Published : 10 Dec 2014 09:51 am

Updated : 10 Dec 2014 11:46 am

 

Published : 10 Dec 2014 09:51 AM
Last Updated : 10 Dec 2014 11:46 AM

இன்னொரு இந்தியா 3 - பஸ்தர் ஒரு குறியீடு

3

பஸ்தர்...இப்படி ஒரு தொடருக்கான மையம் அதுதான். ‘இன்னொரு இந்தியா’ என்கிற இந்தக் குறுந்தொடரின் தலைப்பும்கூட பஸ்தரிலிருந்து பிறந்ததுதான். “இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன” என்கிற வாக்கியத்தை அனேகமாக நாம் எல்லோருமே கேள்விப்பட்டிருப்போம். பள்ளிக்கூடங்களின் பேச்சுப் போட்டிகளில் தொடங்கி, தேர்தல் காலப் பிரச்சார மேடைகள் வரை அதிகம் உச்சரிக்கப்படும் வாக்கியம் அது.ஒரு இந்தியாவை நாம் அறிவோம். நம்மைப் பிரதி பலிக்கும் இந்தியா அது. அந்த இன்னொரு இந்தியா?

உலகில் பசியில் துடிக்கும் நான்கில் ஒருவரைக் கொண்ட இந்தியா. ஒவ்வொரு நாள் இரவும் கோடிக் கணக்கானோர் பசியோடு படுக்கச் செல்லும் இந்தியா. பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் ஊட்டச்சத்துக் குறைவால் சூம்பித் திரியும் இந்தியா. மருத்துவர்களும் சிகிச்சைகளும் அரிதான இந்தியா. இன்னும் சாலைகளும் பஸ்களும் நுழையாத இந்தியா. ரயில்களையும் தண்டவாளங்களையும் பார்த்திராத இந்தியா. மின்சாரக் கம்பிகள் தொட்டிராத இந்தியா.


ஒரு நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கயிற்றுக் கட்டிலில் தூக்கிப்போட்டு, பல மைல் தூரம் தூக்கிக்கொண்டு ஓடும் இந்தியா. அபூர்வமாக அவர்கள் வந்து சந்தையில் வாங்கும் குழந்தைகளுக்கான ரொட்டியைக்கூட போலி நிறுவனத் தயாரிப்பில் கொடுக்கும் இந்தியா. நாம் செய்திகளிலும் புள்ளிவிவரங்களிலும் வார்த்தைகளாகவும் எண்களாகவும் மட்டுமே அறிந்துவைத்திருக்கும் இந்தியா. பஸ்தர் அந்த இந்தியாவின் பிரதிநிதி.

இன்றைக்கு இந்திய அரசாங்கம் ‘சிவப்புப் பிராந்தியம்’ என்று இந்திய வரைபடத்தில் சிவப்பு வண்ணம் அடித்திருக்கும் பெரும்பான்மைப் பகுதி, அந்த ‘இன்னொரு இந்தியா’வில் அடங்கியிருக்கிறது. அதன் இதயப் பகுதியாகப் பார்க்கப்படும் பஸ்தர், அந்த ‘இன்னொரு இந்தியா’வில் அடங்கியிருக்கிறது.

பஸ்தர் ஒரு குறியீடு

அடிப்படையில் பஸ்தர் ஒரு குறியீடு. பஸ்தரைப் பற்றிப் பேசுவது, அடிப்படையில் நாம் ஒட்டுமொத்த அந்த ‘இன்னொரு இந்தியா’வைப் பற்றிப் பேசக் கிடைக்கும் வாய்ப்பு. அங்குள்ள ஏழ்மையை, வறுமையை, புறக் கணிப்பை, அபகரிப்பை, ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுவது ஒட்டுமொத்த ‘இன்னொரு இந்தியா’வையும் பற்றிப் பேசக் கிடைக்கும் வாய்ப்பு.

நான் ஆயுததாரிகளை ஆதரிப்பவன் அல்ல. கொலையாயுதங்கள் யார் கையில் இருந்தாலும் - அது அரசப் படைகள் கைகளில் இருந்தாலும் சரி, போராட்டக்காரர்கள் கைகளில் இருந்தாலும் சரி - அவை கொலையாயுதங்கள்; வன்முறையும் ஆயுதங்களும் வரலாற்றைப் பின்னுக்கு இழுப்பவை; இந்த நாடு உலகுக்கே வழிகாட்டிய அகிம்சா வழியும் உரையாடலுமே மானுடம் கண்டறிந்த மகத்தான அரசியல் வழி. ஆயுததாரிகளை நாம் புறக்கணிக்கலாம். ஆனால், அவர்கள் ஆயுதம் எடுக்கச் சொல்லும் காரணங்களை நாம் புறக்கணிக்க முடியாது. அவற்றில் தெறிக்கும் உண்மைகளை நாம் புறக்கணிக்க முடியாது. இந்தப் பின்னணியிலேயே பஸ்தர் தன்னைப் பற்றிப் பேச நம்மை அழைக்கிறது.

பஸ்தரின் வரலாறு

இந்தியாவின் தொன்மையான, சுவாரஸ்யமான, மர்மமான, திருப்பங்கள் நிறைந்த கதைகளில் ஒன்று பஸ்தரின் கதை. ராமாயணக் காலத்திலேயே அந்தக் கதைகள் தொடங்கிவிடுகின்றன. அதில் தண்டகாரண்யம் (தண்டக+ஆரண்யம்) என்ற பெயரில் வரும் அதன் கதைகள் இன்றைய பஸ்தரின் வரலாற்றுத் துயரத்தோடு பொருத்திப் பார்க்கக் கூடியவை. ராமாயணத்தில் ராமர், சீதை, லட்சுமணர் வாழ்ந்த காட்டுப் பகுதி என்று நம்பப் படும் பகுதி இது. தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்பதே தண்டகாரண்யம் என்பதன் பொருளாம். இந்திய அரசு இன்றைக்கு அந்தக் காட்டில் வசிப்பவர்களை அப்படித்தான் ஆக்கிவிட்டது.

நள வம்சம், காகதீய வம்சம், நாகர்கள், சாளுக்கியர்கள், மராட்டியர்கள் என்று பல்வேறு மன்னர்களாலும் ஆளப்பட்ட இந்தப் பகுதி, வரலாற்றின் பெரும்பகுதி தனி சாம்ராஜ்யமாகவே திகழ்ந்திருக்கிறது. பின்னாளில், மத்திய மகாணத்தில் இணைக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சுமார் 40,000 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட பஸ்தர், நாட்டின் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக, கேரளத்தைவிடப் பெரியதாக இருந்தது. 2000-ல் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டபோது, அதன் ஒரு பகுதியானது. மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர 7 மாவட்டங்களாக அது பிரிக்கப் பட்டது: பஸ்தர், கான்கெர் (1999), தந்தேவாடா (2000), பிஜப்பூர் (2007), நாராயண்பூர் (2007), கோண்டாகாவ் (2012), சுக்மா (2012).

ஐந்தெல்லைகளின் மையப் புள்ளி

இன்றைக்கு தண்டகாரண்யம் என்றழைக்கப்படும் வனப் பகுதி, சத்தீஸ்கரின் பஸ்தருடைய பெரும் பகுதியையும் மத்தியப் பிரதேசம், ஒடிஷா, மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசத்தின் கொஞ்சம் பகுதிகளையும் உள்ளடக்கியது. 5 மாநிலங்களின் எல்லைகள் புதைந்திருக்கும் இடம். ஆனால், அங்கு வாழும் மக்களுக்கு அந்த எல்லைகள் சிறு கீறல் அளவுக்குக்கூடப் பொருட்டு இல்லை. காரணம், அவர்களைப் பிணைத்திருப்பது வேறு ஒரு சங்கிலி!

(தொடரும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
தொடர்இன்னொரு இந்தியாசமஸ் தொடர்பஸ்தர்மாவோயிஸ்டுகள்தீவிரவாதம்இந்திய கிராமம்சத்தீஸ்கர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x