Published : 17 Sep 2019 07:38 am

Updated : 17 Sep 2019 07:38 am

 

Published : 17 Sep 2019 07:38 AM
Last Updated : 17 Sep 2019 07:38 AM

360: இந்தி மாநிலத்திலேயே 10 லட்சம் பேர் தோல்வி!

state-of-hindi

இந்தி மாநிலத்திலேயே 10 லட்சம் பேர் தோல்வி!

இந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் இந்தித் தேர்வு எழுதிய 10-வது, 12-வது வகுப்பு மாணவர்களில் தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சம். கடந்த ஏப்ரல் 26-ல் தேர்வு முடிவுகள் வெளியாயின. 10-வது, 12-வது வகுப்புகளில் இந்தித் தேர்வு எழுதியவர்களில் 20% பேர் அந்தப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இந்த விஷயத்தை அப்போது யாரும் கவனிக்கவில்லை என்றாலும், தற்போது இந்தி குறித்த விவாதங்களில் இது இடம்பிடித்திருக்கிறது.

10-வது வகுப்பு மாணவர்களில் 5.74 லட்சம் பேரும், 12-வது வகுப்பில் 1.93 லட்சம் பேரும், 12-வது வகுப்பில் பொதுப்பாடப் பிரிவில் வரும் இந்தியில் 2.30 லட்சம் பேரும் தேர்ச்சி பெறவில்லை. இப்படி மொத்தம் தவறிய மாணவர்கள் எண்ணிக்கை 9,97,948. இந்தி பேசும் மாநிலங்கள் என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்குவருவது உத்தர பிரதேசம்தான். அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்தான் நாடு முழுக்க இந்தி படிக்க வேண்டும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். அங்கேயே இப்படி!

திக்குமுக்காடும் திரிணமூல் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள்

சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்குள் இழந்த செல்வாக்கை மீட்க, கிராமங்களுக்குச் செல்லுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அப்படி மக்களைச் சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள், மக்களுடைய கோபாவேசமான தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ளனர். மானஸ் மஜும்தார் என்ற எம்.எல்.ஏ., ஹூக்ளி மாவட்டத்தின் கமால்பட்டி கிராமத்துக்கு ஆகஸ்ட் 13-ல் சென்றார். சமூகநலத் திட்டங்களின் பலனைக் கொடுக்க கட்சிக்காரர்கள் எப்படி கமிஷன் வாங்குகிறார்கள், அப்படி வாங்கினாலும் பலனைத் தராமல் ஏமாற்றுகிறார்கள் என்று அடுக்கடுக்காகப் பலர் குற்றஞ்சாட்டினர்.

100 நாள் வேலைத் திட்டத்தில் தங்களுக்கு வேலையனுமதி அளித்துவிட்டு, அதற்கான ஊதியத்தை வேறொருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்ததையும் தங்களைச் சந்திக்க வரும் தலைவர்களிடம் மக்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர். மேலும், தொகுதிகளில் எந்த வசதிகளுமே செய்துதரப்படவில்லை என்று சொல்லி, இளைஞர்கள் தலைவர்களை மடக்கியிருக்கிறார்கள். திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுடைய தொகுதிகளுக்குப் போயே பல ஆண்டுகள் ஆகின்றன என்பதையே இந்தக் குற்றச்சாட்டுகளும் புகார்களும் உணர்த்துகின்றன என்று மேற்கு வங்கத்தின் எதிர்க் கட்சியினர் திரிணமூல் காங்கிரஸைச் சகட்டுமேனிக்கு விமர்சித்திருக்கிறார்கள்.

இந்தியா, பாகிஸ்தானுக்குப் பொது எதிரி!

காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையில் உறவு மிகவும் சீர்கெட்டிருந்தாலும், ஒரு ‘பொது எதிரி’யை ஒழிக்க இப்போது கைகோத்திருக்கிறார்கள். மாதம் ஒரு முறை என்று அடுத்த ஆறு மாதங்களுக்கு இரு நாடுகளின் விஞ்ஞானிகளும் சந்தித்துப் பேசுகிறார்கள். அவ்வளவு பெரிய எதிரியா? உருவத்தில் அல்ல, எண்ணிக்கையில். ஆம், அவர்கள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கும் வெட்டுக்கிளிகள். ஒவ்வொரு வெட்டுக்கிளியும் வெறும் 2 கிராம் எடையுள்ளவை. ஆனால், இவை ஒரு படையாக வரும்போது அதில் 100 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும்.

செங்கடலோரம் எரித்ரியா, சூடான் சமவெளிகளில் பிறந்து, அங்கிருந்து பறந்து வந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சிந்து மாகாணங்களில் விளைபயிர்களைச் சேதம் செய்துவிட்டு ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பிகானீர், பார்மர் மாவட்டப் பயிர்களுக்குக் குறிவைத்தன. பாகிஸ்தானில் 2,46,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பருத்திப் பயிர்கள் இந்த வெட்டுக்கிளிகளால் நாசமாகிவிட்டன. பருத்தியில் 23% நாசமாகிவிட்டது. பாகிஸ்தான் அளித்த எச்சரிக்கையால் இந்தியாவின் ஜெய்சால்மர், பார்மர், பிகானீர், ஜலோர், பணஸ்கந்தா, ஜோத்பூர் மாவட்டங்களில் 19,153 ஹெக்டேர் நிலங்களில் வெட்டுக்கிளிகளைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன.

ஜெயமோகனைக் கெளரவிக்கிறது அமெரிக்கா!

அமெரிக்கா சென்றிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனை வடக்கு கரோலினாவின் வேக் கவுண்டியின் நூலகம் வரவேற்று சிறப்பு விருந்தினராக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்துள்ளது. கடந்த 14-ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில், ஜெயமோகன் தனது இலக்கியப் பயணத்தைப் பற்றியும் இலக்கியத்தின் எதிர்காலத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார். எழுத்துத் துறைக்கு அவர் எப்படி வந்தார், யாரிடமிருந்தெல்லாம் தாக்கம் பெற்றார், அமெரிக்க இலக்கியம் குறித்தும் உலக இலக்கியம் குறித்தும் தனது பார்வை என்ன என்பதைப் பற்றியெல்லாம் அவர் பேசினார்.

வாசகர்களின் கேள்விக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரே தேசம்... ஒரே மொழி குறித்து அவர் என்ன நினைக்கிறார், அமெரிக்காவில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் இலக்கியத்தை எப்படி அறிமுகப்படுத்துவது, அறம் வரிசைக் கதைகளைப் போல இன்னொரு முறை அவர் எழுதுவாரா என்பது போன்ற கேள்விகளை வாசகர்கள் கேட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்பதிவுசெய்து வாசகர்கள் வந்திருக்கிறார்கள் என்பது சிறப்பு. தமிழ் எழுத்தாளர் ஒருவர் சிறப்பு விருந்தினராக இந்த நூலகத்துக்கு வருகை தந்திருப்பது இதுவே முதன்முறை!

இந்தி360இந்தி மாநிலம்இந்தித் தேர்வுதேர்வு முடிவுகள்எம் எல் ஏஅமைச்சர்கள்வேலைத் திட்டம்இந்தியாபாகிஸ்தான்அமெரிக்காஜெயமோகன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author