

பிள்ளைகளே பெற்றோரைக் காப்பகங்களுக்கு அனுப்பும் இந்த காலத்தில் சென்னையில், அப்படி கைவிடப்பட்ட முதியவர் களுக்கு மகனாக இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்துகொண் டிருக்கிறார் ஸ்ரீதர்.
30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ‘இண்டியா இன்ஃபோலைன்’ என்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் துணைத் தலை வராக இருந்தவர் ஸ்ரீதர். தனக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ஏற்காமல், ‘ஊதியத்துக்காக உழைத்தது போதும்.. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எனது ஆத்ம திருப்திக்காக பணி செய்ய நினைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டார். ஸ்ரீதரை இந்த சிந்தனைக்குத் தள்ளியது எது.. ஆத்மதிருப்திக்கு அப்படி அவர் என்ன செய்தார்? அவரே சொல் கிறார்.
காஞ்சி மகான் சொன்னது..
‘‘மனிதனின் உடம்பில் இருந்து ஆன்மா பிரிந்துவிட்டாலும் உடலுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். அது தெய்வத்தின் கோயிலுக்குச் சமமானது’’ என்று காஞ்சி மகா பெரியவா சொல்லியிருக்கிறார். இப்போது நான் செய்யும் சேவைக்கு அதுதான் அடித்தளம். இன்றைக்கு, பெற்றோரைப் போற்றிப் பாதுகாக்க பிள்ளை களுக்கு சகிப்புத்தன்மை இல்லை.
நம் பெற்றோரை நாம் பாதுகாத்தால்தான் நம் பிள்ளைகள் நம்மைப் பாதுகாப்பார்கள். 1985-ல் காஞ்சி பெரியவாவிடம் ஆசிபெற்று இந்த சேவையைத் தொடங்கினேன். அப்போது இந்த அளவுக்கு ஆதரவற்றோர் இல்லங்கள் இல்லை. ‘கைவிடப் பட்ட பெண்கள் இல்லம்’ என்று ஒன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்தது. அங்கு இறந்துபோன ஒரு அம்மையாரின் உடலை அடக்கம் செய்து என் பணியைத் தொடங்கினேன்.
கடலில் கரைப்பது வரை..
கடந்த 30 ஆண்டுகளில், ஆதரவற்றோர் 1434 பேருக்கு இறுதிச் சடங்குகளை செய்திருக் கிறேன். ஒரு மகன் இருந்தால் எப்படிச் செய்வாரோ, அதேபோல நானே கொள்ளி வைத்து அஸ்தியை எடுத்து கடலில் கரைத்திருக்கிறேன்.
இந்தச் சேவையை இன்னும் கொஞ்சம் விரிவாகச் செய்ய வேண்டும் என்பதற்காக 12 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அநாதை பிரேத கைங்கர்ய டிரஸ்ட்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். சேவை மனமுள்ள பலரும் அதில் உறுப்பினராகச் சேர்ந் தார்கள். சில வீடுகளில் இறந்த வர்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட வசதி இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு நாங்களே நிதியுதவியும் செய்ய ஆரம்பித்தோம். இப்போது, ஆதர வற்றோர் உடல்களை அடக்கம் செய்ய போலீஸார்கூட எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள்.
ஐ.டி. இளைஞர்களின் ஆர்வம்
எங்களது சேவைகளைப் பார்த்துவிட்டு ஐ.டி. துறையில் உள்ள சுமார் 30 இளைஞர்கள் எங்களோடு சேர்ந்திருக்கிறார்கள். சென்னைக்குள் எந்த இடத்தில் உடல் அடக்கம் செய்யவேண்டி இருந்தாலும் அவர்கள் ஓடிவந்து விடுகிறார்கள். ‘இதுவரை நீங்கள் பார்த்தது போதும். இனி நாங்கள் செய்கிறோம் அந்த வேலையை’ என்று அவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது எனக்குப் பின்னாலும் இந்தச் சேவையைத் தொடர்வதற்கு நல்ல இதயங்களை உருவாக்கிவிட்ட திருப்தி எனக்கு இருக்கிறது.
‘பிள்ளை மனம் கல்லு’
பல முதியவர்கள் தங்களுக்கு மகன், மகள் இருப்பதை மறைத்து, தாங்கள் ஆதரவற்றவர்கள் என்று கூறி இல்லங்களில் சேர்வார்கள். இறந்த பிறகு, அவர்களுக்கு மகனோ, மகளோ இருப்பது தெரிந்து தகவல் கொடுத்தால், ‘‘உயிருடன் இருக்கும்போதே எங்களுக்குள் எந்த தொடர்பும் இருந்ததில்லை. இறந்த பிறகு என்ன செய்யச் சொல்றீங்க? நீங்களே அடக்கம் பண்ணிடுங்க’’ என்று இரக்கமே இல்லாமல் சொல்லும்போது, மனுஷனாகப் பொறந்ததை நினைச்சு வெட்கப் பட வேண்டி இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 3 சதவீதம் வரை சமுதாயப் பணிக்காக செலவிட வேண்டும் என அண்மை யில் மத்திய அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. இதன்படி இந்தியா முழுக்க ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடியும். விரைவில், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து பள்ளிக்கூடம், மின்சாரம், மருத்துவமனை, பள்ளிகள் என மக்கள் நலத் திட்டங்களை குக்கிராமங்களுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் சேவயில் இறங்க இருக்கிறோம்’’ நம்பிக்கை துளிர்க்க சொன்னார் ஸ்ரீதர். தொடர்புக்கு: 9840744400.