

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதியில் டெபாசிட்டைப் பறிகொடுத்திருக்கிறது காங்கிரஸ். இது தெரிந்துதானோ என்னவோ, தேர்தலில் போட்டியிடாமல் நழுவிக்கொண்டார் சிதம்பரம்.
1984 தொடங்கி 2014 வரை சுமார் 25 1/2 ஆண்டு கள் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும், அதில் 19 1/2 ஆண்டுகள் முக்கிய இலாக்காக்களின் அமைச்சராகவும் கோலோச்சியவர் சிதம்பரம். ஆனால், அதற்கான ஆணித்தரமான அடை யாளங்கள் எதுவும் இல்லாமல் பரிதாபமாய் நிற்கிறது சிவகங்கை. இத்தனை ஆண்டுகள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தும் இன்னமும் அவரது சொந்த ஊர் வழியாக அகல ரயில் பாதை இல்லை.
சிவகங்கை கண்ட பலன்
கமல்நாத், வீரப்ப மொய்லி உள்ளிட்ட காங்கிரஸ் மத்திய அமைச்சர்களெல்லாம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தொகுதியை அவர்கள் கவனித்துக்கொண்ட விதம். கடந்த எட்டாண்டு காலம் நிதிப் பொறுப்பைத் தன்னிடம் வைத்திருந்த சிதம்பரம், தன்னிடம் திட்டங்களுக்கு நிதி கேட்டு வந்த அமைச்சர்களிடம் என்னுடைய தொகுதிக்கு ஒரு தொழிற்சாலையைக் கொடுங்கள்’ என்று கேட்டிருந்தால் இந்நேரம் சிவகங்கை சிங்கப்பூராகியிருக்கும். 150-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டதுதான் சிதம்பரத்தால் சிவகங்கை கண்ட சீரிய பலன்.
1999-ல் தோற்று மீண்டும் 2004-ல் சிவகங்கையில் போட்டியிட்ட சிதம்பரம், “இதுவரை டெல்லி என்ற கண்ணாடி வழியாகச் சிவகங்கையைப் பார்த்தேன். அந்தப் பார்வை போதுமானதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இனி சிவகங்கை என்ற கண்ணாடி வழியாக டெல்லியைப் பார்ப்பேன்’’ என்றார். ஆனால், தற்போது அவர் அணிந்திருக்கும் கண்ணாடியை ஒழுங்காகத் துடைத்துப்போட்டுப் பார்த்திருந்தாலே சிவகங்கை முன்னேறியிருக்கும் என்று காங்கிரஸ்காரர்களே கிண்டலடிக்கிறார்கள்.
1977 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் 234 ஓட்டில் தோற்றார் சிதம்பரம். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், “எனது குடும்ப மானம் போய்விட்டது. இனிமேல் காங்கிரஸ் கட்சிக்கு வர மாட்டேன்” என்று வசைபாடிவிட்டுப் போனார். இதையடுத்து 1980-ல் தேவகோட்டையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டுக்கு அழைத்தபோது, “இனிமேல் மூவர்ணக் கொடிக்குக் கீழே நின்று பேச மாட்டேன்” என்று மறுத்தார்.1996-ல் த.மா.கா. வேட்பாளராக நின்றபோது, “உடைந்துபோன கை, நொறுங்கிப்போன கை, ஜெயலலிதாவின் முந்தானைக்குள் ஒளிந்து வரும் கை” என்று காங்கிரஸை விமர்சித்ததை உணர்வுள்ள காங்கிரஸ்காரர்கள் இன்னமும் மறக்கவில்லை.
திக்கித் திணறி…
மூப்பனாரை எதிர்த்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைத் தொடங்கிய சிதம்பரம், 2004-ல் கொல்லைப்புற வழியாக காங்கிரஸில் சேர்ந்து சிவகங்கை தொகுதியில் மீண்டும் வேட்பாளரானார். அந்தத் தேர்தலில் அப்பாவின் தேர்தல் பொறுப்புகளைக் கவனிக்க வந்தார் கார்த்தி. திராவிடக் கட்சிகளின் பாணியில் கரன்சிகளை இறக்கினால்தான் காரியம் நடக்கும் என சிதம்பரத்துக்கே புரிய வைத்தார் கார்த்தி.
கிராமங்களில் நமக்கு நாமே திட்டங்களுக்காக மக்களின் பங்களிப்புத் தொகைகளைத் தானே செலுத்தி சமுதாயக் கூடங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டிக்கொடுத்தார். ஆனாலும், கடந்த தேர்தலில் சிதம்பரத்தால் திக்கித் திணறித்தான் ஜெயிக்க முடிந்தது. இதனிடையே, அப்பா பாரதப் பிரதமர், நாம் தமிழக முதல்வர்(!) என்ற கனவுத் திட்டத்துடன் காய்களை நகர்த்திய கார்த்தி, தமிழக காங்கிரஸையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தார்.
இதையடுத்து, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தனது ஆளுகையை விரிவுபடுத்தினார் சிதம்பரம். அதே சமயம் சொந்தத் தொகுதியில் சிதம்பரத்தை எதிர்த்த காங்கிரஸ்காரர்களெல்லாம் நிர்மூலமாக் கப்பட்டார்கள். தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு சிவகங்கைக்குள் கட்சிக்காரர்களையும் சிதம்பரம் கைதூக்கிவிடவில்லை. திராவிடக் கட்சிகளில் ஒன்றியச் செயலாளர்களே ஸ்கார்பியோவில் பறக்கிறார்கள். ஆனால், சிவகங்கை காங்கிரஸின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் இன்னும் இருசக்கர வாகனங்களில்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
கார்த்தியின் எழுச்சி
இன்னொரு பக்கம், கார்த்தி சிதம்பரத்தின் தடாலடிகள் சிவகங்கை காங்கிரஸாரை மிரளவும் வைத்தன. ‘ராமசாமி அண்ணே’ என்று சிதம்பரத்தால் அழைக்கப்பட்டவர்கள் ‘மிஸ்டர் ராமசாமி’ என்று கார்த்தியால் அதிகாரத்துடன் அழைப்பட்டார்கள். அதேசமயம், கடந்த பத்தாண்டுகளில் பல தொழில்கள் மூலம் தன்னை வளப்படுத்திக்கொண்டார் கார்த்தி.
இந்த முறை நான் போட்டியிடவில்லை என சிதம்பரம் சொன்னதுமே, ‘‘காங்கிரஸ் அரசு எடுத்த முக்கிய முடிவுகளில் உங்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. நீங்களே போட்டியிடாமல் ஒதுங்கினால் மக்கள் எப்படி காங்கிரஸை நம்புவார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார் ராகுல். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது. தோற்றுப்போனால் தனது பிரதமர் கனவு தகர்ந்துபோகும் என இருவிதமான கணக்குகளைப் போட்ட சிதம்பரம், மகனை வேட்பாளராக நிறுத்தினார்.
இந்தியா முழுமைக்கும் பிரச்சாரத்துக்குப் போக வேண்டியவர் தனது மகனுக்காக சிவகங்கையையே சுற்றிவந்தார். “ஒரு ஓட்டு இரண்டு பிரதிநிதிகள். உங்களுக் காக கார்த்தி டெல்லியிலிருந்து பணியாற்றுவார். நான் தொகுதியிலிருந்து பணியாற்றுவேன்” என்று வீதிவீதியாய்ப் போய் பிரகடனம் செய்தார் சிதம்பரம். கார்த்தியும் தனது பாணியில் கரன்சிகளை இறக்கிப் பார்த்தார். அப்படியும் டெப்பாசிட்டை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
“அரசியல்வாதிகளுக்கு ஐந்தாண்டுகள் ஓய்வு கட்டாயம் தேவை. அப்போதுதான் அவர்கள் தாங்கள் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியும்” - 1999 தேர்தலில் தோற்றபோது இப்படிச் சொன்னார் சிதம்பரம். சிவகங்கை மக்கள் அவருக்கு மீண்டும் அந்த அரிய வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள்.
-குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@kslmedia.in