'காசநோய் இல்லாத இந்தியா' 2025: சவால்களும் எதிர்பார்ப்புகளும்!

'காசநோய் இல்லாத இந்தியா' 2025: சவால்களும் எதிர்பார்ப்புகளும்!
Updated on
6 min read

2025-ல் இந்தியாவை காசநோய் இல்லாத தேசமாக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் இலக்கு. ஆனால், இந்த இலக்கை எட்டுவதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. அதற்கான பயணத்தில் சில தடைக்கற்கள் சறுக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன.

காசநோய் ஒழிப்பில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள சவால்கள் என்னவென்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

2020ஆம் ஆண்டுக்கான 'இந்திய காசநோய் அறிக்கை'யின்படி (National TB Report), நாடு முழுவதும் 17,19,40,182 பேருக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 52,273 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாட்டில், எத்தனை பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதனை, சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் முதல் உலக சுகாதார அமைப்பு வரை தெரியப்படுத்துவது டிபி நோட்டிபிகேஷன் எனப்படுகிறது.

அதன்படி, 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜனவரி முதல் பிப்ரவரி காலகட்டத்தில் 18,297, மார்ச் முதல் ஏப்ரலில் 10,251, மே முதல் டிசம்பரில் 41,753 பேர் காசநோயாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் மார்ச் முதல் ஏப்ரல் வரையில் இந்தியாவில் கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோய் கண்டறிந்து ரிப்போர்ட் செய்தல் 44% குறைந்துள்ளது. அதேவேளையில், கரோனா அலையில் இருந்து மீண்ட பின்னர் இது கணிசமாக அதிகரித்துள்ளது.

கரோனாவால் ஏற்பட்ட பின்னடைவு: காசநோய் ஒழிப்பில் கரோனா பெருந்தொற்று இந்திய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார் சென்னை தாம்பரம் சானட்டோரியம் கண்காணிப்பாளர் (Dr R Sridhar Superintendent Tambaram Sanatorium) மருத்துவர் ஆர்.ஸ்ரீதர்.

"2019 இறுதியில் பதிவான முதல் கரோனா தொற்று இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. 2020 மார்ச்சில் இந்தியாவில் முதன்முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன் பின்னர் மாநிலங்களில் தேவைக்கேற்ப ஊரடங்குகள் அமல்படுத்தப்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் காசநோயாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. காசநோய் ஒழிப்புப் படிநிலைகளில் மிகவும் முக்கியமானதே Early Screening எனப்படும் நோயை ஆரம்பநிலையில் கண்டறிதல். ஊரடங்கு காலத்தில் இந்த நோய் கண்டறிதலில் சிறு சறுக்கல் ஏற்பட்டது. இருப்பினும் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்கெனவே நோய் கண்டறிந்தவர்களுக்கு எந்த விதத்திலும் மருந்துகள் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

குறிப்பாக, கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் காசநோயாளிகளுக்கான மருந்தைக் கொண்டு சேர்ப்பதில் தமிழகம் முன்மாதிரியாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா முதல், இரண்டாவது அலைகளின்போது அனைத்து அரசு மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் காசநோய் அறிகுறியாக இருக்குமோ என்று அஞ்சியவர்கள்கூட காசநோய் மருத்துவமனைகளுக்கு வரத் தயங்கினர். காசநோய் மருத்துவமனைகளும் கோவிட் சிகிச்சை மையங்களாக இருந்ததால், காசநோய் பரிசோதனைக்காகச் சென்றுவிட்டு கரோனாவை வாங்கிவந்து விடுவோமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது. இதனாலும், நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது" என்று மருத்துவர் ஸ்ரீதர் கூறினார்.

மருத்துவர் ஸ்ரீதர்
மருத்துவர் ஸ்ரீதர்

தேவை போதிய விழிப்புணர்வு: தொடர்ந்து பேசிய மருத்துவர் ஸ்ரீதர், "காசநோய் ஒழிப்பில் இன்னொரு சவால், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமை. நேஷனல் ஹெல்த் மிஷன் மூலம் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்களுக்கு அதன் நோக்கம் புரிவதில்லை. காசநோய் ஏழைகளுக்கு, குறிப்பிட்ட சில தொழில் சார்ந்தவர்களுக்கே வரும் என்றளவிலேயே அவர்களின் புரிதல் இருக்கிறது. ஆனால், உலக நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்திலும், ‘ஹெச்ஐவி’ தொற்றாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் உள்ளதையும், இந்த இரண்டும் காசநோயை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை.

அதுமட்டுமல்லாது இங்கு புகைபிடிப்போரும், மது அருந்துவோரும் அதிகம். இந்தப் பட்டியலிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவில் இல்லை. இதனால், காசநோய் பரிசோதனைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைகிறது. ஆகையால் இப்போதெல்லாம் நாங்கள் மருத்துவமனைகளில் தீவிர சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனையும் செய்யுமாறு தூண்ட மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அந்த வகையில், காசநோய் ஸ்க்ரீனிங்குக்கு வருவோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கோவிட் -19 மற்றும் காசநோய் என்ற 'இருதிசை' (Bi Directional) பரிசோதனையை செயல்படுத்துமாறு மத்திய அரசு, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது. கரோனா காலகட்டத்தில், பை டைரக்‌ஷனல் ஸ்க்ரீனிங் என்ற முறையில் அத்தனை கோவிட் நோயாளிகளுக்கும் எக்ஸ் ரே, சிடி ஸ்கேனின்போது காசநோய்க்கான ஸ்க்ரீனிங்கும் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டால் அவர்களை காசநோயை உறுதிப்படுத்து சிபிநாட், ட்ரூநேட் போன்ற அடுத்தகட்டப் பரிசோதனைகளுக்கும் ஊக்குவித்துள்ளோம்" என்றும் கூறினார்.

இந்நிலையில், இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய் பரிசோதனை செய்து கொள்ளவேண்டியது அவசியம் என்று மத்திய அரசு (ஜன.18, 2022) வெளியிட்டுள்ள புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிசிஜி தடுப்பூசி வரவேண்டும், பெரியவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் திட்டம் வர வேண்டும், Preventive Therapy எனப்படும் காசநோய் பாதித்தோரின் குடும்பத்தில் உள்ளோரை ஸ்க்ரீனிங்குக்கு உட்படுத்தி அவர்களுக்கு நோய் வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை இன்னும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இவற்றைச் செயல்படுத்த கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. கூடுதல் நிதி என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், அதில் எனது எதிர்பார்ப்பை மட்டும் முன்வைக்கிறேன் என்று கூறினார்.

கேர் கிவ்வர்களை ஊக்கப்படுத்துவோம்! காசநோயாளிகள் 6 முதல் 9 மாதங்கள் வரை தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். அவ்வாறு இடையில் சிகிச்சையைக் கைவிடாமல் மருந்தைச் சாப்பிட்டாலே, நோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம். ஆனால், மருந்து உட்கொள்ள ஆரம்பித்த இரண்டு, மூன்று மாதங்களிலேயே அறிகுறிகள் குறைவதால் மருந்துகளை நிறுத்திவிடுகின்றனர். இதனால் நோய் அடுத்தகட்டமான மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசம் என்ற நிலைக்குச் செல்கிறது. இதனால், நோயாளிகள் அடுத்தகட்ட சிகிச்சைக்காகப் பொருளாதார ரீதியாக நிறைய இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது.

இந்தச் சவாலை எதிர்கொள்ள நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனக் களப் பணியாளர்களின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் சீரான இடைவெளியில் நோயாளிகளைக் கண்காணித்து, சிகிச்சைக்கு வராதவர்களை வீடு தேடிச் சென்று மீண்டும் சிகிச்சைக்கு வரவழைக்க வேண்டும். இப்போதும் இதைக் களப்பணியாளர்கள் செய்கின்றனர். கேர்கிவர்ஸ் எனப்படும் காசநோய் களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படுகிறது. முதல் 2 மாதங்கள் நோயாளிகள் சிகிச்சை முடித்தவுடன் 2000 ரூபாயும், அடுத்த 4 மாதங்கள் சிகிச்சை முடித்தவுடன் மீதமுள்ள ரூ.3000மும் வழங்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இது தவிர அரசு களப் பணியாளர்களைப் பொறுத்தவரையில் ஹெல்த் விசிட்டருக்கு ரூ.10000 + ஆண்டுக்கு 5% ஊதிய உயர்வு மற்றும் டிஏ ரூ.1500 வழங்கப்படுகிறது. காசநோய் பரிசோதனைக்கூட சூப்பர்வைஸருக்கு (Senior TB Laboratory Supervisor) மாதந்தோறும் மாதம் ரூ.15,000 ஊதியம் + பயணப்படி வழங்கப்படுகிறது. Stastical Asst பணியாளர்களுக்கு மாதம் ரூ.19,000, ஆண்டுக்கு 5% சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் விரைவில் இன்னும் கூடுதலாக 30% வரை சம்பள உயர்வு செயல்பாட்டுக்கு வரும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

முன்களப் பணியாளர்கள் என்போர் கரோனா வார்டுகளில் பணியாற்றுவோர் மட்டுமல்ல. உலகில் இன்றளவு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காசநோய் ஒழிப்புப் பணியாளர்களும் கூடுதல் கவனம் பெற வேண்டியவர்களே. களப் பணியாளர்களின் எதிர்பார்ப்பும் இதுதான். ஆனால், நம் இலக்கு 2025 என்று இருக்கும் நிலையில் களப்பணியாளர்கள் இன்னும் உத்வேகத்துடன் செயல்பட ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்.

ஊட்டச்சத்தில் கவனம் தேவை: காசநோய் ஏற்பட ஊட்டச்சத்துக் குறைபாடும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. காசநோய் சிகிச்சையில் உள்ளோருக்கு 2018ஆம் ஆண்டு முதல், மாதம் ரூ.500 என சிகிச்சை முடியும் வரை நோயாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. தேசிய சுகாதார திட்டம் (National Health Mission) இத்திட்டத்திற்கு நிக்‌ஷய் போஷான் யோஜனா (Nikshay Poshan Yojana) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நோயாளியின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்படுகிறது. ஆனால், அதிகரித்துவரும் விலைவாசியில் காசநோயாளிக்குத் தேவையான ஆரோக்கியம் தரும் உணவை ஒரு மாதம் முழுமைக்கும் ரூ.500 கொண்டு வாங்க முடியாது என்பதே நோயாளிகளின் வருத்தமாக உள்ளது. மேலும், வங்கிக் கணக்கில்லாத நோயாளிகளால் இந்தத் தொகையைப் பெறுவதிலும் சிக்கல் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரம் சர்வதேச டிபி ஹாட் ஸ்பாட் என அறியப்படுகிறது. அங்கு காசநோயாளிகளுக்கு மும்பை மாநகராட்சி சார்பில், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி கோதுமை, கடலை மாவு, புரத இணை உணவுகள், வெல்லம் ஆகியன வழங்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் Feed The Family, என்ற திட்டம் அமலில் உள்ளது. அதாவது, காசநோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் சேர்த்து உணவுப் பொருள் ரேஷனில் வழங்கும் திட்டம். காசநோய் உள்ளவர்களின் குடும்பத்தில் இருப்போர் நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதால், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது தடுப்பு முறையில் முக்கியமான நடைமுறையாக இருக்கும் என அம்மாநில காசநோய் தடுப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுபோன்ற திட்டத்தை நாடு தழுவிய திட்டமாக முன்னெடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்பது காசநோய் தடுப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள பல்வேறு என்ஜிஓக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், காசநோய் ஒழிப்பில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதால், தொற்று கண்டறிதல் தொடங்கி ஊட்டச்சத்தை உறுதி செய்வது வரையிலும் நிதியைத் திரட்டுவதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நம் இலக்கு 2025 என்று குறுகிய காலமாக இருக்கும் வேளையில், தனியார் பங்களிப்பு மிகமிக அவசியம் என காசநோய் ஒழிப்புச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளுறை காசம் எனும் பூதம்: உள்ளுறை காசம் எனும் பூதம் மீது கவனம் செலுத்தி செயல்பட்டால் மட்டுமே காசநோய் ஒழிப்பு சாத்தியம் எனக் கூறுகிறார் பொது மருத்துவர் கு.கணேசன். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவில் 33-40% மக்களுக்குக் காசநோய் தொற்று இருக்கிறது. குறிப்பாக, 5 வயதுக்கு உட்பட்ட மூன்றரை லட்சம் குழந்தைகளுக்குக் காசம் தொற்றியிருக்கிறது. ஆனால், அது அறிகுறிகள் இல்லாத தொற்றாக உடலில் மறைந்திருக்கிறது; காசநோயாக மாறுவதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது. அதை ‘உள்ளுறைக் காசம்’ (லேட்டன்ட் டிபி) என்கிறோம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இவர்களில் 10% பேருக்கு முழுமையான காசநோய் ஏற்பட்டுவிடும். அப்போது காசநோய்ப் பரவல் இன்னும் தீவிரமாகும். காசநோய் அகற்றும் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள இந்தப் புதிய சவாலை இந்தியா முனைப்புடன் எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இத்தனைக்கும் ‘டிஎஸ்டி’ (Tuberculin Skin Test) எனும் சாதாரணத் தோல் பரிசோதனையிலும், ‘ஐஜிஆர்ஏ’ (Interferon Gamma Release Assay) எனும் எளிதான ரத்தப் பரிசோதனையிலும் இந்தத் தொற்று இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். அரசு மருத்துவமனைகளில் இவை இலவசம். இதனை ஊக்குவிக்க வேண்டும். ஆசியாவில் இந்த வழிமுறையில் சிங்கப்பூரும் தைவானும் காசநோயைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றைத் தொடர்ந்து 44 ஆப்பிரிக்க நாடுகள் இம்மாதிரியான திட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்த வழிமுறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். அரசின் முனைப்புடன், மக்களின் விழிப்புணர்வும் சிகிச்சைக்கான ஒத்துழைப்பும் கூடினால் ‘காசநோய் இல்லாத இந்தியா’ எனும் இலக்கு கைகூடும்" என்றார்.

காசநோய் ஒழிப்பில் இலக்கு 2025 என்ற அருகில் இருக்கும் இச்சூழலில், சமூகப் பொருளாதார பிரச்சினைகள், மருத்துவக் களப் பணியாளர்களின் எதிர்பார்ப்புகள், ஊட்டச்சத்து கொடுக்கும் நெருக்கடி, அச்சுறுத்தும் உள்ளுறை காசம் என அனைத்தும் மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன. இந்தச் சவால்களைக் கலைந்தால் இலக்கை எட்டுவது சாத்தியமே. தனியார் பங்களிப்பையும் ஊக்குவித்துக் கொண்டால் நிச்சயம் காசநோய் ஒழிப்பின் சவால்களைச் சமாளிக்கலாம்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in