Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

முதல்வர் 6: தாராளமயம் தந்த பரிசு

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் 2019 ஆகஸ்ட்டிலேயே தொடங்கிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட இரண்டு வாரப் பயணம், அவரது ஆளுமையை விளம்பரப்படுத்தும் உத்திகளில் ஒன்று என்று அப்போதே விமர்சிக்கப்பட்டது. அந்தப் பயணத்துக்கு ஆறேழு மாதங்களுக்கு முன்பே சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு ஒன்றையும் தமிழக அரசு நடத்தி முடித்திருந்தது. 2015 செப்டம்பரில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இத்தகைய மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறார்.

இத்தகைய மாநாடுகளின் இலக்குகள் எட்டப்பட்டனவா என்று எதிர்க்கட்சி தொடர்ந்து கேள்விகளை எழுப்பிவருகிறது. அந்தக் கேள்விகள் ஒருபுறமிருக்கட்டும். 90-களுக்கு முன்பு இத்தகைய முதலீட்டாளர்கள் மாநாடுகள் சாத்தியமா என்று ஒப்பிட்டுப்பார்த்தால், தனியார்மயமும் தாராளமயமும் உலகமயமும் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை எளிதில் புரிந்துகொண்டுவிட முடியும். ஒன்றியப் பட்டியலின் இடுகை 52-ன்படி, பொதுநலனுக்கு உகந்தது என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அனைத்து விசைத் தொழில்களுமே ஒன்றியத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை. அதேநேரத்தில், பொதுநலன் என்பதற்கான வரையறையை அரசமைப்புச் சட்டம் அளிக்கவில்லை. இத்தகைய தவிர்ப்புகளுக்கான நோக்கம் அளவிறந்த அதிகாரங்களை ஒன்றிய அரசுக்கு அளிப்பதுதான்.

மறக்க முடியுமா?

இடுகை 52-ன் அடிப்படையில் இயற்றப்பட்ட தொழில் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டமானது, தனது முதலாவது அட்டவணையின் வாயிலாக முக்கியத் தொழில்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசின் கைகளில் ஒப்படைத்தது. எனவே, அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்குத் தேவைகள் எதுவும் இல்லாமல் ஒன்றிய அரசு எந்தவொரு தொழிலையும் தம் கட்டுப்பாட்டில் சேர்க்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றது. சவர பிளேடுகள், காலணி, தீக்குச்சி என்று அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அது. தொழில் உரிமங்கள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள், அந்நிய முதலீட்டுக்கான வரம்புகள், சந்தையின் மீதான அதிகாரங்கள் என ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டே தொழில் துறைகள் இயங்கிவந்தன. மூலதனத் திரட்டலில் கடன்களின் பங்கு தவிர்க்கவியலாதது என்பதால், பெரிய அளவிலான தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதும்கூட தொழில் துறை மீதான ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டை இன்னும் வலுவாக்கியது.

மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்புக்கு உட்பட்ட அளவில் பொதுத் துறை நிறுவனங்களைத் தொடங்க அனுமதிக்கப்பட்டனர் என்றாலும் வரிவிதிப்புகள் சார்ந்து வேறொரு சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அரசமைப்புச் சட்டக் கூறு 289(2)-ன் கீழ் மாநில அரசு நடத்திவரும் தொழில்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 289(3) கூறின்படி ஒன்றிய அரசு தான் நடத்திவரும் எந்தவொரு தொழிலையும் அரசின் அலுவல்களுக்குத் தொடர்பானது என்று அறிவிக்கவும் அதன் வாயிலாகக் கிடைக்கும் வருவாய்க்கு வரிவிலக்குகள் பெறவும் அதிகாரம் பெற்றுள்ளது.

தடையற்ற உரிமங்கள்

பொருளியல் சார்ந்த முடிவுகளை எடுப்பதிலும் நிதியாதாரங்களைப் பங்கீடு செய்வதிலும் நிலவிய மைய அதிகாரம், மாநிலங்களின் பொருளாதாரத் தன்னாட்சிக்குத் தடையாகவே இருந்தது. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயத்தின் விளைவாகவே மாநிலங்கள் தொழில் துறை தொடர்பிலான அதிகாரங்களைப் படிப்படியாகப் பெறத் தொடங்கின. தொழில் உரிமங்களுக்கான ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டன. பொதுத் துறை முதலீடுகள் குறைத்துக்கொள்ளப்பட்டதால், தனியார் துறைக்குப் புதிய வாய்ப்புகள் உருவாயின. மாநில அரசுகள் தங்களது சூழல் அமைவுக்கும் மனித சக்திக்கும் ஏற்ப தொழிற்கொள்கைகளை வகுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளன. ஒரு சில துறைகள் தவிர்த்துப் பெரும்பாலானவற்றில் அந்நிய நேரடி முதலீட்டுக்குத் தடையற்ற உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுகள் தாங்களாகவே அத்தகைய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வம்காட்டுகின்றன.

பொதுத் துறை முதலீடுகளுக்குத் திட்டமிடும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தனது முழுப் பொறுப்பில் வைத்திருந்தபோது மாநில அரசுகள் அது தொடர்பான ஒவ்வொரு கோரிக்கைக்காகவும் போராட வேண்டியிருந்தது. சேலம் உருக்காலைத் திட்டத்துக்கான முயற்சிகளையே அதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். காங்கிரஸ் தொடங்கி திமுக வரையிலான தமிழகத்தின் 15 ஆண்டு காலக் கோரிக்கை அது. 1970-ல் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்திப் பேசிய பிறகே, பிரதமர் இந்திரா காந்தி அத்திட்டத்துக்கு அனுமதியளித்தார். அதே கூட்டத்தில், ஒன்றிய அரசு உருவாக்கும் ஒவ்வொரு கொள்கையையும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் என்பது சரியல்ல என்றும் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதே தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நாட்டின் நலனுக்கும் நல்லது என்று பேசினார் கருணாநிதி. அரசமைப்புச் சட்டத்தில் அத்தகைய திருத்தங்கள் இன்று வரையிலும் வந்தாகவில்லை.

அடுத்த மாதமே நாடாளுமன்றத்தில் சேலம் உருக்காலை உருவாக்கப்படும் என்று அறிவித்தார் பிரதமர் இந்திரா காந்தி. அடுத்த சில மாதங்களில் சேலத்தில் முதல்வர் தலைமையில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பொதுத் துறையின் பங்குகள் விலக்கிக்கொள்ளப்படும் திட்டத்தில் இன்று சேலம் உருக்காலையும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டது. அதுவும்கூட தாராளமயத்தின் மற்றொரு விளைவு என்பதையும் மறந்துவிடக் கூடாது. அரசமைப்புக்கு வெளியே திட்டக் குழுவின் சர்வாதிகாரத்தைக் கண்டித்த காலம் போய், அந்தக் குழுவே இன்று கலைக்கப்பட்டுவிட்டது.

எம்ஜிஆர் அரசின் பதில்

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த சர்க்காரியா ஆணையத்தின் கேள்விகளுக்கு 1985-ல் எம்ஜிஆர் தலைமையிலான அன்றைய தமிழக அரசு அளித்த பதில்கள் தொழில் துறையில் மாநில அரசுகளின் நிலையைத் தெளிவாக எடுத்துக்கூறின: ‘தொழில் கொள்கையை வகுப்பதற்கு முன்னால் மாநில அரசுகளைக் கலந்தாலோசிப்பதில்லை. தொழில் வளர்ச்சித் திட்டங்களை நிர்வகிக்கும் பெரும் பணி மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே, முக்கியத் தொழில் கொள்கையை வகுப்பதில் அவை சம்பந்தப்பட வேண்டும்.’

தொழில் உரிமத்துக்காக விண்ணப்பிப்பவர் ஒன்றிய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்; மாநில அரசிடம் அந்த விண்ணப்பம் குறித்துக் கருத்துகள் கேட்கப்பட்டாலும், அந்தக் கருத்தைப் பெறுவதற்கு முன்பே ஒன்றிய அரசு உரிமம் வழங்கிய நிகழ்வுகளும் உண்டு என்பதையும் தமிழக அரசு அந்தப் பதிலறிக்கையில் கவனப்படுத்தியிருந்தது. உரிமம் வழங்கும் குழுவில் மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்றும் அந்தப் பதிலறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தொழில் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் முதல் அட்டவணையில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்ற கேள்விக்கு அரசமைப்புச் சட்டத்தின் ஒன்றியப் பட்டியல் இடுகை 52-யே நீக்க வேண்டும் என்று காட்டமாகப் பதிலுரைத்தது தமிழக அரசு.

இன்று நிலைமைகள் மாறியிருக்கின்றன. சேலம் உருக்காலைக்காக டெல்லிக்குச் சென்று குரல்கொடுத்த கருணாநிதிக்கு, தாராளமயத்தின் வருகைக்குப் பிறகு, டைடல் பார்க் தொடங்குவதில் இத்தகைய பிரச்சினைகள் எழவில்லை. தற்போது தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தொழில் வளர்ச்சி பற்றிப் பேசும் நிலை உருவாகியிருக்கிறது. தொழிற்கொத்துகள் பரவலாக்கப்பட்டு வேளாண் அல்லாத தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறது திமுக. சென்னை - ஸ்ரீபெரும்புதூர் தொழில்வழித் தடம் ஓசூர் வரை நீட்டிக்கப்படும் என்றும் மதுரை தொடங்கி தூத்துக்குடி வரையிலான தொழில்வழித் தடத்தில் புதிய தொழில்கள் தொடங்கப்படும் என்றும் திமுக கூறியிருக்கிறது. அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சியில் வகுக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டத்தையும் அதன் அடிப்படையில் அமைந்த புதிய தொழில் கொள்கையையும் மேற்கோள் காட்டியிருக்கிறது.

மக்கள் நலன் நாடும் அரசின் கடமைகளையும் பொறுப்புகளையும் தாராளமயம் தவிர்க்கச் சொல்கிறது என்றபோதிலும் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களுக்குச் சற்றே பொருளியல் சுதந்திரத்தையும் அது உருவாக்கித் தந்திருக்கிறது. தாராளமயத்தின் காரணமாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருக்கிறது, உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மாநிலங்களின் வரிவருவாய்களும் அதிகரித்திருக்கின்றன. அதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா? 2017 ஜூலையில் நடைமுறைக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியின் நோக்கம், மாநிலங்களுக்கான அந்தப் புதிய வருவாய் வாய்ப்புகளையும் பிடுங்கிக்கொள்வதுதான். திட்டக் குழு கலைக்கப்பட்டால் என்ன? நிதிக் குழு இன்னும் நீடிக்கத்தானே செய்கிறது?

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x