Published : 16 Jul 2015 10:30 AM
Last Updated : 16 Jul 2015 10:30 AM

அலையடித்த ஏரியில் புழுதிப் புயல் வீசும் பரிதாபம்

கண்டராதித்த சோழனின் செம்பியன் மாதேவி பேரேரி

‘மக்களுக்கு நெல்லும் நீரும் தான் உயிர். ஆனால், உயிரைவிடவும் ஒரு மன்னனின் சிறந்த ஆட்சியே உயர்வானதாகக் கருதப்படும். அந்த மன்னன் சரியாக நிர்வாகம் செய்தால் நீருக்கோ அது விளைவிக்கும் நெல்லுக்கோ பஞ்சமிருக்காது’ - மோசி கீரனாரின் இந்த புறநானூற்று வரிகளுக்கு இலக்கணம் தந்த சோழப் பேரரசர்களின் செம்மையான நீர் மேலாண்மைக்கு இன்னொரு அடையாளம்தான் செம்பியன் மாதேவி பேரேரி.

மனைவி பெயரில்..

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது கண்டராதித்தம் கிராமம். இங்குதான் செம்பியன் மாதேவி பேரேரி அமைந்திருக்கிறது. பராந்தக சோழனின் இளைய மகன் கண்டராதித்தன் கி.பி. 950-லிருந்து 958 வரை சோழ சாம்ராஜ் யத்தை ஆண்டான். தனது இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியின் விருப்பத்தை ஏற்று இவன் வெட்டிய ஏரிதான் செம்பியன் மாதேவி பேரேரி. ஆவணங்களில் இதற்கு கண்டராதித்தம் ஏரி என்றும் குறிப்புகள் உள்ளன.

இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 415.03 ஏக்கர்கள். பதிவு பெற்ற ஆயக்கட்டுப் பகுதி 4532.99 ஏக்கர். கொள்ளிடத்திலிருந்தும் மழைக் காலங்களில் உபரி நீரையும் சுமந்து வரும் நந்தியாறும் கூழையாறும்தான் இந்த ஏரிக்கான நீர்வரத்து. இது சுமார் 20 கிராமங்களின் அடிப்படை வாழ்வாதாரம். இதன் மதகு ஒன்றுக்கு, தான் சீராட்டி வளர்த்த ராஜராஜனின் பெயரால் ராஜராஜன் தூம்பு என்று பெயர் வைத்திருக்கிறான் கண்டராதித்தன்.

வேத விற்பன்னர்களுக்காக..

சிவத்தொண்டின் மீது அதீத நாட்டம் கொண்ட கண்டராதித்தன் வேத விற்பன்னர்களுக்காக உருவாக்கிய பிரம்மதேயமே கண்டராதித்த சதுர்வேதி மங்களம் என்ற கண்டராதித்தம். இங்கு வசித்த வேத விற்பன்னர்களுக்கு வீடு மற்றும் நிலங்களைக் கொடுத்த மன்னன், நிலங்கள் செழிக்க செம்பியன் மாதேவி பேரேரியையும் வெட்டிக் கொடுத்தான்.

கண்டராதித்தனின் படைத் தளபதி மதுராந்தக பிரம்மராயர். இவரது மனைவி ராமன் சோழர்குல சுந்தரி என்பவர் கொடையாக கொடுத்த ஐம்பது பொற்காசுகளை மூலதனமாகக் கொண்டு இந்த ஏரி தூர்வாரப்பட்டதாக திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் உள்ள முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு தகவல் சொல்கிறது.

மண் மேவிய ஏரி

லால்குடி பகுதியிலுள்ள நந்தியாறு மற்றும் கூழையாறு அணைக்கட்டுகளில் சேகரமாகி வரும் தண்ணீர் நந்தியாறு வழியாக 7 மைல் 2 பர்லாங் தூரம் பயணித்து செம்பியன் மாதேவி பேரேரிக்கு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதம் கழித்த பிறகே ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும். ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி 17.64 சதுர கிலோ மீட்டர்கள். விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பதற்காக ஏரியின் கிழக்குப்பகுதியில் 7 மதகுகளும் வடக்குப் பகுதியில் ஒரு மதகும் உள்ளன. ஏரியிலிருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 47.04 கன மீட்டர் அளவுக்கு தண்ணீரை வெளியேற்ற முடியும். ஏரியின் மொத்த ஆழம் 4.5 மீட்டர்கள். இப்போது இதில் சுமார் 1.5 மீட்டர் உயரத்துக்கு வண்டல் மண் மேவிக் கிடக்கிறது.

பல பெருமைகளை அடைகாத்து நின்ற இந்தப் பேரேரி இன்று அடையாளத்தை தொலைத்து நிற்கிறது. நீர்வரத்து இல்லாததால் சுற்றுப்புற பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதுபற்றி கூறுகிறார் மண்ணின் மைந்தரும் செய்தி மற்றும் சுற்றுலா துறையின் முன்னாள் செயலாளருமான ராமு ஐ.ஏ.எஸ். “எங்களது சிறு வயதில் இந்த ஏரி கடல் மாதிரி தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும். வெள்ளப்பெருக்கு காலங்களில் கொள்ளிடத்தில் அளவு கடந்து செல்லும் வெள்ளத்தைத் தாங்கும் வெள்ளத் தடுப்பாகவும் ஏரி இருந்தது. ஆனால், கடந்த முப்பது நாப்பது வருடமாக தண்ணீர் வரத்து குறைந்ததால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துகொண்டே வருகிறது.

1999-ல் நான் சுற்றுலா துறை செயலாளராக இருந்தபோது, இந்த ஏரியை தூர்வாரிச் செப்பனிட்டுச் சுற்றுலா தலமாக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது’என்கிறார்.

‘டோக்கியோ பல்கலைக்கழக மாணவர்கள் தந்திருக்கும் ஆய்வறிக்கையின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை இனியும் தூர்வாராமல் விட்டால் விரைவில் இந்த மாவட்டத்து மக்கள் தண்ணீருக்கும் உணவுக்கும் அல்லாடும் நிலை உருவாகும்’என எச்சரிக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் இல.தியாகராஜன்.

அருமை தெரிந்த அன்பில்

திருமழபாடி தமிழ்ச்சங்க தலைவர் முருகேசன் மற்றும் அரியலூர் மாவட்ட மீன் வளர்ப்போர் சங்க தலைவர் அ.எழிலன்பன் ஆகியோர் கூறுகையில், “1972-ல் கடும் பஞ்சம் நிலவியபோது வேலைக்கு உணவுத் திட்டத்தில் இந்த ஏரியை ஊர் மக்களை வைத்தே தூர்வாரினார்கள். அப்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கம் விவசாய மந்திரியாக இருந்ததால் இந்த ஏரியின் முக்கியத்துவம் அவருக்கு தெரிந்திருந்தது. அடுத்ததாக 1989-ல் திமுக ஆட்சியில் மீண்டும் ஏரி துர்வாரப்பட்டது. அதன்பிறகு, நெய்வேலி காட்டாமணக்குச் செடி முளைத்து ஏரியே காடாகிப் போனதால் 1993-ல் பொதுமக்களே திரண்டு அவைகளை அழித்தோம்’’ என்றார்கள்.

காக்க வேண்டும்

இந்திய கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு அறக்கட்டளையின் (இன்டாக்) ஆயுள் உறுப்பினர் வழக்கறிஞர் விஸ்வநாதன் கண்டராதித்தன், ‘ஏரியை தூர்வாரக்கோரி தொடர்ந்து 2006-லிருந்து மனு கொடுக்கிறோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க செம்பியன் மாதேவி பேரேரியின் தூர்வாரும் பணிக்கு இந்த நிதி ஆண்டிலேயே முன்னுரிமை அளிக்க இயலும் என்று பொதுப்பணித் துறைச் செயலர் தெரிவித்துள்ளார்’என்று கடந்த திமுக ஆட்சியில் திட்டக் குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் 16-06-2006-ல் எனக்கு கடிதம் அனுப்பினார். ஆனாலும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வீராணம், பொன்னேரி, செம்பியன் மாதேவி பேரேரி இம் மூன்றுமே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏரிகள் என்பதால் இவற்றை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும்.’’ என்று சொன்னார்.

ஏரிக்குள் ஒப்புக்கு நடைபெறும் தூர்வாரும் பணி.

பொதுப்பணித் துறை விளக்கம்

ஏரி முழுமையாக தூர் வாரப்படாததற்கு பொதுப்பணித் துறையினர் சொன்ன காரணம் விநோதமாகவே இருந்தது. ‘இந்த ஏரியை முழுமையாக தூர்வார வேண்டுமானால் ரூ.100 கோடிக்கு மேல் செலவாகும். இதுபோல பெரிய ஏரிகள் தமிழகத்தில் நிறைய உள்ளன. அத்தனை ஏரிகளையும் தூர்வார நிதிக்கு எங்கே போவது?

ஏரிகளைப் பொறுத்தவரை, அமைப்பு முறையிலான ஏரிகள் (System Lakes) அமைப்பு முறை அல்லாத ஏரிகள் (Non-System Lakes) என இரண்டு பிரிவாக வைத்திருக்கிறோம். அமைப்பு முறையிலான ஏரிகளுக்கு மழை பெய்தாலும் பொய்த்தாலும் ஆற்றுத் தண்ணீர் கொண்டுவரப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத் தப்படும். அமைப்பு முறை அல்லாத ஏரிகளுக்கு மழை பெய்தால்தான் தண்ணீர் வரும். இந்த ஏரிகளை முறையாக பராமரித்தால் ஓராண்டில் பெய்யும் மழைத் தண்ணீரை இரண்டு ஆண்டு தேவைக்குக் கூட தேக்கி வைத்துவிடலாம். எனவே தான், தூர்வாருவதில் அமைப்பு முறை அல்லாத ஏரிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்’என்கிறது பொதுப்பணித்துறை.

“அஞ்சு வருசத்துக்கு முந்தி, ஏரியைத் தூர்வாரி மண்ணை விவசாயிகள் செலவில் அள்ளிக் கொண்டு போய் வயல்களுக்கு உரமாக போட்டுக் கொள்கிறோம்’ என்று சொன்னோம். ’அப்படியானால் வயல்களுக்கான பட்டாதாரர்கள் அத்தனை பேரிடமும் இதற்கு ஒப்புதல் கையெழுத்து வாங்கிக் கொடுங்கள் என்று சொன்னார்கள். அப்படி கையெழுத்து வாங்கிக் கொடுத்தும் தூர்வாரப்படவில்லை. அதேபோல், ஏரி மண்ணை தங்கள் செலவில் வெட்டிக் கொள்ள அனுமதி கேட்ட டால்மியா சிமெண்ட் ஆலைக்கும் அனுமதி கொடுக்கவில்லை” என்கிறார் காவிரி ஆறு - நந்தியாறு கண்டராதித்தம் ஏரி அய்யன் மற்றும் திருமழபாடி மதகுகளின் பாசனதாரர்கள் சபை தலைவர் சி.தர்மராஜ்.

இது ஏன் சாத்தியமில்லாமல் போனது என்று கேட்ட போது, ’’ஏரி மண்ணை தனியார் வெட்டி எடுத்துச் செல்வதற்கு சுரங்கச் சட்டம் அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் மாநில சுற்றுச் சூழல் ஆணையத்தின் (State Environmental Impact Assessment Authority - SEIAA) அனுமதியை பெறுவதிலும் சிக்கல் இருக்கிறது’என்கிறார்கள் பொதுப்பணித் துறையினர்.

திருச்சி பொதுப்பணித்துறை மத்திய காவிரி வட்டத்தின் ஓய்வுபெற்ற காண்காணிப்புப் பொறியாளர் கே.கே.பழனிச்சாமி, “2006-07 நிதியாண்டில் ஏரியைத் தூர்வார ரூ.1.10 கோடிக்கு திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பினோம். ஆனால், நிதிப்பற்றாக்குறை காரணமாகவும் அதற்கு முன்னால் இருந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டி இருந்ததாலும் இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை” என்கிறார்.

சிறப்புச் சட்டம் வருமா?

பாரம்பரிய சின்னங்களை காக்க மஹாராஷ்டிரமும் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமும் சிறப்புச் சட்டங்களை இயற்றி பாரம்பரிய கட்டிடங்கள், ஏரி, குளங்கள், காடுகள், ஆறுகள், நீர்த்தேக்கங்களை பாதுகாத்து வருகிறது. மைசூர் நகரத்தையே பாரம்பரிய நகரமாக அறிவித்தது கர்நாடக அரசு. அதேபோல் தமிழகத்திலும் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’என்.ராம், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சர வணன், டி.வி.எஸ். தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா, வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா உள்ளிட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சி.எம்.டி.ஏ) அமைக்கப்பட்ட ஹெரிடேஜ் கமிட்டி, பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது தொடர்பான சட்டவிதிகளை உருவாக்கிக் கொடுத்தும் இன்னும் சட்டம் வந்தபாடில்லை.

குமிழித் தூம்பு தொழில்நுட்பம்

ஏரிக்குள் வண்டல் மண் படிவதை தடுக்கும் வகையில் சிறப்பு அமைப்புடன் கூடிய குமிழித் தூம்பு மதகுகளை சோழர்கள் அமைத்திருக்கிறார்கள். அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட குமிழித் தூம்புகளில் தேவையான அளவுக்கு மட்டுமே தண்ணீர் வெளியேறும். ஒரு கல் பெட்டி போன்ற அமைப்புக்கு மேலே அரை அடி விட்டமுள்ள ஒரு துவாரம் இருக்கும். நீரோடி என்று சொல்லப்படும் இந்தத் துவாரத்தை குழவி போன்ற அமைப்பை வைத்து மூடி இருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்தில் சிறிய அளவிலான 3 துவாரங்கள் இருக்கும். இதற்கு சேரோடி என்று பெயர். ஏரியின் தரை மட்டத்துக்கு கீழாக சுரங்க வழி அமைத்து அதன் மூலம் நீர் வெளியேறும்படி மதகை வடிவமைத்திருப்பார்கள். ஏரியிலிருந்து நீரோடி துளை வழியாக 80 சதவீத நல்ல தண்ணீர் வெளியேறும் போது சேரோடி வழியாக 20 சதவீத கூழ் தண்ணீர் வெளியேறும். நல்ல தண்ணீர் அடித்துச் செல்லப்படும் வேகத்தில் மண் கூழும் அடித்துச் செல்லப்பட்டுவிடும்.

ஒப்புக்கு தூர்வாரும் பணி

ஊர்மக்கள் சொல்வது போலவே தற்போது ரூ.16 லட்சம் செலவில் ஏரிக்குள் கால்வாய் அளவுக்கு தூர்வாரிக் கொண்டிருக்கிறது பொதுப்பணித்துறை. (இதற்கு முன்பு 2006-07-ல் இதே பாணியில் தூர்வாரப்பட்டது) இப்படித் தூர்வாரப்படும் மண்ணை கரைக்குக் கொண்டு வந்து சேர்க்காமல் ஏரியின் உள்பகுதிக்குள் கரைபோல் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், ஏரிக்குள் தண்ணீர் வரும்போது இந்த மண்ணானது தூர்வாரப்பட்ட பகுதிகளை மீண்டும் தூற்று விடும்.

ஆக்கிரமிப்பு - மீட்பு

“இந்த ஏரி இயற்கை எங்களுக்குக் கொடுத்த கொடை. இதை கண்டுகொள்வார் இல்லாததால் அரசியல் புள்ளிகள் ஆங்காங்கே ஆக்கிரமித்தார்கள். போராடித்தான் அவர்களை நாங்கள் அப்புறப்படுத்தினோம். முப்பது வருடங்களுக்கு முன்பு, தேசிய காடு வளர்ப்புத் திட்டம் என்ற பெயரில் கருவேல மரக் கன்றுகளை ஏரிக்குள் நட வந்தார்கள். அதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் குதித்த மக்கள், இங்குள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டி விட்டார்கள். மக்களின் கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அந்தத் திட்டத்தை கைவிட்டார்கள். ஆனால், தூர்வாரும் விஷயத்தில் தொடர்ந்து போராடியும் அரசு செவிசாய்க்கவில்லை” என்கிறார் கண் டராதித்தம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ச.ராகவன்.

மண் கூழ்

மழைக்காலங்களில் நந்தியாறு வாய்க்காலில் அடித்து வரப்படும் மண்கூழ் செம்பியன் மாதேவி பேரேரிக்குள் படிந்து ஏரி தூர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து பேசிய முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தபெருமாள், “முன்பு ஏரியின் தென் பகுதியில் கலிங்கு ஒன்று இருந்தது. நந்தியாறு வாய்க்காலில் வரும் கூழ் தண்ணீர் இந்த கலிங்கு வழியாக வெளியேறிவிடும்; நல்ல தண்ணீர் மட்டும் ஏரிக்குள் வரும். 1924-ல் பெரிய அளவில் வெள்ளம் வந்தபோது இந்த கலிங்குக்கு அருகே கரை சேதமடைந்துவிட்டது. அப்போது கரையை சீர்செய்தவர்கள் கலிங்கையும் சேர்த்தே அடைத்துவிட்டார்கள். அத னால், இப்போது கூழ் தண்ணீரும் ஏரிக்குள் வந்து விடுகிறது.

கொள்ளிடக் கரையில் நந்தியாறு வாய்க்காலின் தலைப்பில் ஷட்டர் அமைத்திருக்கிறார்கள். மண் கூழ் வரும்போது அந்த ஷட்டரை அடைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் அப்படியே கொள்ளிடத்தில் கலந்து விடும். தெளிவு நீர் வந்த பிறகு மீண்டும் நந்தியாறு ஷட்டரை திறந்துவிட்டு ஏரிக்கு தண்ணீரை அனுமதிக்கலாம். ஆனால், இப்படி திறந்து மூடுவதற்கெல்லாம் இப்போது ஆட்கள் இல்லை. அந்தக் காலத்தில் எந்நாளும் அலையடித்துக் கொண்டிருந்த இந்த ஏரியில் இப்போது புழுதிப் புயல் வீசுவதைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.’’ என்கிறார்.

ரூ.3 கோடிக்கு திட்டம்

ஏரியை முழுமையாக தூர்வாருவதற்கான சாத்தியம் உள்ளதா என்று திருச்சியிலுள்ள பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தின் செயற்பொறியாளர் கலைச்செல்வ னிடம் கேட்டபோது, ’’அரியலூர் தாலுகாவை அண்மையில்தான் வறட்சிப் பகுதியாக அறிவித் திருக்கிறது அரசு. இதையடுத்து மறுசீரமைப்பு, புனரமைப்பு, பழுது நீக்கம் (Rehabilitation Renovation and Repairs - RRR) திட்டத்தின் கீழ் ரூ.3 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, பழுதான நிலையில் உள்ள எட்டு மதகுகளையும் புதுப்பித்து, ஏரிக்கரையையும் 10 மீட்டர் அளவுக்கு அகலப் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’என்று சொன்னார்.

அரியலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., துரை.மணிவேலிடம் ஏரி தூர்வாரப்படுவதற்கு ஏதாவது நடவடிக்கை உண்டா? என்று கேட்டதற்கு, “இவ்வளவு பெரிய ஏரியை ஒரே நேரத்தில் தூர்வார நிதி ஒதுக்குவது சிரமம். எனினும், ஏரியை சுத்தப்படுத்தி கரையை பலப்படுத்துவதற்காக ரூ.4 கோடிக்கு திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். நிதி நிலையைப் பொறுத்து நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்” என்று சொன்னார் மணிவேல்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x