Last Updated : 07 Nov, 2021 03:06 AM

 

Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM

நம்மாழ்வார் எல்லோருக்கும் உரியவர்: மொழிபெயர்ப்பாளர் அர்ச்சனா வெங்கடேசன் பேட்டி

ஆண்டாளையும் நம்மாழ்வாரையும் அழகான ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றிருப்பவர் அர்ச்சனா வெங்கடேசன். ஏ.கே.ராமானுஜனின் தொடர்ச்சி. நம்மாழ்வாரின் ‘திருவாய்மொழி’ அர்ச்சனாவின் மொழிபெயர்ப்பில் ‘எண்ட்லெஸ் சாங்’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்புக்காக ‘லூஸியன் ஸ்ட்ரைக் ஏசியன் ட்ரான்ஸ்லேஷன் பிரைஸ்’ என்ற விருது அர்ச்சனாவுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) மதங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கும் ஒப்பிலக்கியத்துக்குமான இணைப் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனாவுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ் இலக்கியத்தின் பக்கம் எப்படி வந்தீர்கள்?

சென்னை பெசன்ட் நகரில் பிறந்து வளர்ந்தவள் நான். 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி என்பதால், சென்னையில் இருக்கும் வரை தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. பேசுவேன் அவ்வளவுதான். ஆனால், சிறு வயதில் ஆங்கில இலக்கியத்தின் மீது விருப்பம் அதிகம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) ஆங்கில இலக்கியம் படிக்கும்போது, என் அறைத்தோழி ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் வகுப்புக்கு என்னைக் கூப்பிட்டுச் சென்றார். அங்கே ஜார்ஜ் எல்.ஹார்ட் அகநானூற்றுப் பாடல் ஒன்றைப் பற்றிப் பாடம் எடுத்தார். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பாடம் நடத்துகிறாரே என்று உறைந்துபோனேன். வகுப்பு முடிந்ததும் அவரைச் சந்தித்துப் பேசியபோது அவர், “தமிழ்நாட்டிலிருந்து வருகிறாய்; சங்க இலக்கியம் தெரியவில்லையா?” என்று கடிந்துகொண்டு, கரும் பலகையில் ‘சங்க இலக்கியம்’ என்றும் ‘அகம்’, ‘புறம்’ என்றும் எழுதி ஒரு குட்டி உரையே நிகழ்த்திவிட்டார். அந்தச் சொற்களையெல்லாம் நான் அப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். அந்த நாள் எனக்குப் பெரும் பூகம்பம் நிகழ்ந்த நாள். பிறகு, பல்கலைக்கழக நூலகத்துக்குச் சென்று, ஜார்ஜ் எல்.ஹார்ட், ஏ.கே.ராமானுஜன் போன்றோர் செய்த பழந்தமிழ் இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களையெல்லாம் அள்ளிக்கொண்டு அறைக்குச் சென்றேன். மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை அந்தத் தருணத்தில்தான் உணர்ந்துகொண்டேன். நான் அப்போதே முடிவெடுத்தேன், “மேல்படிப்பு தமிழ் இலக்கியத்தில்தான்” என்று. தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதற்காக ஒரு ஆசிரியரை அமர்த்திக்கொண்டேன்.

ஆண்டாள், நாலாயிர திவ்யபிரபந்தத்துக்குள் எப்படி வந்துசேர்ந்தீர்கள்?

தமிழ் இலக்கியத்தைப் பற்றி கமில் சுவலெபில் எழுதிய நூலைப் படித்த பிறகுதான் 12 ஆழ்வார்களில் ஒரு பெண் ஆழ்வாராக ஆண்டாள் இருந்திருக்கிறார் என்றும் அவர் பாசுரங்கள் எழுதியிருக்கிறார் என்றும் தெரியவந்தது. என்னுடைய முனைவர் பட்டப் படிப்புக்கு முந்தைய ஆண்டு ஆண்டாளை மெதுவாகப் படித்து முடித்தேன்.

திருவாய்மொழியை மொழிபெயர்க்கப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதல்லவா! அந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஃப்ராங்க் க்ளூனி ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். “என்னுடன் சேர்ந்து ‘திருவாய்மொழி’யை மொழிபெயர்க்கிறீர்களா?” என்று 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னிடம் கேட்டார். திருவாய்மொழி போன்ற மிகவும் கடினமான ஒரு பிரதியை அந்த வயதில் மொழிபெயர்க்க எடுத்துக்கொள்வது முட்டாள்தனம் என்று நினைத்தேன். ஆனால், ஃப்ராங்க் மாதிரி ஒருத்தருடன் இணைந்து பணிபுரிவது என்பது பெரிய விஷயம் என்பதால், நான் ஒப்புக்கொண்டேன். அவர் பணிபுரியும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கும் நான் பணிபுரியும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கும் இடையே கிட்டத்தட்ட 4,900 கிமீ தொலைவு. ஜூம் செயலியெல்லாம் இல்லாத அக்காலத்தில் சில முறை சந்தித்து இருவரும் சேர்ந்து முதல் 60 பாசுரங்களை மொழிபெயர்த்தோம். அவர் தனியாக முழுவதும் மொழிபெயர்த்துவிட்டார். நான் ஒவ்வொன்றாக மிகவும் மெதுவாக மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாளைக்கு ஒரு பாசுரத்தை மட்டுமே என்னால் மொழிபெயர்க்க முடிந்தது. அதிகபட்சம் இரண்டு பாசுரங்கள். தினமும் எழுந்ததும் காலையில் ஒரு பாசுரத்தை மொழிபெயர்ப்பேன். இதற்கிடையில் ஃப்ராங்குக்கு வேறு பணிகள் வந்ததால் அவர் அதில் ஈடுபட ஆரம்பித்தார். “மொழிபெயர்த்து முடித்ததும் நீங்களே தனியாக வெளியிட்டுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். அப்படித்தான் ‘திருவாய்மொழி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.

‘திருவாய்மொழி’க்கு எத்தனையோ உரைகள். உங்கள் மொழிபெயர்ப்புக்கு எப்படிப் பொருள் வரையறை செய்துகொண்டீர்கள்?

உரைகளைத் துணைக்கு வைத்துக்கொண்டேன். ஆனால், பொருள் வரையறையில் எனது மதிப்பீட்டையே இறுதியாகக் கொண்டேன். உரைகள் வைணவக் கருத்தோடுதான் இருக்கும். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், தென்கலை-வடகலை போன்ற பார்வைக் கோணத்தில்தான் உரைகள் எழுதுவார்கள். ஆனால், நம்மாழ்வார் இயற்றியவை பக்திப் பாடல்கள்தான். அவற்றில் நாம் விசிஷ்டாத்வைதத்தைக் காணலாம், அத்வைதத்தைக் காணலாம், துவைதத்தைக்கூடக் காணலாம். அது அவரவர் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது. ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்குக் கவிதைதான் முக்கியம். அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில், மொழிபெயர்ப்பு என்பது விளக்கம் தருவது இல்லை என்றுதான் நான் எப்போதும் சொல்வேன். என்னுடைய வேலை என்பது தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கொண்டுசெல்வது மட்டும்தான். தமிழ் கஷ்டமாக இருந்தால் ஆங்கிலமும் கஷ்டமாக இருக்க வேண்டும். தமிழ்ப் பாசுரம் பூடகமாக இருந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் அதே பூடகம் இருக்க வேண்டும்.

நம்மாழ்வார் முழுக்க இந்தியத் தொன்மங்களில் ஊறியவர். அவரை ஆங்கில வாசகர் எப்படி எதிர்கொள்வார்?

மகத்தான கவிதை என்பது அதன் கலாச்சாரப் பின்புலத்தையெல்லாம் தாண்டியும் மகத்தான கவிதையாக விளங்குகிறது என்றே நினைக்கிறேன்.

தொடக்கக் காலத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய (inclusive) தன்மையை வைஷ்ணவம் கொண்டிருந்தது. ஆழ்வார்களில் பல சாதிகளைச் சேர்ந்தவர்களும் உண்டு. ராமானுஜர் காலம் வரை இந்த உள்ளடக்கும் தன்மை நீடித்தது. போகப் போக அது மற்ற எல்லோரையும் விலக்குவதாக (exclusive) ஆகிவிட்டதுபோல் தோன்றுகிறதே?

தோன்றுகிறதெல்லாம் இல்லை. நீங்கள் சொல்வது 100% உண்மை. நம்மாழ்வார், ஆண்டாள் எல்லாம் எல்லோருக்கும் உரியவர்கள். இவர்களின் பாசுரங்களை ஆண்கள், பெண்கள், பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள், பட்டியலினத்தவர்கள் என்று எல்லோரும் படிக்க வேண்டும். ஆனால், ஆழ்வார்களைப் பஞ்சில் பொதிந்துவைத்துக் காப்பாற்றுவதுபோல் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். யாரிடமிருந்து காப்பாற்றுகிறீர்கள்? ‘திராவிட வேதம்’ என்ற பெயர் சூட்டப்பட்டதால்தான், அதாவது ‘வேதம்’ என்ற பெயர் சூட்டப்பட்டதால்தான், சம்ஸ்கிருத வேதத்தைப் போல நாலாயிர திவ்யபிரபந்தத்துக்கும் சடங்குத் தன்மை ஏற்பட்டு, அதைப் போலவே குறிப்பிட்ட வகுப்பினருக்கு உரியதாக ஆகிவிட்டது. நாலாயிர திவ்யபிரபந்தம் முதன்மையாகக் கவிதையாகப் பார்க்கப்பட வேண்டும்.

திருவாய்மொழியை அத்யயனம் செய்யும் அத்யயனோத்சவம் பற்றிக் கூறுங்களேன்…

ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி, நாங்குநேரி, நவதிருப்பதி போன்ற பல இடங்களில் அத்யயனோத்சவத்தைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு பிரமாதமான உற்சவம். முதல் பத்து நாட்களில் – அதாவது பகல் பத்தின்போது – பெருமாளுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் சாத்துவார்கள். சில கோயில்களில் எந்த ஆழ்வாரின் பாசுரங்கள் சேவிக்கப்படுகிறதோ அந்த ஆழ்வாரின் திருக்கோலத்தை அல்லது அந்த ஆழ்வாரின் பாசுரங்களில் இடம்பெறும் பெருமாளுடைய அவதாரத்தின் திருக்கோலத்தைப் பெருமாளுக்குச் சாத்துவார்கள். ஆண்டாள் பாசுரங்கள் சேவிக்கப்படும் நாளில் பெருமாளுக்கு ஆண்டாளின் திருக்கோலத்தைப் பூட்டுவார்கள். பெரியாழ்வார் பாசுரங்கள் சேவிக்கப்படும் நாளில் பெருமாளுக்குக் கண்ணன் திருக்கோலம். வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு வைகுண்ட வாசல் திறப்பதை, அவ்வளவு பெரிய கூட்டத்துடன் பார்ப்பது உண்மையிலேயே பெரிய அனுபவம்தான். பகல் பத்து முடிப்பது பெரிய திருமொழி முடித்து திருமங்கையாழ்வாரின் மோட்சத்துடன். இராப் பத்து முடிப்பது திருவாய்மொழி முடித்துவிட்டு நம்மாழ்வாரின் மோட்சத்துடன். அது ரொம்பவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதைப் பார்க்கும்போது நிறைய பேர் அழுவார்கள். நானே அழுதிருக்கிறேன். இராப் பத்து முடிந்த மறுநாள் அதாவது, அத்யயனோத்சவத்தின் 21-ம் நாள் ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி ஆகிய ஊர்களில் மட்டும் வீடு விடை என்ற உற்சவம் நடக்கும். ’எனக்கு மோட்சம் வேண்டாம். நான் திரும்பி வர வேண்டும். எனக்கு வைகுண்டம் வேண்டாம். பூலோகத்துக்கு வந்துவிடுகிறேன்’ என்று ஆழ்வார்கள் சொல்லும் உற்சவம் அது. ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும்.

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி நிறுவிய ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா’வின் ‘கம்பராமாயண மொழிபெயர்ப்புத் திட்ட’த்தில் இயக்குநராக இருக்கிறீர்கள் அல்லவா?

கம்பரை நான் மொழிபெயர்ப்பேன் என்று கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை. தொடக்கத்தில் என்னை ‘சுந்தர காண்டம்’ மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார்கள். ‘திருவாய்மொழி’யை முடிக்கும் வரை வேறெதையும் என்னால் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் அந்த மொழிபெயர்ப்புக் குழுவில் இருப்பவர்கள் சிலர் மரணம், ஒருவர் விலகல் என்று சில தடங்கல்கள். இந்தத் திட்டத்துக்கான அணி தற்போது மறுஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது ‘கம்ப ராமாயண’த்தை மொழிபெயர்க்க இந்த அணியில் ஏழு பேர் இருக்கிறோம். டேவிட் ஷுல்மன் அயோத்தியா காண்டம் மொழிபெயர்க்கிறார். நான் சுந்தர காண்டம். 2024-ல் ‘பால காண்டம்’ வெளிவரும் என்று நம்புகிறோம். மற்ற காண்டங்கள் அடுத்தடுத்து வெளிவரும்.

நவீனத் தமிழ் இலக்கியம் படிக்கிறீர்களா?

தமிழில் பெண்களின் படைப்புகள் கொஞ்சம் படித்திருக்கிறேன். அவர்களில் குட்டி ரேவதி, பாமா ஆகியோரின் படைப்புகள் எனக்குப் பிடிக்கும்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

*****

எண்ட்லெஸ் சாங் - திருவாய்மொழி

நம்மாழ்வார்

ஆங்கிலத்தில்: அர்ச்சனா வெங்கடேசன்

பெங்குயின் புக்ஸ்

விலை: ரூ.599

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x