

பளிச் புத்தகம்
புத்தகக் காட்சியின் பளிச் புத்தகம் ‘அடையாளம் பதிப்பக’த்தின் ‘தொடக்க நிலையினருக்கு...’ பின்நவீனத்துவம், ஜென், மொழியியல், புவிவெப்பமாதல் போன்ற தூக்கம் வரச் செய்யும் விஷயங்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் தரும் புத்தக வரிசை இது. அதுவும் இதன் காமிக்ஸ் பாணி வடிவமைப்பு இருக்கிறதே... தமிழுக்குப் புதுசு மட்டும் அல்ல; எவரையும் வசீகரிக்கக் கூடியதும்கூட!
மீண்டும் காந்தி
காந்தியும் நேருவும் வசீகரித்தனர். ‘கிழக்குப் பதிப்பகம்’ கொண்டுவந்த ராமச்சந்திர குஹாவின் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’, ‘அலைகள் வெளியீட்டகம்’ கொண்டுவந்த ‘ஜவஹர்லால் நேரு - சுயசரிதை’ போன்ற புதிய புத்தகங்களோடு, ‘சர்வோதய இலக்கியப் பண்ணை’யில் ‘சத்திய சோதனை’யும் எப்போதையும்விடப் பெரிய அளவில் விற்றது. இதேபோல, மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் புத்தகங்களும் கணிசமாக விற்றன.
இணையமே இணைந்து வா!
போன புத்தகக் காட்சியில், இணைய எழுத்தாளர்கள் திடீரென ஒரு புது அலையாகப் புறப்பட்டார்கள் அல்லவா? அந்த அலை இந்த முறை நீடிக்கவில்லை. ஆனால், எழுத்தாளர்களில் எவரெல்லாம் இணையத்தில் வாசகர்களோடு உறவாடுகிறார்களோ, அவர்களுக்கே புத்தக விற்பனை திருப்திகரமாக இருந்தது. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் நால்வரும் இந்தப் புத்தகக் காட்சியிலும் தங்கள் விற்பனையைத் தக்கவைத்துக்கொண்டார்கள். புத்தகங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடும் முறை அறிமுகமானது. புத்தகங்கள் விளம்பரம் - விற்பனையிலும் ‘ஃபேஸ்புக்’, ‘யூ டியூப்’ முக்கிய இடம்பிடித்தன.
திருவிழா 2015-ன் நாயகன்
இந்தப் புத்தகக் காட்சியின் நாயகன் பெருமாள்முருகன்தான். நான்கு ஆண்டுகளில் மூவாயிரம் பிரதிகள் விற்று, சில ஆயிரம் பேரால் மட்டுமே அறியப்பட்டிருந்த ‘மாதொருபாகன்’ நாவல், போராட்டக்காரர்கள் புண்ணியத்தில் சர்வதேச அளவில் பிரபலமானது. ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி கார்டியன்’ பத்திரிகைகளில் தொடங்கி உள்ளூர்த் தொலைக்காட்சிகள் வரை பெருமாள்முருகன் பெயரை உச்சரித்ததால், புத்தகக் காட்சியில் ‘மாதொருபாகன்’ நாவலுக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டது. அந்தப் புத்தகத்தின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், பெருமாள்முருகன் எழுதிய ஏனைய புத்தகங்கள் அள்ளிக்கொண்டு போயின.
திருவிழா 2015-ன் புத்தகம்
பூமணியின் ‘அஞ்ஞாடி...’ புத்தகம் வெளியாகி நான்காவது வருடம் இது. 1,066 பக்கங்கள், ரூ. 925 விலை என்று சாதாரண வாசகர்களைக் கொஞ்சம் மலைக்கவைக்கும் புத்தகம்தான். ஏற்கெனவே நான்கு புத்தகக் காட்சிகளிலும் ஏராளமான பிரதிகள் விற்றிருந்தன. எல்லாவற்றையும் தாண்டி இந்தப் புத்தகக் காட்சியில் பெரும் வசூலை அள்ளியது. ‘காவல் கோட்டம்’, ‘கொற்கை’என ‘சாகித்ய அகாடமி விருது’பெறும் புத்தகங்கள் புத்தகக் காட்சி விற்பனையில் ஏற்படுத்திவரும் தாக்கத்துக்கும் தொடர் உதாரணமாகியிருக்கிறது ‘அஞ்ஞாடி...’
வரலாற்றின் வருகை
ஆர்ப்பாட்டமே இல்லாமல், தமிழ்ப் பதிப்புலகில் கால் பதித்தது ‘தி இந்து’. சமஸ் எழுதிய ‘கடல்’, டி.எல். சஞ்சீவி குமார் எழுதிய ‘மெல்லத் தமிழன் இனி’, டாக்டர் ஆர். கார்த்திகேயன் எழுதிய ‘வேலையைக் காதலி’, ‘நம் மக்கள் நம் சொத்து’, கோ. தனஞ்செயன் எழுதிய ‘வெள்ளித் திரையின் வெற்றி மந்திரங்கள்’ ஆகிய 5 நூல்களோடு களம் இறங்கிய ‘தி இந்து’வுக்கு, முதல் புத்தகக் காட்சியிலேயே ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்தார்கள் வாசகர்கள்!
இது பாய்ச்சல்!
ஒரு புத்தகக் காட்சியில் ஒரு எழுத்தாளர் எத்தனை புத்தகம் வெளியிடுவது? அலப்பறை கொடுத்துவிட்டார் கெளதம சித்தார்த்தன். ‘பொம்மக்கா’, ‘சாதி: அரசியல் அதிகாரம்’, ‘உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்’, ‘கருத்து சுதந்திரத்தின் அரசியல்’, ‘மூன்றாவது சிருஷ்டி’, ‘ஆயுத வியாபாரத்தின் அரசியல்’ என்று 6 புத்தகங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பது கவனிக்க வேண்டியது!
நீ…ண்ட தலைப்பு
உள்ளே இருப்பது தெரியாது. ஜ்வாலாமுகி ராஜ் என்பவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் தலைப்பு இது: ‘திருடப்பட்ட… அங்காளம்மன் சாமி நகையெல்லாம் திரும்பக் கிடைச்சுட்டுது…. ஆனா அருக்காணியின் அறுக்கப்பட்ட தாலி?’
வெண்முரசு எங்கே?
எல்லோர் கவனத்தையும், ‘மாதொருபாகன்’ விவகாரம் எழும் வரை ஆக்கிரமித்திருந்தது ஜெயமோகனின் மகாபாரதமான ‘வெண்முரசு’தான். இதுவரை 4 நாவல்கள் வெளியாயின. ஆனால், புத்தகக் காட்சியில் ‘வெண்முரசு’ வரிசை நாவல்கள் பேச்சே காணோம். எத்தனை பிரதிகள் விற்றன என்கிற மூச்சும் இல்லை. எழுத்து வேகம் விற்பனை வியூகத்திலும் வேண்டாமா?
இயற்கை நேசம்
சுற்றுச்சூழல் புத்தகங்கள் நல்ல கவனம் பெற்றன. ‘பூவுலகின் நண்பர்கள்’, ‘இயல்வாகை’, ‘எஃப் 5’ எனப் பல அரங்குகள் சூழலியல் புத்தகங்களோடு வரவேற்றன. எல்லா இடங்களிலும் நல்ல கூட்டம். ‘இயல்வாகை’அரங்கில் புத்தகங்களோடு பாரம்பரிய விதைகளையும் வாங்கிக்கொண்டு போனார்கள் வாசகர்கள்.
நித்ய இலக்கியம்
தமிழின் முக்கிய படைப்பாளிகளான புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், மெளனி போன்றோரின் புத்தகங்களுக்கான வரவேற்பு குறையவே இல்லை. இவர்களைப் போலவே கண்ணதாசனும் கல்கியும்!