Last Updated : 12 Mar, 2015 08:34 AM

 

Published : 12 Mar 2015 08:34 AM
Last Updated : 12 Mar 2015 08:34 AM

நிதி ஆயோக் சாதிக்குமா?

திட்டக் குழுவுக்கு மாற்றாகத் தொடங்கப்பட்டிருக்கும் ‘நிதி ஆயோக்’ குறித்தான சில பார்வைகள்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியத் திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார். அதற்கு மாற்றாகப் புதிய அமைப்பொன்று ஏற்படுத்தப்படும், அதற்குரிய ஆலோசனைகள் பொருளாதார வல்லுநர்கள் உட்பட அனைவரிடமும் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. எந்தெந்த வல்லுநர்களிடம் எப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பெற்றார்கள், இந்த அமைப்பு தொடர்பாக வெவ்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் எந்தெந்தக் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்தார்கள் என்று வெளிப்படையாக இதுவரை எதுவும் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து திட்டக் குழு கலைக்கப்பட்டது. மத்திய அரசின் அமைச்சரவைத் தீர்மானம் வழியாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு 13 செயல்திட்டங்களில் முழுக் கவனம் செலுத்தும் என்று சொல்லப்பட்டது. கூட்டாட்சியியலை விரிவுபடுத்தி, மாநிலங்களுக்குத் தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படும்; தொலைநோக்குப் பார்வை யோடு துல்லியமான வகையில் நீண்டகாலக் கொள்கைகள், புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு, தேசிய அளவில் பல்வேறு துறை களுக்கும் பொருளாதாரத்துக்கும் தேவையான திட்டங்கள் உருவாக்கப்படும்; புதிய கண்டுபிடிப்புகளை யும் அறிவுத்திறனையும் திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு தளமாக இவ்வமைப்பு செயல்படும்; மாநில அரசுகளுக்கிடையேயும் பல்வேறு துறைகளுக்கிடையேயும் ஒருங்கிணைப்பு செய்யப்படும் என்றெல்லாம் இந்த அமைப்பின் செயல்திட்டத்துக்கான கொள்கைகளை மத்திய அரசு அறிவித்தது.

மாநில முதல்வர்களின் கருத்துகள்

நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம், பிரதமர் மோடி இல்லத்தில் 08.02.2015 அன்று நடைபெற்றது. எல்லா முதல்வர்களும் நிர்வாகக் குழுவில் உறுப்பினர் களாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அமைப்பை வரவேற் றிருந்தார். எனினும், பொருளாதாரக் கொள்கைகள் டெல்லியிலிருந்து வகுக்கப்படுவதற்குப் பதிலாக, மாநில அளவிலிருந்து வகுக்கப்பட்டால்தான் உண்மையான கூட்டாட்சியியல் நிறைவேறும் என்றார். மாநிலங்களுக்கான திட்ட நிதியில் 75% மத்திய அரசும், 25% மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளும் முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார். உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அரசு நிதி வழங்கும்போது எவ்வித நிபந்தனைகளையும் மாநில அரசுகளுக்கு விதிக்கக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்தார். அசாம் முதல்வர் தருண் கோகோய் ‘நிதி ஆயோக்’கில் குறிப்பிடப்பட்டுள்ள பல கொள்கைகள், சந்தைப் பொருளாதாரத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறது என்றார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குப் பசுமை வரி அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டார். முதல்வர்களைக் கொண்ட நிர்வாகக் குழு கூடுவதற்கு முன்பு மாநிலங் களின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு உயர் அலுவலர்களிடையே கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பு முறையான கருத்துப் பரிமாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பதையே முதல்வர்களின் உரைகள் சுட்டுகின்றன.

திட்டக் குழுவும் நிதி ஆயோக்கும்

ஆண்டுதோறும் திட்ட ஒதுக்கீடு பெறுவதற்காக மாநில முதல்வர்கள் முன்பு திட்டக் குழு கூட்டங்களுக்குச் செல்வார்கள். பெருமளவிலான திட்டங்களுக்குத் தேவையான நிதிச்சுமையை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ளும். ஒப்புதலுக்காகத்தான் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடக்கும். 1983-ல் இந்திரா காந்தி தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் ‘பாம்பும் சாகவில்லை, கொம்பும் முறியவில்லை என்பதற்கேற்பவே திட்டக் குழுவின் கூட்டமும், தேசிய வளர்ச்சிக் குழுவின் கூட்டமும் நடைபெறுகின்றன’ என்று குறிப்பிட்டார். பிரதமர் இந்திரா காந்தி கோபத்தின் உச்சத்துக்கே சென்றார். சில மாதங்களில் என்.டி.ஆர். அரசு நீக்கப்பட இக்கருத்தும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது.

நிதி ஆயோக் அமைப்பின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம், அமைப்பு முறைகள் எல்லாம் திட்டக் குழு போன்றுதான் உள்ளன. உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் போன்றவற்றில் பணிபுரிந்து, சந்தைப் பொருளாதாரத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள்தான் துணைத் தலைவராக, உறுப்பினர்களாக உள்ளனர். திட்டக் குழுவில் 8 உறுப்பினர் களுக்குத் துறைவாரியான பணிகள் பிரிக்கப்பட்டு, அவர்களின் கருத்துகள் பெறப்பட்டு திட்ட அறிக்கையாக வெளியிடப்பட்டது. தற்போதுள்ள அமைப்பில் வல்லுநர்கள் இரண்டு பேர்தான். அலுவல்சாரா உறுப் பினர்களாக உள்துறை, நிதித் துறை, ரயில்வே துறை, வேளாண் துறை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சரிந்துவரும் மாநிலங்களுக்கான நிதியுதவி

திட்டக் குழு, திட்ட உதவியாக மாநிலங்களுக்கு 80% கடனாகவும் 20% மானியமாகவும் வழங்கியது. 2010-லிருந்து 70% கடனாகவும் 30% மானியமாகவும் அளிக்கத் தொடங்கியது. 2011-க்குப் பிறகு, கடனைச் சந்தையில் பெற்றுக்கொள்ளுங்கள்; மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய கடனையும் வட்டியையும் செலுத்துங்கள் என்றது. மத்திய அரசின் துறைகள் வழியாக மாநிலங்களுக்கு நிதி வழங்கும் முறை 1967-லிருந்து தொடங்கப்பட்டது. பற்றாக்குறை மாநிலங்களின் பயனுக்காக இவ்வித நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 11-ம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2007-2012) படிப்படியாகத் துறைசார்ந்த திட்டங்களின் எண்ணிக்கை 147-ஆக உயர்ந்தது. இந்த நிதியுதவி ரூ.6.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. மத்திய அரசின் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ உட்பட 9 முன்னணித் திட்டங்களுக்காக ரூ. 5.24 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. எஞ்சிய 138 திட்டங்களுக்கு மொத்தத் தொகையில் 21%-தான் நிதி ஒதுக்கப் பட்டது. தற்போது இந்த நிதி ஒதுக்கீடுகளைப் பற்றி நிதி ஆயோக்கில் எவ்வித அறிவிப்பும் இல்லை.

ஏற்கெனவே, எல்லா மாநிலங்களுக்கும் மேற்கூறிய திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுவருகிறது. அரசமைப்புச் சட்டம்-280-ன்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படும் நிதிக் குழுக்களின் பரிந்துரை களின்படி, திட்டம் சாராத செலவுக்கான நிதியை மாநிலங்கள் பெற்றுவந்தன. மத்திய அரசின் வரி வருவாயில் பங்கையும் மானியத்தையும் அளித்தார்கள். திட்டக் குழுவின்; மானியம் திட்ட மானியம் என்றும், நிதிக் குழுவின் மானியம் திட்டமல்லாத மானியம் என்றும் பகுக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தப் பகுப்பு முறையும் கேள்விக்குறியாகிவிட்டது. இந்நிலையில், திட்டக் குழுவின் மானியமும் குறைந்துவிட்டால் மாநில அரசுகளின் நிலை என்னவாகும்? ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டியின் தலைமையிலான 14-வது நிதிக் குழு, தனது நிதிப் பரிந்துரைகளை (2015-2020) மத்திய அரசிடம் கடந்த டிசம்பர் 15-ல் அளித்தது. அதன் பரிந்துரைகள் மாநில அரசுகளின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவுசெய்யவில்லை என்பதை முதலமைச்சர்கள் பலர் அளித்துள்ள விமர்சனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சந்தைப் பொருளாதாரமும் நிதி ஆயோக்கும்

பன்னாட்டு நிறுவனங்களையும் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களையும் ஊக்குவிப்பதற்குப் பொது, தனியார் துறைகளின் பங்களிப்பு தேவை என்று இந்த அமைப்பின் கொள்கை வரையறையில் அறிவிக்கப் பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் இன்றளவுக்கும் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு லாபம் ஈட்டித்தருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்கவோ, சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ எவ்விதக் குறிப்பும் இல்லை.

பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் கூட்டுறவை எப்படி ஏற்படுத்த முடியும், ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்ற கொள்கையைப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு, இந்தியப் பொருளாதாரத்தை எப்படி வளர்க்கும் போன்ற கேள்விகளுக்கு மத்திய அரசு இதுவரை விடை காணவில்லை. இந்தச் சூழலில், நிதி ஆயோக் தனது கொள்கைத் திட்டத்தில் அறிவித்த கூட்டுறவுக் கூட்டாட்சியியலை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்த முடியுமா என்பதையும் நிதி ஆயோக்கும் ஓர் அவசர அறிவிப்புதானா என்பதையும் தெரிந்துகொள்ளச் சற்றே பொறுத்திருப்போம்.

- மு. நாகநாதன், மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர், பேராசிரியர். தொடர்புக்கு: mnaganathan@netscape.net

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x