Published : 18 May 2020 07:41 am

Updated : 21 May 2020 08:49 am

 

Published : 18 May 2020 07:41 AM
Last Updated : 21 May 2020 08:49 AM

வேளாண் சுற்றுலாவுக்குத் தமிழ்நாடு தயாராகட்டும்!

agro-tourism

செ.சரத்

கரோனாவால் நீண்ட காலத்துக்குப் பாதிப்பைச் சந்திக்கும் துறைகளுள் ஒன்று சுற்றுலா என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள். சுற்றுலா மூலமாகக் கணிசமாக முதலீட்டும் நாடாக இந்தியா இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டின் பங்கு கணிசமானது. எனவே, சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதில் நீண்ட கால நோக்கில் தமிழ்நாடு சிந்திக்க வேண்டும். கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் வேளாண் சுற்றுலா தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும்.

வேளாண் சுற்றுலாவுக்கு உலகச் சுற்றுலா நிறுவனம் வழிகாட்டுகிறது. வேளாண் பண்ணையில் சுற்றுலாவாசிகளைத் தங்க வைத்து, அவர்களுக்கு உணவளித்து, வேளாண் பணிகளில் ஈடுபட வைத்து, வேளாண்மைக்கு மேன்மையூட்டச் சொல்கிறது. தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலா மிகப் பெரும் வெற்றியடைவதற்கான சாத்தியம் உண்டு. இது எல்லாத் தரப்பினரையும் கவரும் திட்டமும்கூட. வேளாண் அறுவடையைக் கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்தவற்றை சுற்றுலாவாசிகளே அறுவடை செய்வது, பண்ணைக் குட்டைகளில் மீன் பிடிப்பது, ஊரக வேளாண் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புறக் கைவினைக் கலைஞர்களிடம் பொருட்கள் வாங்குவது, மாட்டுவண்டியில் சவாரி செய்வது, மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த வகுப்புகளைக் கற்றுக்கொடுப்பது எனப் பலவற்றையும் உள்ளடக்கிய திட்டம் இது.


1985-ல் இத்தாலிய தேசிய சட்டக் கட்டமைப்பானது வேளாண் சுற்றுலாவை உருவாக்கியது. இதன் பிறகு, இயற்கையை நேசிக்கும், வேளாண்மையை விரும்பும் சுற்றுலாவாசிகளின் வரவு அதிகரித்தது. இத்தாலிய விவசாயிகளின் வருமானமும் பெருக ஆரம்பித்தது. விவசாயிகளும் கூடுதல் ஆர்வத்துடன் பல புதுமைகளைப் புகுத்தினர். நாளடைவில், வேளாண்மைச் சுற்றுலாவுக்கே பெயர்போன ஒன்றாக இத்தாலியில் உள்ள டஸ்கனி மாறியது.

இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மையை வலுப்படுத்தும் அம்சமாக வேளாண் சுற்றுலா இருக்கும் என்பதில் எவ்வித இரண்டாம் அபிப்பிராயமும் கிடையாது. மஹாராஷ்டிர மாநிலத்தில் வேளாண்மைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பாண்டுரங் தவாரேவால் 2004-ல் ஆரம்பிக்கப்பட்டது. முன்னோடித் திட்டமாக மஹாராஷ்டிரத்தில் உள்ள பாரமதி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. அதற்காக 500 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்கம் முதலே அங்குள்ள விவசாயிகள் தங்கள் வருமானத்தில் 25% கூடுதலாகப் பெற்றனர்.

வேளாண்மைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது விவசாயிகளுக்குத் தொடர்ந்து பயிற்சியளிப்பது, அங்குள்ள இளைஞர்களை வழிகாட்டியாய் நியமிப்பது, சுற்றுலாவாசிகளுக்கு உணவு தயாரிக்க மகளிர் சுயஉதவிக் குழுக்களைப் பணியமர்த்துவது எனத் தீவிரமாகச் செயலாற்றியது. இவையெல்லாம் போக, மாநில அரசுடன் தொடர்பு ஏற்படுத்தி புனே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாயிகளுக்குக் கடனும் கொடுக்கப்பட்டது. விளைவாக 2014, 2015, 2016-ம் ஆண்டுகளில் முறையே 4, 5.3, 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்தனர்; ரூ.3.57 கோடி வருமானம் ஈட்ட முடிந்தது. முக்கியமாக, பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அரசும் பேரீச்சம் பழம் சார்ந்த வேளாண்மைச் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. பஞ்சாப், கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் சில தனியார் அமைப்புகள் வேளாண் சுற்றுலாவைச் செயல்படுத்திவருகின்றன.

நம் தமிழ்நாடு கலாச்சாரத்துக்கும் வேளாண்மைக்கும் இயற்கை எழிலுக்கும் பெயர்போன மாநிலம். 2017-ல் இந்திய அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டுக்குத்தான் முதலிடம். இப்படி இருக்க, தமிழ்நாட்டில் வேளாண்மைச் சுற்றுலா மேம்பட்ட நிலையில் இல்லை என்பது வேதனைக்குரியது. வேளாண் சுற்றுலா புதிய வேலைவாய்ப்புகளை உண்டாக்கும். கிராமப்புற வாழ்க்கையும், அதோடு தொன்றுதொட்ட விவசாயத்தையும், அதன் கலாச்சாரம் சார்ந்த நடைமுறைகளையும் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். கிராமவாசிகளையும் நகரவாசிகளையும் பிணைக்க முடியும்; அதன் வழியாக மிகப் பெரும் விழிப்புணர்வை மக்களிடையே பரவலாக்க முடியும். விவசாயத்தின் நடைமுறைகளையும் அதன் மதிப்பையும் சுற்றுலாவாசிகளிடத்தில் ஏற்படுத்த முடியும்.

- செ.சரத், வேளாண் ஆராய்ச்சியாளர்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: saraths1995@gmail.com


வேளாண் சுற்றுலாஉலகச் சுற்றுலா நிறுவனம்பொருளாதார ஆய்வாளர்கள்வேளாண் பண்ணைAgro tourismSPECIAL ARTICLES

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x