Published : 22 Nov 2021 03:05 am

Updated : 22 Nov 2021 06:46 am

 

Published : 22 Nov 2021 03:05 AM
Last Updated : 22 Nov 2021 06:46 AM

விவசாயிகள் போராட்டம் என்ன சொல்கின்றன இரு தரப்புகளும்?

farmers-struggle

இது விவசாயிகளின் வெற்றி!

வ. சேதுராமன், மாநிலக் கருத்தாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

நமது நாடு, நீண்ட கால ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் சுதந்திரம் அடைந்தது. அதன் தொடர்ச்சியாக எத்தனையோ தனிநபர்கள், குழுக்களின் அறவழிப் போராட்டங்கள். அவற்றின் தொடர்ச்சியாக விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டது.

விவசாயிகளின் போராட்டம், வரும் நவம்பர் 26 அன்று ஒரு ஆண்டை நிறைவுசெய்ய உள்ளது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் சார்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைச் சாலைகளில் போராட்டம் நடத்திவருகிறார்கள். உலக அளவில் மிகப் பெரிய மக்கள் திரளின் நீண்ட நாள் போராட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.

டெல்லி எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வாழ்விடமாக மாற்றப்பட்டு, வெயில், மழை, குளிர் காலங்களிலும் தொடர் போராட்டமாக நடைபெறுகிறது. போராட்டம் நடத்தும் சுமார் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்களுக்குள் ஒருங்கிணைத்துக்கொண்டதோடு, ஆதரவு கொடுக்கும் யாரும் தங்கள் அரசியல் அடையாளங்களோடு வரத் தடையும் விதித்தது. இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டக் களத்தில் மரணமடைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நாடு முழுவதும் எத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பது என்று அவ்வப்போது முடிவெடுத்து, அதை நாடு முழுவதிலும் செயல்படுத்தியது. தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற திமுக அரசு, இது தொடர்பாக 2,831 வழக்குகளைச் சமீபத்தில் தள்ளுபடிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 11 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் போராட்ட அமைப்புகள் மூன்று சட்டங்களும் முழுமையாக ரத்துசெய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து போராட்டம் நடத்திவருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாகவும், இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் நவம்பர் 29-ல் தொடங்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், சில அமைப்புகள் இந்த சட்டங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகே தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல உள்ளதாகவும் அதுவரை அமைதிப் போராட்டம் தொடரும் என்றும் போராட்ட அமைப்புகள் கூறிவிட்டன.

அதே நேரத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்துக்குக் குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்தவர்கள் இன்று வரை வைக்கும் கோரிக்கை குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டபூர்வ வடிவம் வேண்டும் என்பது. ஆகவே, ஒன்றிய அரசு அதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இடுபொருட்கள் (உரம், பூச்சிமருந்து) தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலையில் கிடைப்பது, தரமான விதைகள் மானிய விலையில் கிடைப்பது, பயிர் சாகுபடி முறைகளை மாற்றியமைப்பது (காரிப், ரபி போன்ற தேசிய அளவிளான சாகுபடி முறையை மாற்றி அந்தந்த மாநிலத்தில் உள்ள முறைகளையும் உள்ளடக்கி) அதன் மூலம் காப்பீடு மற்றும் கடன் வசதிகளை ஏற்படுத்துவது, இயன்ற வரை ஒன்றிய - மாநில அரசுகள் நேரடியாக விவசாயப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வது, பாசன மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்துவது, தடையற்ற மற்றும் இலவச மின்சாரத்தை உத்தரவாதப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலமே விவசாயமும் விவசாயிகளும் மேம்படுவது சாத்தியமாகும். ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மசோதாக்களைத் திரும்பப்பெறுவதோடு, போராட்டத்தில் மரணமடைந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை, தமிழ்நாடு அரசு செய்ததுபோல் அந்தந்த மாநிலங்கள் திரும்பப் பெறவும் அறிவுறுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்னதாக அவை தொடர்பான ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்துவது இன்றியமையாதது. அதுதான் அமைதிக்கு வழிவகுக்கும்.

எதிர்க்கட்சிகள் அரசியலாக்கிவிட்டன

என். தண்டபாணி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர்

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், பிரதமர் மோடி பின்வாங்கிவிட்டார் என்றெல்லாம் பேசிவருகின்றனர். உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில இடைத்தேர்தலுக்காக இந்த முடிவு என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தல் வெற்றி - தோல்விக்காக எந்த முடிவையும் பாஜக எடுத்ததில்லை. இனியும் எடுக்காது.

பொதுவாக, மக்களை ஈர்க்கும் அறிவிப்புகள், தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் அறிவிப்புகளைத்தான் ஆட்சித் தலைவர்கள் நேரடியாக மக்கள் முன்பு தோன்றி அறிவிப்பார்கள். ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் முடிவை, தானே நேரடியாக மக்களிடம் அறிவித்துள்ளார் மோடி. இதன் மூலம் தனது துணிச்சலை, உறுதியை மீண்டுமொருமுறை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் ஜெயந்தி நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பிரதமர். பிரதமர் மோடி விவசாயிகளின் துயரங்களை நேரில் அறிந்தவர்.

தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கை. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திவந்தன. அதன்படியே நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020’, ‘விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020’, ‘விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020’ ஆகிய 3 சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்தச் சட்டங்களின்படி இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி எந்த மாநிலத்துக்கும் எடுத்துச்சென்று, யாருக்கும் விற்கலாம் என்ற நிலை உருவானது. வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் மட்டுமே எதிர்ப்புகள் எழுந்தன. குறைந்தபட்ச ஆதரவு விலை இனி இருக்காது, மத்திய அரசு கொள்முதல் செய்யாது, மண்டி முறை இருக்காது என்றெல்லாம் எதிர்ப்பாளர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்தபோது, மத்திய அரசு அவற்றை அதிகாரபூர்வமாக மறுத்தது. வேளாண் சட்டங்களின் நோக்கம் அதுவல்ல என்றும் விளக்கம் அளித்தது.

போராட்டம் நடத்திய விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தது. ஆனால், விவசாயிகளின் போராட்டம் அரசியலாக்கப்பட்டுவிட்டதால் எந்த நியாயங்களும் எடுபடவில்லை. 2014-ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் லட்சியத்துடன் பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. விவசாயக் கடன் அட்டை, மண்வள அட்டை, பயிர்க் காப்பீடு, பயிர்க் கடன், ஊரக வளர்ச்சி, சொட்டுநீர்ப் பாசனத் திட்டம், விவசாயத் தொழிலாளிகளுக்கான ஓய்வூதியம், 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் போன்ற திட்டங்கள் அதில் முக்கியமானவை.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என்பது தெரிந்தும் அதனை பாஜக அரசை எதிர்ப்பதற்கான ஓர் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தத் தொடங்கின. வேளாண் சட்டங்களை அரசியலாக்கிவிட்டன. அதனால்தான் அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்குத் துடிக்கும் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காக பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
விவசாயிகள் போராட்டம்போராட்டம்விவசாயிகள்Farmers struggleFarmersஇரு தரப்புகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x