

லண்டன் போக்குவரத்துக் கழகம் கடந்த திங்கட்கிழமை அன்று ஊபர் நிறுவனத்தின் உரிமையை ரத்துசெய்துள்ளது. ஊபர் காரோட்டிகளின் கணக்கில் அங்கீகாரம் பெறாத காரோட்டிகள் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றி கார் ஓட்டுவது இதற்கான காரணங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற, காப்புறுதி செய்யப்படாத 14 ஆயிரம் பயணங்கள் லண்டனில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மரபான கார் நிறுவனங்கள் தங்கள் காரோட்டிகளின் பின்புலத்தைச் சரிபார்ப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளும் நிலையில், லண்டன் ஊபர் அதில் அக்கறை செலுத்தவில்லை என்று லண்டன் போக்குவரத்துக் கழகம் குற்றம்சாட்டியிருக்கிறது. லண்டனில் டாக்ஸி ஓட்டுநர் உரிமம் வாங்குவது எளிதல்ல. ஓட்டுநராக விரும்புபவர் லண்டன் சாலைகளைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டும்.
எல்லா வழித்தடங்கள், வீதிகள், ஆயிரக்கணக்கான பொது அடையாளச் சின்னங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம், மக்களின் பாதுகாப்புதான். அந்தப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் ஊபரின் உரிமம் ரத்துசெய்யப்பட்டதற்கான முக்கியமான காரணம். இந்தியா போன்ற நாடுகளில் ஆழமாக வேரூன்றத் தொடங்கியிருக்கும் வாடகை கார் நிறுவனங்கள் முறையாகத்தான் செயல்படுகின்றனவா என்பதை நமது அரசு உறுதிசெய்கிறதா?
அண்டார்க்டிக்காவில் ஒரு அதிசயம்!
புவியில் மனித நிழல் வெகு குறைவாக விழும் இடங்களுள் ஒன்று அண்டார்க்டிக்கா கண்டம். ஏனைய இடங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளின் தாக்கம் அங்கும் உண்டு. பருவநிலை மாறுதல் காரணமாக அண்டார்க்டிக்காவின் பனி உருகிக்கொண்டிருக்கிறது.
அண்டார்க்டிக்காவைச் சென்று சேர்வதற்கு பிரிட்டனிலிருந்தே நான்கைந்து விமானங்களைப் பிடிக்க வேண்டிவரும்; அங்கே உணவும் கொண்டுசெல்ல வேண்டும்; அங்குள்ளவர்கள் ஏற்படுத்தும் கழிவுகள் தென்னாப்பிரிக்கா, தென்னமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய இடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.
கூடவே, மின்சக்திக்காக மின்னியற்றி வேறு அண்டார்க்டிக்காவில் தேவைப்படும் இவையெல்லாம் ஏற்படுத்தும் கரிமத் தடமானது (Carbon footprint) கணிசமானது. இச்சூழலில்தான் அண்டார்க்டிக்காவில் முதன்முறையாக பசுமைவழி ஆராய்ச்சி நிலையம் ஒன்று உருவாகியிருக்கிறது.
‘பிரின்ஸஸ் எலிஸபெத் அண்டார்க்டிக்கா ஆராய்ச்சி நிலையம்’தான் அது. முழுக்கவும் சூரிய மின்தகடுகளாலும் காற்றாலைகளாலும்தான் அங்கு மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இதன் விளைவாக, அங்குள்ள சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. அண்டார்க்டிக்காவிலேயே பூஜ்ஜிய கரிமத் தடம் சாத்தியமாகியிருக்கும்போது, மற்ற இடங்களில் சாத்தியமாகாதா என்று அங்குள்ள அறிவியலாளர்கள் கேட்கிறார்கள்.
ஸொமேட்டோவுக்கு எதிராகப் போர்க்கொடி
இப்போதெல்லாம் ஓட்டலில் போய்ச் சாப்பிடுவதைவிட உணவுச் சேவை செயலிகள் மூலம் வீட்டுக்கே உணவை வரவழைத்துச் சாப்பிடுவதே அதிகமாகியிருக்கிறது. இது பல கோடி ரூபாய் கொழிக்கும் வணிகமாகவும் உருவெடுத்திருக்கிறது. உணவுச் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஸொமேட்டோவுக்கு எதிராக மும்பையில் உள்ள ஓட்டல்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. ஸொமேட்டோவின் ‘கோல்டு சர்வீஸ் ஆன் டெலிவரி’ என்ற திட்டத்துக்குத்தான் இந்த ஓட்டல்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.
இந்தத் திட்டத்தின் சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் அவர்கள் ஒரு உணவு விடுதிக்குச் சென்றால், உணவும் பானங்களும் இலவசமாக வழங்கப்படும். பிற்பாடு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி வீட்டுக்கு வரவழைக்கப்படும் உணவும் இலவசமாக வழங்கப்படும் என்று ஆனது.
இதனால், ஸொமேட்டோ நிறுவனத்துக்குத்தான் 30% வரை லாபமே தவிர, தங்களுக்கு நஷ்டம்தான் என்பது அந்த ஓட்டல்களின் குரல். இது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில்தான் ஸொமேட்டோ நிறுவனத்துக்கு இனி தாங்கள் சேவை அளிப்பதில்லை என்று மும்பை ஓட்டல்களின் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. உணவுச் சேவையின் சந்தாதாரர்கள்தான் தற்போது நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள்.