

வாக்கு வங்கியை வாரிச்சுருட்டத்தான் அரசியல் திட்டங்கள் தீட்டப்படுகின்றன
சென்னையின் பெருவெள்ளம் வடிந்ததால் தேசம் ஆசுவாசம் அடைந்திருக்கிறது. ஆனால், வெள்ளம் ஏற்படுத்திய சேதம் மக்களை நிலைகுலையவைத்து மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. பலருக்கு எதிர்காலம் என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. ஒரு விதத்தில் தமிழக அரசுக்கும் அப்படித்தான். ஆனாலும் ஆட்சி மாறுமா என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியாது.
இம்முறை மக்களை வாட்டி வதைத்தது மழைதான் எனச் சொல்லலாம். ஆனால், அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை ஓரளவேனும் தடுத்திருக்கலாம் என்று ஆதாரங்களோடு விவாதிக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கை எனும்போது உள்கட்டமைப்புப் பணியிலிருந்தே அது தொடங்குகிறது. மக்களின் நலனைத் தீர்மானிப்பது அரசியல் தலைமைதானே தவிர, பொருளாதார வளங்கள் அல்ல. அதிலும் தொழில்வளத்திலும் இயற்கை வளங்களிலும் எந்த மாநிலத்துக்கும் சளைத்ததல்ல தமிழகம். ஆகையால் நடந்திருக்கும் பேரழிவுக்கு ஆட்சியாளர்களே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இரு கழகங்கள்
தமிழகத்தைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக ஆட்சி செய்யும் இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையில் சித்தாந்த அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் கிடையாது. விநியோகம் என்ற அடிப்படையில்தான் இவர்களுடைய கொள்கையைப் பிரித்துப்பார்க்க முடியும். இவர்களுடைய கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் சமூகப் பாதுகாப்புக் கும் விநியோகம் செய்வதற்கும் இடையில் உள்ள வித்தி யாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர். காலத்திலாவது பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம் மேம்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவிதத்தில் நல்ல விஷயம் அது. ஆனால், அதற்குப் பின் சரக்குகளை விநியோகம் செய்யும் பணிதான்! அதுவும் இன்றைய காலகட்டம் விநியோகத்தின் உச்சம். மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர்… துல்லியமாக வியாபார நோக்கத்தில் தெளிவான அரசியல் உத்தியைப் பிரயோகித்துதான் தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் விநியோகத்தில் ஈடுபடுகின்றன. ஒட்டுமொத்த மக்களின் வாயடைத்து ஒருவிதமான உறக்க நிலைக்குக் கொண்டுசென்று, வாக்கு வங்கியை வாரிச்சுருட்டத்தான் இத்தகைய அரசியல் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசியல் அதிகாரத்தைத் தட்டிக் கேட்கும் உரிமை பெற்றவர்கள் குடிமக்கள் என்னும் உணர்வை மழுங்கடிக்கத்தான் இத்தகைய விநியோகம் நடைபெறுகிறது. அப்போதுதான் அரசாட்சியை மறுபரிசீலனை செய்ய மாட்டார்கள். சொல்லப்போனால், ‘மக்கள்’ என்னும் சொல்லை அரசியல்வாதிகள் உச்சரிப்பதற்குப் பின்னால் ஓர் அரசியல் உளவியல் இருக்கிறது. மக்கள் என்றால் குழந்தை என்றும் பொருள். ஆக, அரசு தருவதை மறு பேச்சின்றிப் பெற்றுக்கொள்பவர்கள்தான் குடிமக்கள் என்னும் உளவியல்தான் அது. மாறாக, அரசைக் கடுகளவேனும் விமர்சிப்பவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.
கோவனின் பார்வை
அப்படி அரசை சமீபத்தில் உரசிப் பார்த்தவர்தான் கோவன். டாஸ்மாக்கை விமர்சித்துப் பாடியதற்காக கோவன் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது. மது வியாபாரத்தை ஊக்குவித்து, ஆண்களைக் குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்கி அவர்களைப் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தூண்டும் ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கும் பாடல் இது. ஆனால், மது வருமானத்தினால் அதிகாரத்தில் இருக்கும் பலர் பலன் அடைவதால், இந்தப் பாடல் வேறுவிதமாகச் சித்தரிக்கப்பட்டது. உண்மை யாதெனில், அரசு நடத்தும் மது விற்பனை நிறுவனத்தின் பெயரைப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டிப் பாட்டுக் கட்டிய கோவன் பாராட்டுக்குரியவர். அவருடைய பாடலின் இறுதியில், இந்த வியாபாரத்தை நிறுத்தவில்லை என்றால் அது ஆட்சியைக் கவிழ்க்கும் என்றும் அவர் பாடியிருந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை விநியோகம் ஆட்சியைப் பிடிக்க உதவுமே தவிர, லாபம் தராது. ஆனால், அதே நேரத்தில் இந்த மது வியாபாரத்தின் மூலமாகப் பல கோடி ரூபாய் புரட்டப்படுகிறது. இதில் தனிநபர்களும் ஆதாயம் அடைகின்றனர்.
இதை ஒரு கட்சி மட்டுமே செய்கிறது எனச் சொல்லிவிட முடியாது. இதற்கு இரு திராவிடக் கட்சிகளும் விதிவிலக்கல்ல. இத்தகைய அரசியல் சூழலைப் புரட்டிப்போட வேண்டுமானால் ஊழலுக்கு எதிராக டெல்லி மக்கள் மாபெரும் இயக்கமாகத் திரண்டுவந்து வீதியில் போராடியதுபோல இங்கும் மிகப் பெரிய எழுச்சி உருவாக வேண்டும்.
தவறான முக்கியத்துவம்
உச்சபட்சமாக விநியோகம் செய்ததால் அரசு சந்தித்திருக்கும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதிலும் சென்னையில் அது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இந்த அணுகுமுறையால் கஜானா காலியாகும் நிலை ஏற்பட, மறுபுறம் நியாயமாக மக்களுக்குச் சென்றடைய வேண்டிய சேவைகள் தடைபட்டுப்போயுள்ளன. இத்தகைய ஆட்சிக் குளறுபடியை விமர்சிக்க மீண்டும் கோவன் பாடலைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைக்கிறது. ஆனால், தரமான கல்வி பெறப் பல லட்சங்கள் செலவழிக்க வேண்டியிருக்கிறது என நையாண்டி செய்கிறது கோவனின் பாடல்.
அரசு மட்டுமே மக்களுக்குச் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பொதுச் சேவைகளைச் செய்யத் தவறிவிட்டு, கட்சியின் நலனை முன்வைத்துப் பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஒரு பக்கம் விநியோகம் மூலமாகக் கட்சியின் செல்வாக்கைப் பலப்படுத்திக்கொண்டு, மறுபக்கம் மது விற்பதன் மூலம் கட்சியின் முக்கியப் புள்ளிகள் தங்களைப் பொருளாதாரரீதியாகத் தூக்கி நிறுத்திக்கொள்கின்றனர். இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, சென்னையின் துயரத்துக்கான அடிப்படைக் காரணம் புரிந்துவிடும். பொதுத் துறை சேவைகளைச் சீராக அளிப்பதற்குப் பதிலாக விநியோகம் செய்ததன் விளைவுதான் இது. பொதுச் சேவைகள் எனும்போது பாலங்கள், மழை வடிகால் அமைப்புகள், சாக்கடை, சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பைச் சீராகச் செய்திருக்க வேண்டும். இவை அனைத்தும் பெருவாரியான மக்களுக்குப் போய்ச்சேரும் சேவைகள். தனிநபருக்கு மட்டுமே ஆதாயம் கொடுக்கும் பொருட்கள் அல்ல. இத்தகைய பொதுச் சேவையின் போதாமையை நமக்கு நன்கு உணர்த்தியது தற்போது சென்னையை ஸ்தம்பிக்க வைத்த பெருவெள்ளம். இத்தனைக் காலம் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த பொருட்கள் அத்தனையும் மழை வெள்ளம் அடித்துக்கொண்டு சாக்கடையில் கொண்டு சேர்த்த அவலத்தைவிட வேறு என்ன கொடுமை ஏழை எளிய மக்களுக்கு இருக்க முடியும். நகர உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளும் அத்துமீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களும் இயற்கையின் சீற்றத்துக்கு ஊரைப் பலிகொடுத்தன என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
நிலத்தடிக் கழிவுநீர் சென்னையின் ஆறுகளுக்குள் புகுவதைத் தடுக்க முடியாத திராவிடக் கழகங்கள்தான் நம்மைக் காலங்காலமாக ஆள்கின்றன. பொதுச் சேவையில் உள்ள குறைபாடுகள் எனச் சொன்னால், தமிழகத்தைப் போலவே பிற மாநிலங்களிலும் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், தனிச் சொத்துகளைக் குவித்துக்கொண்டும் வாரிசு அரசியல் நடத்திக்கொண்டும் மக்களை இந்த அளவுக்குச் சுரண்டவில்லை என்ற உண்மையும் புரியாமல் இல்லை.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: ம.சுசித்ரா