Published : 11 May 2021 03:11 am

Updated : 11 May 2021 04:33 am

 

Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 04:33 AM

கட்சி எடுத்த முடிவுகளே தோல்விக்குக் காரணம்!- புகழேந்தி பேட்டி

pugazhendhi-interview

ஆட்சியை இழந்தாலும் 66 இடங்களில் அதிமுக வென்றதன் மூலம் அக்கட்சிக்குக் கௌரவமான இடத்தைப் பெற்றுத்தந்திருப்பதாக முன்னாள் முதல்வர் பழனிசாமியைப் பலரும் பாராட்டு கிறார்கள். அதே நேரம், “அவருடைய எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவுகளால்தான் அதிமுக ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது. கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டிருந்தால் இம்முறையும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கலாம்” என்ற அதிருப்திக் குரல்களும் அதிமுகவுக்குள் கேட்கின்றன. இதையெல்லாம் அதிமுகவின் இரட்டைத் தலைமை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு வி.புகழேந்தியிடம் பேசினோம்.

அதிமுக ஆட்சியை இழக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?


ஆட்சியும் அதிகாரமும் ஜனநாயகத்தில் யாருக்கும் நிரந்தரம் அல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதை நாம் பணிவோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே சமயத்தில், 2016 தேர்தலில் அம்மா செயல்பட்டதுபோல இந்த முறையும் நாம் இன்னும் கொஞ்சம் சாணக்கியத்தனமாகச் செயல்பட்டிருந்தால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்க மாட்டோம். ‘அம்மாவின் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடைஞ்சல் தராமல் வழிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறேன்’ என்று பெரிய மனதோடு சசிகலா சொன்ன பிறகு பழனிசாமி சற்று இறங்கிவந்து அவரோடு பேசியிருக்க வேண்டும். தினகரனை எந்தக் காலத்திலும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக அமமுக என்ற கம்பெனியை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். இதைச் செய்யத் தவறியதால் இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்திருக்கிறது. சசிகலாவும் அதிமுகவுக்குள் வந்திருந்தால் அது கட்சிக்குப் புத்துணர்வைத் தந்து இன்னும் பல இடங்களில் தொண்டர்களை உற்சாகமாகச் செயல்பட வைத்து அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கும். இதையெல்லாம் நாம் யோசிக்கத் தவறிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சசிகலாவை சேர்க்காதது மட்டும்தான் தோல்விக்குக் காரணமா?

அது மட்டுமே காரணம் அல்ல. அம்மா இருந்தபோதே கர்நாடகத்தில் அதிமுகவுக்கு பாஜக தலைமை இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. அப்படிப்பட்ட பாஜகவுக்குத் தமிழ்நாட்டில் எந்த அடிப்படையில் அதிமுக தலைமை இப்போது 20 தொகுதிகளைக் கொடுத்தது என்று தெரியவில்லை. அதேபோல், பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியதும் அதிகம். இரண்டு கட்சிகளுக்கும் 43 இடங்களைக் கொடுத்ததில் 9 இடங்களில் வென்றார்கள். எஞ்சிய 34 இடங்கள் போய்விட்டன. இதில் பாதிக்கப்பட்டு நிற்பது அங்குள்ள அதிமுகவினர்தான். அம்மா இருந்திருந்தால் இரண்டு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகளுக்கு மேல் தந்திருக்க மாட்டார்கள். அதேபோல, நல்லெண்ண அடிப்படையில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு விஷயமும் சரியாகக் கையாளப்படவில்லை. இதனால், மற்ற சமூகத்தினர் அதிமுகவை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆக, இப்படியான தவறான முடிவுகளே தோல்விக்கு முக்கியமான காரணம் ஆகிவிட்டன. பொதுவாக ஒன்று சொல்வேன், சாதியை நம்பி இறங்கினால் அதிமுகவே இல்லாமல் போய்விடும். அம்மா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்; அதற்காக பிராமணர்கள் எத்தனை பேருக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் வாய்ப்பளித்தார்? எந்தச் சூழலிலும் தான் சார்ந்த சமுதாயத்தை அவர் தூக்கிப்பிடிக்கவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு சீட் கொடுத்தது சரிதானா?

கட்சிக்குள் முனுசாமியின் அதிகார பலம் அதிகமாகிவிட்டது. இவர்கள் இருவருக்கும் சீட் கொடுத்ததால் இரண்டு எம்பிக்களை அதிமுக இழக்கப்போகிறது. அதைவிட முக்கியம் அந்தப் பதவிகளைத் திமுக பிடிக்கப்போகிறது. இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் எப்படி இப்படி முடிவெடுத்தார்கள் என்றே தெரியவில்லை.

தனது அரசியல் எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலேயே குறியாய் இருந்த பழனிசாமி, கட்சியைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கவலைப்படவில்லை என்றும், பன்னீர்செல்வத்தை வீழ்த்துவதற்காக அதிமுக தரப்பிலிருந்தே பணம் செலவழிக்கப்பட்டது என்றும்கூட ஒரு பேச்சு நிலவுகிறதே?

நான் அப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று நினைக்கவில்லை. ஒரு விஷயம் என்னவென்றால், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக விளங்குபவர். அவருடைய அரசியல் அனுபவத்தை ஏற்றுக்கொண்டு நடந்தால் கட்சியின் வளர்ச்சி பிரகாசமாக இருக்கும்.

அப்படியானால் பழனிசாமி எல்லா மக்களும் ஏற்றுக்கொண்ட தலைவர் இல்லை என்கிறீர்களா?

அப்படிச் சொல்லவில்லை. அம்மாவிடம் நெருக்கமாக இருந்தவர், அம்மா இருந்தபோதே அவரால் இரண்டு முறை முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டவர் பன்னீர்செல்வம்; பத்து முறை பட்ஜெட் வாசித்தவர். அவருக்கு உரிய அங்கீகாரம் அளித்து அவரது அனுபவத்தைக் கட்சி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

தினகரனை தவறவிட்டுவிட்டோம் என்று நினைக்கிறீர்களா?

தினகரனை ஏற்றுக்கொள்ள முடியாது; சசிகலாவைத் தவிர்க்க முடியாது. இதை புகழேந்தி மாத்திரம் சொல்லவில்லை... ஓ.எஸ்.மணியனும் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மையும்கூட. தினகரனைத் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கியதுதான் சசிகலா செய்த மிகப் பெரிய தவறு. எனது அனுபவத்தில் சொல்கிறேன், கட்சி நடத்துவதற்குத் துளியும் தகுதியற்றவர் தினகரன். அவரால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் தெருவில் நிற்கும் காட்சியை அமமுக கம்பெனி இன்றைக்கு அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

தேமுதிகவை அதிமுக கை கழுவியது ஏன்?

தேமுதிகவை உதறித்தள்ளியது வேதனைக்குரிய விஷயம். தேமுதிகவுக்குக் கூடுதல் தொகுதிகள் தர மறுத்துவிட்டு வாசன் கட்சிக்கு ஆறு இடங்களைக் கொடுத்தோம். என்ன ஆயிற்று?

பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் அதிமுக தோல்விக்கு முக்கியக் காரணமோ?

மத்திய - மாநில அரசுகள் நட்புடன் இருக்க வேண்டும் என்பது அண்ணா சொல்லிக் கொடுத்த பாடம். அதன்படிதான் எம்ஜிஆர் செயல்பட்டார். எதிர்க்க வேண்டிய விஷயங்களில் மத்திய அரசை அம்மா உறுதியாக எதிர்த்து நின்றார். மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசுடன் பழனிசாமி இணக்கத்தைக் கடைப்பிடித்தார். இப்போது நாங்கள் தேர்தலில் தோற்றுவிட்டோம். இனி, நாம் அமைத்த கூட்டணி சரிதானா; அப்படியானால் ஏன் தோற்றோம் என்பதையெல்லாம் செயற்குழுவைக் கூட்டி அதிமுக தலைமை ஆராய வேண்டும். முக்கியமாக, கட்சியின் அடிநாதமாக இருக்கும் தொண்டன் என்ன சொல்கிறான் என்பதையும் நாம் இனியாவது காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.

பாஜக காலூன்ற அதிமுக துணைபோகிறது... எதிர்காலத்தில் அதிமுகவையே அந்தக் கட்சி கபளீகரம் செய்துவிடும் என்கிறார்களே?

நாம்தான் சாமர்த்தியமாக நிற்க வேண்டும். 2016-ல் விஜயகாந்தும் அன்புமணியும் ஆளுக்கு ஒருபக்கம், ‘நான்தான் முதல்வர்’ என்று கிளம்பினார்கள். அம்மா தக்க பதிலடி கொடுத்தார். ஆக, உங்கள் கட்சியை நீங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, ‘கபளீகரம் செய்துவிடுவார்கள், தூக்கிப்போய்விடுவார்கள்’ என்று இன்னொரு கட்சியைக் குறைகூறக் கூடாது. தைரியமாக எதிர்த்து நின்று அரசியல் செய்ய வேண்டும். அப்போது அதிமுக மீண்டும் தானாக அரியணை ஏறும்.

உங்கள் பழைய நண்பர் தினகரனின் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எப்படி ஜெயிப்பார்? இமாலய வெற்றியைத் தந்த ஆர்.கே.நகர் மக்களை கரோனா காலத்தில் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எந்நேரமும் மகாராஜாபோல வாழ வேண்டும் என்று நினைக்கிறார் தினகரன். இதை மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். மக்களை இனி அவரால் ஏமாற்ற முடியாது. இனி எங்கே போய் நின்றாலும் அவருக்கு இதுதான் கதி.

அதிமுக தலைமையை மாற்ற வேண்டும் என்றும் அதிமுகவுக்குள் சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்களாமே?

இது யாரோ வேண்டும் என்றே பரப்பும் செய்தி. நான்கு ஆண்டுகளாக அரசை நடத்தும்போது இந்தத் தலைமையை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். குறைகளைத் தலைமைக்குச் சுட்டிக்காட்டலாமே தவிர தலைமையை மாற்ற வேண்டும் என்பதெல்லாம் சரியல்ல.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிமுகவின் செயல்பாடு எப்படி இருக்கும்?

சாதி அரசியல், கோஷ்டி அரசியல் இதையெல்லாம் விட்டுவிட்டு மக்கள் ஏற்காத கட்சிகளையும் ஏறக்கட்டிவிட்டு ஐந்து வருட காலத்துக்கு இந்தக் கட்சியை ஒற்றுமையுடன் வழிநடத்திச் செல்வதுடன் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவும் செயல்பட வேண்டும். அப்போதுதான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதை தலைமை உணர வேண்டும்.

- குள.சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@hindutamil.co.in

( ‘காமதேனு’ இணைய இதழில் வெளியானது.)புகழேந்தி பேட்டிPugazhendhi interviewபெங்களூரு வி.புகழேந்திமுதல்வர் பழனிசாமி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x