Published : 09 Aug 2015 11:42 AM
Last Updated : 09 Aug 2015 11:42 AM

எங்களோட காட்டை எங்ககிட்ட கொடுங்க!

| ஆகஸ்ட் 9 - பழங்குடியினர் தினம் |

பச்சைப் போர்வைக்கு நடுவே அந்த இடத்தைச் சுட்டிக்காட்டினார் மல்லிகா. “இப்பத்தாங்க இதை வாழகிரின்னு சொல்லுறாங்க. அந்தக் காலத்துல இதுக்குப் பேரு திருநீத்துப்பாறை. இங்க இருக்குற பாறையிலேருந்து திருநீறு வருமாம். ஆனா, இப்ப அதெல்லாம் கெடையாது.” இடம்: கொடைக்கானல் வாழையாறு.

“தாத்தா, ஆத்தாவெல்லாம் மலையில அலைக்குள்ளதான் (கல் பொந்து) இருந்தாங்க. நான் பொறந்ததுகூட அலைக்குள்ளதான். காணும் மொளகா, சீனா தக்காளி, திம்பிளிக் கீரை, இண்டாங்கீரை இதெல்லாம் அப்ப எங்களுக்குத் தாராளமா கெடைக்கும். பிரசவமானவங்க திம்பிளிக் கீரையை வெறும் வயித்துல சாப்பிட்டா நல்லா பால் சுரக்கும். வயித்துல இருக்கிற கசடெல்லாம் கழிஞ்சுரும். வாயுத் தொல்லை இருக்கவங்களுக்கு இண்டாங்கீரை குல தெய்வம் மாதிரிங்க. இப்ப அதெல்லாம் எங்களுக்கு எட்டாக் கையி.

காட்டுக்குள்ள போயி கால் மரம் எடுத்துட்டு வந்து வீடு கட்ட முடியல. புள்ளைங்களுக்கு வழியான ஒரு பள்ளியோடம் கெடையாது; பால்வாடி மட்டும்தான். இழுத்துக்க பறிச்சிக்கனு கெடந்தா தூக்கிட்டு ஓட ஒரு ஆஸ்பத்திரி இங்க இல்ல. பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற பண்ணைக்காடு ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும். அதனால, பிரசவமெல்லாம் நாங்களே வீட்டுல பாத்துக்கிருவோம். ஆகலைன்னா தான் அங்க போவோம்.

வள்ளிக்கெழங்கும் தேனும் எங்களுக்கு வருசத்துக்கு ஒரு வெள்ளாம. அதுதான் எங்களுக்கு பசி அமத்துறது. மல இல்லாம நாங்க இல்ல; நாங்க இல்லாம மல இல்ல. எங்களோட சொத்தே இந்த மலதான். இதுமட்டும் இருந்தா போதும், வேறெதுவும் எங்களுக்கு வேணாம்’’ என்கிறார் மல்லிகா.

எங்கள் பகுதியில இருக்கற பதினாறு ஆதிவாசிகள் குடியிருப்புகள்ல 2,350 பேர் இருக்காங்க. எங்களுக்கு 25 வருசத்துக்கு முந்தி தகர ஷெட்டு போட்டுக் குடுத்தாங்க. பழய காலத்துல ஓலயில குடிச கட்டுவோம். இப்ப அதயெல்லாம் டிப்பார்ட்மெண்ட்ல அனுமதிக்கிறதில்ல.

குடியிருப்புப் பகுதியிலயிருந்து காட்டுக்குள்ள போகணும்னாகூட பாரஸ்ட் அனுமதி வேணும். எங்க பேரச் சொல்லி அரசுகிட்ட நிறைய நிதி வாங்குறாங்க. அதெல்லாம் எங்களுக்குக் கெடைக்கறதில்ல. போன மாசம் ஜெயந்தின்ற பொண்ண கரடி அடிச்சு கண் பாதிச்சிருச்சு. அதுக்குக்கூட சரியான உதவி இல்ல. மனிதன விடவும் மிருகங்களுக்குத்தான் பாரஸ்ட்காரங்க முக்கியத்துவம் கொடுக்குறாங்க. எங்களோட தானே இந்தக் காடு; அத எங்ககிட்ட குடுக்கச் சொல்லுங்க. அதுல என்ன கெடைக்குதோ அதவெச்சு நாங்க பொழச்சுக்குறோம்’’ என்கிறார் வால்பாறை ரவி.

உலகின் மொத்த ஆதிவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் (சுமார் 10 கோடி) இந்தியாவில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதில் சுமார் 8.5 லட்சம் பேரை தமிழகம் கொண்டிருக்கிறது. இருந்தும் தனித்தன்மை மாறாமல் இவர்களை முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை எந்த அரசும் எடுக்கவில்லை என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x