கு முதல் கணவர் சுப்பிரமணியசுவாமி தான். நாங்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. நித்திய சுமங்கலியாக அறியப்படுகிறோம். ஆனால், வயது வந்தவுடன் எங்களுக்கான ஆண் துணையைத் தேடிக் கொண்டு அவர்களுக்கு இணையாக வாழும் உரிமை இருந்தது. எனக்கும் ஒருவர் அன்புக்கரம் நீட்டினார். ஆனால், என்னால் எந்தச் சூழலிலும் சதிராட்டத்தை நிறுத்த முடியாது. சம்மதமா என்றேன். சம்மதம் சொன்னார். அவருடன் வாழ்ந்தேன். விராலிமலையைப் பொறுத்தவரை எனக்கும் என்னுடன் இருந்த 31 பேருக்கும் பாலியல் தொல்லை இல்லை. நாங்கள் மரியாதையாக நடத்தப்பட்டோம். எங்களை யாரும் பழிக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் பிற பகுதிகளில் என்னைப் போன்றோரின் சமூக அந்தஸ்து எப்படி இருந்தது என்பது எனக்குத் தெரியாது.

மன்னர் மானியம் நிறுத்தப்படும் வரை எங்களின் வாழ்வு கோயிலைச் சார்ந்தே இருந்தது. கோயில் நிலத்தில் விளைவித்தோம். ஆனால் அது நிறுத்தப்பட்ட பின்னர் வாழ்க்கையின் சவால் தொடங்கியது. சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம், தேவதாசி முறையை ஒழிப்பதற்காக 1947-ல் நிறைவேற்றப்பட்டது.

கோயில்களில் இருந்த நடன மேடைகள் அப்புறப்படுத்தன. அப்போது எனக்கும் சற்று வயதாகியிருந்தது. ஆனால், எனக்கு நடனம் மட்டும்தான் தெரியும். அதை வைத்துக் கொண்டு நான் தமிழகம் முழுவதும் ஏன் கேரளத்திலும் சதிராட்டம் ஆடினேன். மாட்டு வண்டி கட்டியும், காரில் பயணம் செய்தும், ரயில் ஏறிச் சென்றும் சதிராட்டம் ஆடினேன். இடையில் எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஆனால், அதன்பின்னரும் நான் சதிராட்டம் ஆட நீண்ட பயணங்களை மேற்கொண்டேன். காலப்போக்கில் எங்குமே சதிராட்டத்திற்கான தேவையும், வரவேற்பும் இல்லாமல் போனது. எனக்கு ரூ.1500 அரசு மானியம் வருகிறது. அதில் நான் என்ன செய்துவிட முடியும். தானமாகவும், ஆசையாகவும் அப்போது வழங்கப்பட்ட பணமும், நகையும் சேர்த்து வைக்கவோ, சேமித்து வைக்கவோ மீந்து நிற்கவில்லை.

இன்று வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் இனிமையான அனுபவங்கள் இருந்தாலும், பொருள் இல்லாமை எல்லாத்தையும் சூன்யமாக்குகிறது. தேவதாசி முறையை ஒழித்தபோதே அரசு எங்களின் மறுவாழ்வை தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்திருக்க வேண்டும். வெறும் ரூ.1500 மானியம் எதைத்தான் மாற்றும். இன்று என் பிள்ளைகள் ஏதோ வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பொருளாதரத் தன்னிறைவுடன் இல்லை. அவர்களின் பொருளாதாரம் மேம்பட வேண்டும். என் காலத்திற்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும். அதற்கு அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையேனும் வேண்டும்" என்றார்.

சதிராட்டத்தைப் பற்றி பேசவும், இளைஞர்கள் மத்தியில் தேவதாசிகளின் வாழ்க்கையை எடுத்துச் சொல்லவும் சில கலை அமைப்புகளுடன் கைகோத்து இன்று பரவலாகப் பயணப்படுகிறார் முத்துக்கண்ணம்மாள்.

சிலை கண்ட முத்துக்கண்ணம்மாள்.. உயிரோடிருக்கும் ஒரே மற்றும் கடைசி தேவரடியாரான முத்து கண்ணாம்மாள், ஏழாம் தலைமுறை சதிர் கலைஞர். இக்கலையைக் காக்க பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்து வருவதை அங்கீகரித்துப் பாராட்டும் விதமாக கலைப் பள்ளியில் அவரது சிலை ஒன்றை மூத்த சிற்பி ஜி சந்திரசேகரன் நிறுவியுள்ளார். வாழும் காலத்தில் தனது சிலையைக் கண்ட முத்துக்கண்ணம்மாள். சமூகம் அவர் வாழ்க்கையின் மீது சுமத்திய சுமைக்கான நியாயமான அங்கீகாரத்தைப் பெறுவாராக.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x