

தமிழகத் தாய், கறுப்பினத் தந்தையின் அமெரிக்க மகள் கமலா ஹாரிஸ் (வயது 56) இன்று அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர். அதிலும் வெள்ளை மாளிகையில் கம்பீரமாகப் பதவியேற்கப்போகும் முதல் கறுப்பின, முதல் ஆசியப் பெண். இந்த மாபெரும் வரலாற்றுத் தருணத்தில், ‘‘சமத்துவம், விடுதலை, நீதிக்காகப் போராடிய பெண்கள், குறிப்பாகக் கறுப்பினப் பெண்கள் பெரிதும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால், அவர்கள் தான் நம்முடைய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. அப்படியான ஒருவராக அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். ஆனால், நிச்சயமாகக் கடைசிப் பெண்ணாக இருக்க மாட்டேன்” என்றார் கமலா ஹாரிஸ்.
‘தமிழ்ப் பெண்’ ஹாரிஸ்
அமெரிக்க அரசியலில் தடம் பதித்திருக்கும் முதல் ‘கறுப்பின பெண்’ என்று கறுப்பினத்தவர்களால் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக கமலா ஹாரிஸ் கொண்டாடப்படுகிறார். அவருடைய தாய்வழி பூர்விகத்தையும் தேர்தல் பிரச்சார மேடையில் அவர் ‘சித்தி’ என்று உச்சரித்ததையும் வைத்து அவரை ‘தமிழச்சி’ என்று குதூகலிக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். அவருடைய தாய் ஷியாமளாவின் சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு-துளசேந்திரபுர மக்களோ வாழ்த்துப் பதாகைகள், குலதெய்வக் கோவிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீ சேவகப் பெருமாள் கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்று கோலாகலப்படுத்தினார்கள். இட்லி, தோசைதான் அவருக்குப் பிடித்தமான உணவு என்றும் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவார் என்றும் சாதி தோய்ந்த உணவு அரசியலை முன்னிறுத்திப் படையல் போடுபவர்களும் இருக்கிறார்கள்.
மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற மன்னார்குடி ஷியாமளா கோபாலன் பல்கலைக்கழகத்தில் பழகிய ஜமைக்காவைச் சேர்ந்த ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் என்று இரண்டு பெண் குழந்தைகள். கமலா ஹாரிஸுக்கு ஏழு வயதானபோது தாயும் தந்தையும் மணமுறிவு செய்துகொண்டனர். தனித்து வாழும் தாயாக இரண்டு மகள்களையும் அமெரிக்காவிலேயே துணிச்சலாக வளர்த்தெடுத்தார். இருவரும் சட்டம் பயின்று முன்னேறினார்கள். மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்த ஷியாமளா 2009-ல் புற்றுநோயால் மரணமடைந்தார். மாயா ஹாரிஸின் மகள் மீனாட்சியும் சட்டம் பயின்றவர் நைஜீரியா நாட்டவரை மணமுடித்தார். கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் யூத இனத்தவர். இப்படியாக இனம், மொழி, சாதி, மதம் அனைத்தையும் கடந்து பன்மைத்துவத்தின் முகமாக கமலா ஹாரிஸ் திகழ்கிறார் என்று பறைசாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
இதென்ன பிரமாதம், சிறீமாவோ பண்டாரநாயக்கே, இந்திரா காந்தி, பெனசீர் புட்டோ உள்ளிட்ட அநேகப் பெண் தலைவர்களை ஆசிய நாடுகள் என்றோ உருவாக்கிவிட்டன. இன்ன பிற மூன்றாம் நாடுகள் பலவும் என்றோ சாதித்ததை இன்றுதான் வல்லரசு நாடான அமெரிக்கா தொட்டிருக்கிறது. இப்படியான வாதமும் உலாவுகிறது.
‘கறுப்பினப் பெண்’ ஹாரிஸ்
தன்னை கறுப்பினப் பெண்ணாகவே கமலா ஹாரிஸ் அடையாளப்படுத்துகிறார். தந்தை ஆப்பிரிக்கர் என்பதால் மட்டுமே இந்த அடையாளத்தை அவர் ஏற்கவில்லை. தான் கிறிஸ்தவராக இருந்தபோதிலும் தாயுடன் கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவர். ‘ஆல்பா கப்பா ஆல்பா’ என்ற அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண்கள் அமைப்பின் உறுப்பினராகப் பல தசாப்தங்கள் செயல்பட்டவர். இது போன்ற பல்வேறு அம்சங்கள் பன்மைத்துவப் பண்பாட்டு அடையாளமாக கமலாவை செறிவூட்டின. சிறுபிராயத்திலிருந்தே சிவில் உரிமை ஆர்வலராகவே தாயால் கமலா வார்த்தெடுக்கப்பட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் முடித்துவிட்டு கலிஃபோர்னியா ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார். அதன் பிறகு மனித உரிமைகளை முன்னிறுத்தும் வழக்கறிஞராக உருவெடுத்தார். 2003-ல் சான் ஃபிரான்சிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார். 2010-ல் கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். அதிலும் கலிஃபோர்னியாவின் முதல் கறுப்பினப் பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பை பெற்றார். 2016-ல் அமெரிக்க செனட்டர் ஆகும் இரண்டாவது கறுப்பினப் பெண் என்ற புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார். ஒபாமா ஆட்சிக் காலத்திலிருந்தே அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபடலானார்.
அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் பொருத்தமானவர் என்று அமெரிக்க அதிபராக வாகை சூடி இருக்கும் ஜோ பைடன் எதனால் முடிவு செய்தார்? பாலினம், இனம் ஆகிய அடையாளங்களைக் கடந்து கமலா ஹாரிஸூக்கு வேறொரு முக்கிய அடையாளம் இருப்பதாகவும் தெரியவருகிறது. புலம்பெயர்ந்த மக்கள் சங்கமிக்கும் பூமியாக டாலர் தேசம் திகழ்கிறது. ஆனாலும் ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ போன்ற பழமைவாதங்களையே ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் முன்னிறுத்தினர். குறிப்பாக ஜார்ஜ் ஃப்ளாயிட் படுகொலையை அடுத்து அமெரிக்காவில் காட்டுத் தீயாகப் பரவிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கம் அமெரிக்க மக்களிடையே மிகப் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பாகத் தேர்தலில் நின்றபோது புலம்பெயர்ந்தவர்கள், வெள்ளையர் அல்லாதவர்களின் முகமாக அவர் அறியப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நடிகை மிண்டி காலிங் வார்த்த தோசையைக் கமலா ஹாரிஸ் சாப்பிட்டது, மும்பையில் பிறந்து அமெரிக்காவில் நகைச்சுவைக் கலைஞராக வலம்வரும் ஆசிஃப் மந்தவியை அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது சந்தித்தது ஆகியவை இந்தப் பின்னணியில்தான். சொல்லப்போனால், ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் அமெரிக்கா முழுவதும் தமிழ், இந்தி, சீனம், கொரியா, வியட்நாமீஸ், ஃபிலிப்பினோ ஆகிய மொழிகளும் பரப்பப்பட்டதை இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
முற்போக்கு அரசியலர்
கொள்கைரீதியாகவும் கமலா ஹாரிஸ் தன்னுடைய முத்திரையைப் பதித்துவருகிறார். பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமை குறித்து குரல் எழுப்புவது, ‘எல்லோருக்கும் கல்லூரி சட்டம்’ மூலம் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு அரசு நிதி உதவி அளிக்கும் திட்டம், அமெரிக்காவில் பரவலாக உள்ள துப்பாக்கிக் கலாச்சாரத்தை அப்புறப்படுத்த சிறப்பு மசோதா நிறைவேற்றுவது, தனியார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்துசெய்வது, இலவச மருத்துவ சுகாதார சேவைகளை ‘மெடிகேர் ஃபார் ஆல்’ மசோதா மூலம் நிறைவேற்றுவது, புலம்பெயர் அமெரிக்கர்களின் வாழ்க்கையைப் புனரமைக்கும் திட்டம், தன்பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்குவது, விருப்பமான கழிப்பிட வசதியைத் திருநங்கைகள் பயன்படுத்த அனுமதிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களைச் சீரமைப்பது உள்ளிட்ட அநேக ஆக்கபூர்வமான நல்லாட்சித் திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை அவர் காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட தீவிரமான சிக்கல்களுக்கு மனித உரிமை ஆர்வலராக இருந்து நியாயம் சேர்ப்பார் என்று கணிக்கப்படுகிறது.
பல விஷயங்களிலும் முதல் பெண்ணாக முன்னேறியிருக்கும் கமலா ஹாரிஸ் பாலினச் சமத்துவத்தைக் கோருவது, இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, உலகளாவிய மனித உரிமைகளுக்குக் குரல் எழுப்புவது, பிற நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணுவது, நிலையான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது ஆகியவற்றில் தன்னுடைய வெற்றிக்களிப்பில் உதிர்த்த சொற்களை மெய்ப்பிப்பார் என்று எதிர்பார்ப்போம்.
- ம.சுசித்ரா, தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in