

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை. ஒன்பது மாநிலங்களில் 20 சதவீதத் துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் காங்கிரஸ், தமிழகத்தில் பெற்றிருப்பதோ வெறும் 4.3 சதவீதம்தான்.
கண்துஞ்சா களப்பணி
தமிழக காங்கிரஸிடம் 35% வாக்கு வங்கியையும் ரூ. 2,000 கோடி அளவிலான சொத்தையும் ஒப்படைத்துவிட்டுச் சென்றார் காமராஜர். அவருக்குப் பின்னால் வந்தவர்களின் கண்துஞ்சாக் களப்பணியால், தமிழக காங்கிரஸ் இன்றைக்கு இப்படியொரு பரிதாபகரமான நிலைக்கு வந்திருக்கிறது.
ஆளுக்கொரு கட்சி
கட்சிக்கு வெளியே காங்கிரஸில் கோஷ்டிகள்தான் இருப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் கட்சிக்குள் பல கட்சிகளே இருக்கின்றன என்கிறார்கள் கட்சிக்காரர்கள். முதல் கட்சி வாசனுடையது. த.மா.கா. காங்கிரஸுடன் இணைந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். அது பெயருக்குத்தான். காங்கிரஸுக்குள்ளேயே மறைமுகமாக த.மா.கா. அணி தனிப் பாசத்துடன் வலம்வருவதுதான் உண்மை.
இதனால், தேர்தலில் சீட் ஒதுக்குவதானாலும் கட்சியில் பதவி கொடுப்பதாக இருந்தாலும் தனது ஆதரவாளர்களுக்கு 60% ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதிகாட்டினார் வாசன். இந்த 60% கணக்கை வைத்தே மீண்டும் அவர் த.மா.கா-வைத் தொடங்கப்போவதாக அவ்வப்போது செய்திகள் பரவின.
இரண்டாவது கட்சி ப. சி-யுடையது. வாசனுக்குப் போட்டி யாகத் தங்களுக்கு 30% வேண்டும் என மல்லுக்கு நின்றது ப. சிதம்பரம் கோஷ்டி. இன்னும் தங்கபாலு கோஷ்டி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோஷ்டி என்று நீள்கிறது. இந்தப் பஞ்சாயத்துக்குப் பதில் சொல்ல முடியாமல் கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழக காங்கிரஸுக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் முடங்கிப்போனது.
அதே சமயம், பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டார்களே தவிர, எந்த கோஷ்டியுமே கட்சியின் அடித்தளத்தைக் காலத்துக்கேற்ப மறுசீரமைக்கத் தவறிவிட்டது. கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான யோசனைகளைச் சொன்னவர்களைப் புறம்தள்ளிவிட்டு, குழப்பம் விளைவிப்பவர்களுக்கு கோஷ்டித் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுத்ததால் கட்சி வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால், தலைமைக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளி அதிகரித்தது. பல இடங்களில் எம்.பி-க்களுக்கும் மாவட்டத் தலைவர்களுக்கும் இடையிலான உறவு சரியில்லை.
வளர்த்த கலை
வாசனின் சொந்த ஊரான சுந்தரப்பெருமாள் கோயிலிலும் சிதம்பரத்தின் சொந்த ஊரான கண்டனூரிலும் பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் காங்கிரஸ்காரர்கள் இல்லை. இதுதான் கட்சியின் செல்வாக்குக்கு ஒரு உதாரணம்.
சிதம்பரத்தைப் பொறுத்தவரை டெல்லியில் அவரது பங்களிப்பு சொல்லும்படியாக இருந்தது. அங்கே அவரது செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லாமல் போனது. “அரசாங்கத்தில் நடப்பதுகுறித்து 90 சதவீதம் எனக்குத் தெரியும். ஆனால், கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று 10 சதவீதம்கூட எனக்குத் தெரியாது” என்று வெளிப்படையாகவே தனது இயலாமையை ஒப்புக்கொண்டார் சிதம்பரம்.
ஆனாலும், தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன் பெயர்கள் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டபோது, தனது சொந்த மாவட்ட எதிரியான நாச்சியப்பனைவிட வாசனின் ஆதரவாளரான ஞானதேசிகன் தலைவராக வரட்டும் என நினைத்தார். நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும் அ.தி.மு.க-வை விமர்சிக்க காங்கிரஸ் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை.
ஒதுங்கிய தலைகள்
காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க-காரர்கள் வீதிக்கு வீதி கூட்டம்போட்டுக் கடுமையாக விமர்சிக்கின்றனர். பதிலுக்கு குஜராத் கலவரம்பற்றித் தமிழகத்தில் எத்தனை இடங்களில் கூட்டம் போட்டுப் பேசியது காங்கிரஸ்? தோற்றுப்போவோம் என்று தெரிந்து சிதம்பரம், தங்கபாலு, வாசன் எல்லாரும் ஒதுங்கிக்கொண்டார்கள். இப்போது, இவ்வளவு மோசமான தோல்விக்குப் பிறகும் “காங்கிரஸ் தோல்வி கவலைக் குரியதல்ல” என்கிறார் ஞானதேசிகன். பிறகு, எதற்குத்தான் கவலைப்படுவீர்கள் என்று கட்சி அலுவலகத்தில் கம்பீரமாக எழுதிப் போடுங்கள் தலைவரே என்கிறார்கள் தொண்டர்கள்!
- குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@kslmedia.in