Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM

பாடத்திட்டத்தில் வேளாண் சுற்றுலா

சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராமா ராவ், நாம் உணவை எப்படிப் பெறுகிறோம் என்பதைப் பள்ளிகளில் மாணவர்களிடத்தில் கற்றுக்கொடுப்பதை நடைமுறைப்படுத்த சில ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டிருந்தார். அதற்குப் பலரும் பல விதமான யோசனைகளை முன்வைத்தனர். முக்கியமாக, மாணவர்களின் பெற்றோர் சிலர் இதனை வரவேற்று நடைமுறைப்படுத்தக் கேட்டிருந்தார்கள்.

ஆம், இன்றும் நெல் மரத்தில்தான் விளைகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும் சில மாணவர்களிடத்தில் வேளாண் கல்வியை, அதன் அனுபவத்தை நாற்று நடுவதிலிருந்து வளர்ந்த நெல்மணிகளுடன் உறவாடுவது வரை எடுத்துச் செல்ல ஆகச் சிறந்த வழி வேளாண்மைச் சுற்றுலாதான்.

அதென்ன, வேளாண்மைச் சுற்றுலா? உலகச் சுற்றுலா நிறுவனம், வேளாண் சுற்றுலாவை ‘வேளாண் பண்ணையில் சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைத்து, அவர்களுக்கு உணவளித்து, வேளாண் பணிகளில் ஈடுபட வைத்து, அதனை அறியச் செய்வதே’ என்று விளக்கியுள்ளது. இதுபோக வேளாண் சுற்றுலா என்பது, வேளாண் அறுவடையைக் கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்த பழங்கள், காய்கறிகளைத் தேவையான அளவில் சுற்றுலாப் பயணிகளே அறுவடை செய்வது, பண்ணைக் குட்டைகளில் மீன் பிடிப்பது, ஊரக வேளாண் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புறக் கைவினைக் கலைஞர்களிடம் பொருட்கள் வாங்குவது, மாட்டு வண்டியில் சவாரி செய்வது, முக்கியமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த செய்முறை வகுப்புகளை அனுபவப் பாடங்களாகக் கற்றுக்கொடுக்க வைப்பது எனப் பலவற்றையும் கொண்டுள்ளது.

வேளாண்மைச் சுற்றுலாவில் இருக்கும் சுவாரசியமே எதனையும் ரசனையுடன் கண்டுணரும் தருணம்தான். என்னதான் ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை உட்கார வைத்து மரம், செடி, கொடி வகைகள் என்றும் மா, பலா, வாழைதான் முக்கனிகள் என்று உரக்கக் கூறிப் பாடம் நடத்தினாலும் மாணவர்களை வேளாண் பண்ணைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கைப்பட பழங்களை ரசித்து அறுவடை செய்து, அவற்றை அவர்களை ருசிக்க வைத்துப் பாருங்கள்... அதன் மூலம் அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் அலாதியானது.

இன்றும் சில இடங்களில் நகரவாசிகளின் பிள்ளைகளின் கால்தடம் வயல் மண்ணில் படாமலேயே இருந்துவருகிறது. அதற்கு நவீனமயமான வாழ்க்கை, பெற்றோரின் பணிகள் என்று எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. என்றாலும், மண்ணின் வாசத்தைப் பிள்ளைகள் நுகரும்படிச் செய்யுங்கள், செம்மண் புழுதியில் விளையாடச் சொல்லுங்கள், வயற்காட்டுச் சேற்றில் கால் வைக்கச் சொல்லுங்கள், வளர்ந்து நிற்கும் தோட்டத்துப் பயிர்களை நலம் விசாரிக்கச் சொல்லுங்கள், பூவில் தேன் எடுக்கும் தேனீக்களை அடையாளம் காட்டுங்கள், பனையோலை நுனியில் கலைநயத்துடன் கூடு கட்டும் தூக்கணாங்குருவியைக் காட்டுங்கள், மரங்களில் காய்த்துக் குலுங்கும் கனிகளை எட்டிப் பிடித்துப் பறிக்கச் சொல்லுங்கள், வாய்க்கால் நீரில் முகம் கழுவச் சொல்லுங்கள், மண்வெட்டியில் மண்ணெடுக்க வையுங்கள், துள்ளித் திரியும் ஆட்டுக் குட்டியுடன் கொஞ்சி விளையாடச் சொல்லுங்கள், ஏரியில் ஆர்ப்பரித்து நீந்திச் செல்லும் பறவையைக் காட்டுங்கள், மாட்டு வண்டியில் அவர்களைக் கூட்டிக்கொண்டு சவாரி செல்லுங்கள். இவற்றோடு, விவசாயிகளின் அனுபவங்களையும் கேட்டுவரச் சொல்லுங்கள். இவையனைத்தையும் பெற்றோர்களால் கூட்டிச்சென்று சொல்லித்தர முடியாவிட்டாலும், வேளாண் சுற்றுலா மூலம் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த முடியும்.

அப்படிப்பட்ட ஒன்றை நடைமுறைப்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சியில் சில இளைஞர்கள் ஒன்றுகூடி, பள்ளி மாணவர்களிடத்தில் வேளாண்மையைச் செய்முறை அனுபவத்தின் வாயிலாக எடுத்துச் செல்லும் பணியைச் செய்துவருகிறார்கள். இதுபோன்ற பணிகளே பயிர்த்தொழில் பழகுவதன் விருப்பத்தை எதிர்வரும் மாணவர் தலைமுறையிடம் எடுத்துச் செல்லும்.

இவற்றையெல்லாம் பள்ளிகளில் சொல்லித்தர வேண்டிய அவசியம் என்ன என்று பலருக்கும் தோன்றலாம். பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததா? நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததே என்று கூற வேண்டும். தன்னுடைய தட்டில் இடப்படும் உணவு எப்படி உற்பத்தியாகிறது, அதனை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பதையெல்லாம் வெறும் புத்தகப் பாடத்துடன் நின்றுவிடாமல், அதனைச் செய்முறைப் பாடத்துடன் விவசாயிகளைக் கொண்டு மாணவர்களிடத்தில் கலந்துரையாடச் செய்தல் வேண்டும்.

அந்தக் கலந்துரையாடல் என்பது விவசாயிகளை வெறுமனே உற்பத்திக் கேந்திரமாக மட்டுமே பார்ப்பதாக இருக்கக் கூடாது. ஒடுங்கிப்போன முகமும் வாடி நிற்கும் தோற்றமும் கொண்டவர்கள் விவசாயிகள் என்கிற எண்ணங்களை உடைத்து, விவசாயி என்பவர் வெளியுலகைக் கற்றுத்தெரிந்தவர், மேன்மைமிகு உழைப்புக்குச் சொந்தக்காரர், தனது தேவைகளைத் தயங்காமல் அறிவியலர்கள் நிறைந்த சபையில் கேட்கும் மாண்பு கொண்டவர்கள் விவசாயிகள் என்பனவற்றை மாணவர்களின் மனதில் பதிய வைக்கும். இந்த அனுபவங்கள் மூலம் பின்னாளில் பல மாணவர்கள் வேளாண் அறிவியலர்களாக உருவாக வாய்ப்பிருக்கிறது.

எனவே, இந்தக் காரணங்களைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பாடத்தில் வேளாண்மையைச் சேர்க்க வேண்டும். அதனை வழிநடத்திச் செல்ல அனுபவ விவசாயிகளை அந்தந்தப் பள்ளிகளே கண்டறிய வேண்டும். பண்ணையைப் பார்வையிட்டு, அங்குள்ள சிறப்பம்சங்களைக் கண்டுணர்வதற்கு உண்டான தொகையைப் பள்ளிகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வேளாண் சுற்றுலா மூலம் அவ்வப்போது வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கும், விவசாயக் கண்காட்சிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும், இறுதியாக, வேளாண் சுற்றுலா மூலம் அறிந்துகொண்டதை எடுத்துக்கூறும் வகையில், பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மாதிரித் தோட்டம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே, ஒவ்வொரு தலைமுறையும் விவசாயத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கும் காலத்தில், இது ஒரு நல்ல முன்னெடுப்பாக இருக்கும்.

- செ.சரத், வேளாண் ஆராய்ச்சியாளர். தொடர்புக்கு: saraths1995@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x