Published : 20 Jun 2020 09:02 PM
Last Updated : 20 Jun 2020 09:02 PM

இது இன்னொரு பனிப்போர்!- சீனாவைப் பற்றிய சில புரிதல்கள்

ஒரு விஷயத்தை நாம் நேர்மையுடன் ஒப்புக்கொள்வோம்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்கெனவே ஒரு புதிய பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் நெருக்கடி அந்த விரோதத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. அவ்வளவுதான். ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும்தான் இரு வல்லரசுகளும் தங்கள் பகைமையைக் காட்டிக்கொள்ளவில்லை. எல்லைப் பிரச்சினை தொடர்பாகச் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையில் கொடூரமான கைகலப்பு நடந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அவசர அவசரமாக இந்தியத் தரப்புக்கு ஆதரவளித்தார்.

பிரிட்டன் எம்பி-க்கள் ‘சீன ஆராய்ச்சிக் குழு’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் ஆராய்ச்சி எனும் வார்த்தைக்கு ‘எதிர்த் தரப்பு குறித்த ஆராய்ச்சி’ என்றே பொருள், ‘ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழு’வைப் போன்றதுதான் இதுவும். ஹுவாவே (Huawei – சீனத் தொழில்நுட்ப நிறுவனம்) , ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலா என்ற கேள்வி அநேகமாக எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது.

இவ்விஷயத்தைப் பொறுத்தவரை, வரலாற்று ரீதியான எந்த ஒரு ஒப்பீடும் முழுமையானதாக இருக்காது. எனினும், பனிப்போரின் சாரம் என்பது இரு வல்லரசுகளுக்கு இடையிலான உலகளாவிய, பல பரிமாணங்களைக் கொண்ட, நீண்ட கால மோதல் என்று வைத்துக்கொண்டால், இது ஒரு புதிய பனிப்போர்தான். இவ்விஷயத்தில் நாம் (ஐரோப்பியர்கள்) என்ன செய்வது என்பது முக்கியமான கேள்வி.

மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு, “எப்படியாவது இதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்” என்று சொல்ல வேண்டுமா (பெரும்பாலான ஐரோப்பியர்களின் அணுகுமுறை அதுதான்!) அல்லது நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு இதிலிருந்து ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமா? இரண்டாவது யோசனைதான் இயல்பாகவே சரியானது. அதை மனதில் கொண்டு, முதலாவது பனிப்போரிலிருந்து இரண்டாவது பனிப்போருக்கான ஒன்பது பாடங்களைப் பட்டியலிடலாம்.

1. நீண்ட காலத்துக்கு நீடிக்கும்
முதல் பனிப்போர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. சீன மக்கள் குடியரசு பெரிய அளவிலான வலிமைகளைக் கொண்டது. மிகப் பெரிய நிலப்பரப்பு, தேசியப் பெருமிதம், கண்டுபிடிப்புகள், தொழிலதிபர்களைக் கொண்ட சமூகம் ஆகியவற்றுடன், ஒரு லெனினியக் கட்சியும் அவற்றில் அடக்கம். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் போன்ற நிலை சீனாவுக்கும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், அக்கட்சி அதிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறது. ஆக, இது ஒரு நீண்டகாலத்துக்கான பிரச்சினை.

2. போட்டி, ஒருங்கிணைப்பு இரண்டும் அவசியம்
உலக நாடுகளுக்கு இடையிலான கசப்புணர்வைக் குறைக்கும் கொள்கைகள் (Detente policies) முதலாம் பனிப்போரிலிருந்து வேறுபட்டவை அல்ல. அவை பனிப்போரின் உள்ளார்ந்த அங்கமாக இருந்தவை. கடினமான, இறுக்கமான பாதுகாப்புக் கொள்கைகளைக் கொண்ட ராஜதந்திரம், ஆக்கபூர்வமான ஈடுபாடு ஆகியவற்றை இணைத்து இயங்கிய தாராளவாத ஜனநாயக நாடுகள் பனிப்போரின்போது சிறப்பாகச் செயல்பட்டன.

தைவானின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் நமது வரையறைகள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அதேசமயம், சீனாவுடனான உறவைத் தொடர்வதிலும் அந்தத் தெளிவு தொடர வேண்டும். சீனா ஒரே சமயத்தில் பங்காளியாகவும், போட்டியாளராகவும், பகையாளியாகவும் இருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. சீனாவும், தாராளவாத உலகும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் விதம்; பருவநிலை மாற்றம், ‘கோவிட்-19’ போன்ற உலகளாவிய அச்சுறுத்தல்கள் போன்றவற்றைப் பார்க்கும்போது, சீனாவுடன் இரட்டை வழி அணுகுமுறையைப் பின்பற்றுவது அவசியமாகிறது.

3. சீனாவைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்
புதிய பனிப்போரின் பிரதான காரணம், 2012 முதல் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திருக்கும் நிலைப்பாடுதான். அது – உள்நாட்டில் அதிகமான அடக்குமுறை; வெளியுறவில் அதிகமான ஆக்ரோஷம். பல தசாப்தங்களாக நடைமுறை சார்ந்த, பரிணாம அடிப்படையிலான வியூகத்தைக் கொண்டிருந்த சீனா அதிலிருந்து தடம் மாறியது ஏன் என்பதை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். அமைதியான முறையில் வளர்ச்சியடைந்த அந்நாடு, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின்போது சர்வதேச அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீனாவை அதன் பழைய தடத்துக்கு மடைமாற்ற எந்த சக்திகள் அல்லது சூழல்கள் வழிவகுக்கும் என்பதைப் பரிசீலிக்க வேண்டும். சீனாவின் வரலாறு, கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த ஆசியாவைப் பற்றியும் அறிந்துகொள்வது அவசியம்.

4. சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் மாற்றம் ஏற்படுத்த முடியாது
பனிப்போர் சமயத்தில் மேற்கத்திய கொள்கை கொண்டிருந்த கற்பிதங்களில் ஒன்று, எந்த நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் நேரடியாகவும், தன் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலும் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பது. அமைதிப் புறாக்களுக்கு வலிமை சேர்ப்பது; பருந்துகளை வலுவிழக்கச் செய்வது எனும் பெயரில் நடந்த முட்டாள்தனமான நடவடிக்கைகளை நாம் மறந்திருக்க முடியாது. அதுபோன்ற ஆணவப் போக்கைத் தவிர்க்க வேண்டும்.

5. சீனர்களை விமர்சிக்க வேண்டியதில்லை
ஜின்ஜியாங், ஹாங்காங், தென்சீனக் கடல் போன்ற விஷயங்களின் அடிப்படையில் சீனக் கம்யூனிச ஆட்சியின் கொள்கைகளை விமர்சிப்பது சரியானதுதான் என்றாலும், வளமான கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கொண்ட சீன மக்கள் மீதான தாக்குதலாக அது அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நமது ஒவ்வொரு செயல்பாடும் அறிக்கையும், சீன சமூகத்தின் மீதும் அரசின் மீதும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும். கடைசியில் சீனாவில் மாற்றம் ஏற்படுத்தப்போவது நாம் அல்ல, சீனர்கள்தான்!

6. சீனா சோவியத் ஒன்றியமல்ல!
எப்படி சோவியத் ஒன்றியமானது, லெனினிய அரசியலும் ரஷ்ய வரலாறும் கலந்ததாக இருந்ததோ, அதேபோல இன்றைய சீனாவும் ஜி ஜின்பிங்கின் லெனினியமும், சீனக் கலச்சார – பாரம்பரியமும் கலந்த கலவையாகவே இருக்கிறது. நவீன அரசை உருவாக்கிய முதல் உலக நாகரிக தேசம் சீனாதான் என்கிறார் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா (அமெரிக்க அரசியல் ஆய்வாளர்). “சீன ஆட்சிகள் மையப்படுத்தப்பட்டவை, அதிகாரத்துவ அமைப்பைக் கொண்டவை, தகுதி அடிப்படையிலானவை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முந்தைய வரலாறுக்கு மாறாக, லெனினியமும், முதலாளித்துவமும் கலந்த கலவையாக இருப்பதுதான் இன்றைய சீனாவின் பலமும் பலவீனமும். பொருளாதார ரீதியில் நவீனத்தன்மையும், சமூக ரீதியில் முரண்பாடுகளும் கொண்ட - 1914-க்கு முந்தைய (இரண்டாம் வில்லியம் காலத்திய) ஜெர்மனி, ஏகாதிபத்திய பிரிட்டனுக்குச் சவால் விட்டது. அதேபோல, இப்போது ஏகாதிபத்திய அமெரிக்காவுக்குச் சவால் விடுகிறது இன்றைய சீனா.

7. நல்லதையே செய்வோம்!
ஹாங்காங்கில் நடந்த துயரகரமான நிகழ்வுகளை, ஜின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட சர்வாதிகார அடக்குமுறையை, துணிச்சலுடன் விமர்சனங்களை முன்வைக்கும் தனிநபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் கவனித்திருக்கிறோம். 30 லட்சம் ஹாங்காங்வாசிகளுக்கு முழுமையான பிரிட்டன் குடியுரிமையை வழங்க பிரிட்டிஷ் அரசு எடுத்த முயற்சி மிகச் சரியானது. கிழக்கும் மேற்கும் இணைந்த கலாச்சாரம் கொண்ட அந்நகரம் மேலும் அடக்குமுறைக்குள்ளாவதை இதனால் தடுக்க முடியாது என்றாலும் இது மிக முக்கியமான நடவடிக்கைதான்.

லியூ ஜியாபோவுக்கு (ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை எதிர்த்த சீனர்) அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நார்வேயில் உள்ள நோபல் விருது கமிட்டி முடிவெடுத்ததும் இன்னொரு நல்ல விஷயம். துணிச்சல் மிக்க, பிரகாசமான தேசப்பற்றாளரான ஜியாபோ சிறையிலேயே மரணமடைந்தது வருத்தம் தரும் விஷயம்.

8. ஒற்றுமையே வலிமை!
தற்சமயம் சீனா விஷயத்தில், தாராளவாத உலகம் சில குழப்பங்களைக் கொண்டிருக்கிறது. மற்றொரு வல்லரசு நாட்டை எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் வியூக அணுகுமுறை தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்த ஓர் அதிகாரபூர்வ ஆவணம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. “அமெரிக்கக் கொள்கையின் முதல் நோக்கம், அமெரிக்க நிறுவனங்கள், கூட்டணி நாடுகளைப் பின்னடைவிலிருந்து மீட்பதுதான்” என்கிறது அந்த ஆவணம். ஆனால், ட்ரம்ப் அதற்கு நேர்மாறாகவே செயல்படுகிறார்.

சீனாவுடனான இரட்டை வழி அணுகுமுறைக்கு ஒரு வியூகரீதியிலான ஒற்றுமை அவசியம். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம், பிரெக்ஸிட்டுக்குப் பிறகான பிரிட்டன், புதிதாக அமையவிருக்கும் அமெரிக்க அரசு ஆகியவற்றுடன், பிற ஜனநாயக நாடுகளின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி, சீனா விஷயத்தில் ஒரு பொது முடிவை எடுக்க வேண்டும்.

9. உள்நாட்டுச் செயல்பாடுகளே தீர்மானிக்கும்

முந்தைய பனிப்போர் காலத்தில் சவால்களைச் சமாளித்து மீள்வதற்குத் தாராளவாத ஜனநாயக நாடுகள் செய்த முக்கியமான விஷயம், தங்கள் சொந்த நாடுகளை வளமானவையாகவும், சுதந்திரமானவையாகவும், வசீகரமானவையாகவும் மாற்றியதுதான். இந்த முறையும் இந்த வழிமுறைதான் செல்லுபடியாகும்.

மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு நாடு திரும்பிய சீன மாணவர்களின் குணநலன்கள் குறித்து, எனது முன்னாள் மாணவர் ஒரு அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறார். அவர் முன்வைக்கும் கருத்து இதுதான். நாம் நினைத்திருப்பதுபோல மேற்கத்திய நாடுகளில் வசித்த அனுபவங்கள், மேற்கத்திய தாராளவாத ஜனநாயகக் கொள்கையின் முழுமையான ஆதரவாளர்களாக சீன மாணவர்களை மாற்றிவிடுவதில்லை. மாறாக, இரண்டு தரப்பையும் கடுமையாக விமர்சிப்பவர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களைச் சமாதானப்படுத்துவது மேற்கத்திய நாடுகளின் வெளியுறவுக் கொள்கை அல்ல. அவற்றின் உள்நாட்டுச் செயல்பாடுகள்தான்!

- திமோதி கார்டன் ஆஷ்

நன்றி: ‘தி கார்டியன்’ (பிரிட்டன் நாளிதழ்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x