கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத தமிழகம்: சில முக்கிய ஆலோசனைகள்

கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத தமிழகம்: சில முக்கிய ஆலோசனைகள்
Updated on
5 min read

கடந்த மே மாதம் 31ஆம் தேதி, தேசிய மனித உரிமை ஆணையம் பெருந்தொற்றுக் காலத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம்காண, விடுவிக்க, மறுவாழ்வு மற்றும் திருப்பி அனுப்புதல் போன்ற செயல்களைச் செய்வதற்காக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.

இதற்கு முன்பாக கடந்த டிசம்பர் 2020-ல், இதே போல் ஒரு விரிவான வழிகாட்டுதலை எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருந்தது. தற்போது இரண்டாவது அலையில் ஏற்பட்ட சவால்களையும், தாக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது.

தடுப்பு (Prevention)

ஊராட்சி மன்ற அளவில், கிராமத்தில் வசிப்பவர்களின் பெயர் மற்றும் வேறு நகரங்களுக்கு வேலைக்காகப் புலம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் குறித்த பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். இந்தப் பதிவேட்டில் தொழிலாளர்கள், இடைத்தரகர்கள், எங்கு பணிபுரிகிறார்கள் போன்ற விவரங்கள் பதியப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து, தொழிலாளர்கள் கடத்தப்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உணர் திறனை மேம்படுத்தி, பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சோதனைச் சாவடிகளில் மக்களின் சந்தேகமான நடமாட்டங்களைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

மாநில அரசுகள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தினக்கூலி மற்றும் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் போதிய நிதி ஒதுக்க வேண்டும். அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பு உதவிகளை செய்வதன் மூலமாக, கொத்தடிமைத் தொழிலுக்காகக் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்.

மாநில அரசுகள், தொழிலாளர் துறையின் மூலமாக தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்தி வேலைக்காக மக்கள் மொத்தமாக நகரங்களுக்குப் புலம் பெயர்வதைத் தவிர்க்க வேண்டும். இது அந்த மக்கள் சொந்த ஊரிலேயே தங்கி வேலை பார்க்கவும் கொத்தடிமை முறைக்குச் செல்வதையும் தடுக்க உதவும். மாவட்ட நிர்வாகம் தொழிலாளர் பிரச்சினைகள், சட்டவிரோதப் புலம்பெயர்வைத் தடுக்க உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

இனம் காணுதல் (Identification)

ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத்தின் எல்லைக்குள் இருக்கக்கூடிய பணி இடங்களில் குழந்தை அல்லது கொத்தடிமைத் தொழிலாளர் இருப்பதைக் கண்டறிந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து புகார்கள் ஏதும் பெற்றிருந்தாலோ, உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கண்காணிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கொத்தடிமைத் தொழில்முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை (Vigilance Committee) செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் என்று வரையறுக்கப்பட்டு இருக்கக்கூடிய விஷயங்கள் குறித்து இந்தக் குழு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழு செங்கல் சூளைகள் / கம்பெனிகள் மற்றும் இதர பணித்தளங்களில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையும் / சூழலும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மாதம் இரண்டு முறை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

மீட்பு

மாவட்ட ஆட்சித் தலைவர், கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்த புகார்கள் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும். அப்படி கொத்தடிமை தொழில்முறை இருப்பதாக விசாரணையில் தெரியவந்தால், தேசிய மனித உரிமை ஆணையம் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மீட்புக்காக கொடுத்துள்ள வழிமுறைகளை அல்லது ஒன்றிய அல்லது மாநில அரசுகளின் நிலையான இயக்க நடைமுறைகளை (Standard Operating Proceedures) பின்பற்ற வேண்டும்.

மீட்பு நடவடிக்கைகள் அல்லது பணியிடத்தில் விசாரணைக்கு செல்லும் முன்பாக மீட்புக் குழுவினருக்கு, கோவிட்-19 தொற்று தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்த பயிற்சி மற்றும் குழு உறுப்பினர்களுக்கு வெப்பநிலைப் பரிசோதனையும் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். மீட்கச் செல்லும் குழு உறுப்பினர்கள் யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் குழுவிற்கு முகக் கவசங்கள் மற்றும் சானிடைசர் கொடுக்கப்பட வேண்டும்; போதிய இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது கோட்டாட்சியர், அவர்களுக்கு அடிப்படையான உடல் நலப் பரிசோதனைகளைச் செய்து தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மேலும் போதிய இடைவெளி பின்பற்றுவது, மூச்சுப்பயிற்சி, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது குறித்த அடிப்படை விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ஏதாவது ஒரு தொழிலாளர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பார் என சந்தேகம் இருக்கும் எனில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவ நிலையங்களில் இலவசமாகப் பரிசோதனை செய்யவும், சிகிச்சை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது கோட்டாட்சியர், ஒன்றிய அல்லது மாநில அரசுகளின் நிலையான இயக்க நடைமுறைகளின்படி, கொத்தடிமை சூழல் இருந்ததற்கான ஆதாரங்களை விசாரித்து, சரிபார்த்துச் சேகரிக்க வேண்டும். அத்துடன் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சம்பள நிலுவைத் தொகை உடனடியாகத் தாமதமின்றி தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது அவர்கள் மீண்டும் கொத்தடிமை தொழில் முறைக்குச் செல்வதைத் தடுக்க உதவிகரமாக இருக்கும். மீட்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர்களுக்கு விடுவிப்புச் சான்றிதழ் (Release Certificate) வழங்கப்படவேண்டும். அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால் போதிய போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து தரவேண்டும்.

மறுவாழ்வு மற்றும் திருப்பி அனுப்புதல் (Rehabilitation and Repatriation)

மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு, மாவட்டக் கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு நிதியிலிருந்து 20,000 ரூபாய் உதவித்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம், தற்போதுள்ள பெருந்தொற்று தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் பண உதவிக்கும் மற்ற உதவிகளுக்கும் / திட்டங்களுக்கும் போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் தொடங்கவும், அடையாள அட்டை பெறுவதற்கும், சுகாதார சேவைகளைப் பெறுவதற்கும், வேலைவாய்ப்புத் திட்டங்களோடு இணைப்பதற்கும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் / கொத்தடிமைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பாதுகாப்பான வசதியை மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களுக்கும் உடல் நலப் பரிசோதனை, மனநல ஆலோசனை, கல்வி இவை அனைத்தும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய மறுவாழ்வு செயல்பாடுகளில் உள்ளடக்கப்பட்டு இருக்கவேண்டும். மாவட்ட நிர்வாகம் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய பாதுகாப்பான போக்குவரத்து வசதிக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடைய பயணம் அரசு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி இருக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது கோட்டாட்சியர் அல்லது நியமிக்கப்பட்ட அலுவலர், மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை சம்பந்தப்பட்ட காவல் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து விரைவாகச் செய்ய வேண்டும். பாதுகாப்பாக அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும். தேவைப்பட்டால், மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கான வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட வேண்டும்.

சட்ட உதவி (Legal Aid)

மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது கோட்டாட்சியர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் 1976-ன் படி, மீட்கப்பட்டவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் முன்பு, குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் அவர்களுடைய வாக்குமூலத்தை விரைவாகப் பதிவு செய்ய வேண்டும். பதிவின்போது அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில், பயணத்தில் இருக்கக்கூடிய ஆபத்தை உணர்ந்துகொண்டு, காவல் அலுவலர்கள் மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக வாக்குமூலங்களைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்கை நடத்த வேண்டும். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிய பின்பு, நீதித்துறை நடுவர்கள் அழைப்பாணை அனுப்பியிருந்தால் போதிய பாதுகாப்பு மற்றும் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். அரசுத் தரப்பு வழக்கறிஞர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை, கொத்தடிமைத் தொழிலாளர் பிரச்சனைகள், விரைவாக வழக்கை நடத்துதல், நீதியைப் பெற்றுத் தருதல் போன்றவை குறித்து மெய்நிகர் பயிற்சி கொடுக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் அந்த மாவட்டத்திலுள்ள மாநில அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்குச் சட்ட அறிவு மெய்நிகர் சந்திப்பின் மூலமாக ஆலோசனை வழங்குவது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும். மேற்சொன்ன விஷயங்களை மாவட்ட நிர்வாகமும் மாநில நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, தொழிலாளர்கள் கவுரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த வழிகாட்டுதலை நடவடிக்கைக்காக அனுப்ப வேண்டும். இதைத் தவிர ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குப் பல்வேறு பரிந்துரைகளையும் செய்துள்ளது.

இந்த வழிகாட்டுதல் உச்ச நீதிமன்றம் கொடுத்த அறிவுறுத்தலின் பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு வழிகாட்டுதல்களும் நிலையான இயக்க நடைமுறைகளும் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. குறைந்தபட்சமாக இது மாநில அளவிலான அலுவலர்களுடன் கூட பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்பதுதான் எதார்த்தம். உண்மையிலேயே கொத்தடிமைத் தொழிலாளர்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளை உத்தரவாதம் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் விரும்பினால் இதுபோன்று வழிகாட்டுதல்களை அனுப்புவதுடன் தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், தொடர்ச்சியாக அதைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பரிந்துரைகள்

கொத்தடிமைத் தொழிலாளர்கள் மத்திய துறை திட்டம் 2016-ன் கீழ் (Central Sector Scheme on Bonded Labour 2016), தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே மறுவாழ்வு நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் என்ற நிலை இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் வழக்கு முடிவதற்கு பல வருடங்கள் ஆகும். இந்தச் சூழலில் மறுவாழ்வுக்கான பணம் கிடைக்காமல் மீண்டும் அவர்கள் கொத்தடிமை சூழலுக்கு செல்லும் சூழலே நிலவி வருகிறது என்பது வேதனையான விஷயம்.

இந்தத் திட்டம் கொத்தடிமைத் தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்டவர்களின் உரிமையைப் பாதுகாப்பதாக இல்லை. இதுகுறித்துத் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தேசிய மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு, மறுவாழ்வு நிவாரணத் தொகை வழங்குவதை, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன் இணைக்கக் கூடாது என்று கடிதம் அனுப்பியது.

அதற்கும் ஒன்றிய அரசு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆகவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு நிவாரணத் தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழிகாட்டுதலின் நகல்கள் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு (State Legal Services Authority) மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. இதை அவர்களுக்கு அனுப்பி இந்த வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டங்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கொத்தடிமைத் தொழில் முறையை ஒழிக்கக் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. தற்போதுள்ள மாநில அரசு மிகவும் முனைப்புடன் நம்பிக்கை தரும் வண்ணம் செயல்படுவது மிகவும் சாதகமான அம்சமாக இருக்கிறது. இந்த சூழலில் இந்த வழிகாட்டுதல்களை அனைத்து அலுவலர்களுக்கும் -கிராம அளவிலான கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் உட்பட அனைவருக்கும் அனுப்பி மாவட்ட அளவில் மெய்நிகர் பயிற்சிகளைத் தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டும்.

பல கோட்டாட்சியர்களுக்கு நிலையான இயக்க செயல்முறைகள் குறித்த புரிதல் இல்லை. ஆகவே அவர்களுக்கு உரிய பயிற்சிகளைக் கொடுக்க வேண்டியது அவசியம். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர்களுக்கு (Para Legal Volunteers) இது குறித்த பயிற்சிகளை வழங்க வேண்டும். தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட அளவில் கொத்தடிமைத் தொழில்முறை உள்ள பகுதிகளைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொத்தடிமைத் தொழிலாளர்கள் மத்திய துறை திட்டத்தின் கீழ், கொத்தடிமைத் தொழிலாளர் கணக்கெடுப்புக்கு ஒரு மாவட்டத்திற்கு ரூபாய் 4,50,000 மற்றும் கொத்தடிமை முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு மாநிலத்திற்கு வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை முழுமையாகத் தமிழக அரசு பயன்படுத்தி கணக்கெடுப்பை நடத்தி கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

“எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்”

கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும் என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்.

ப.இளவழகன்,

சமூக செயற்பாட்டாளர் ilavazhagan2020@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in