Published : 31 Jul 2016 10:41 am

Updated : 14 Jun 2017 15:32 pm

 

Published : 31 Jul 2016 10:41 AM
Last Updated : 14 Jun 2017 03:32 PM

மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - மகேந்திரன் நேர்காணல்

நாற்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். ஜூலை 25 அன்று தனது 77-வது வயதைப் பூர்த்திசெய்தார் மகேந்திரன். இன்னமும் ஓர் இளம் இயக்குநருக்கு உள்ள அதே துடிப்போடு பேசுகிறார்.

இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். அது இத்தனை கொண்டாடப்படுவது உண்மையில் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும் வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் நினைத்தேன். சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படங்கள்தான் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ போன்றவை.

இலக்கியம். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கு.ப.ரா., சூடாமணி போன்றோரின் படைப்புகளைப் படித்தபோது என்னை அறியாமலேயே அவை என்னைச் செதுக்கின. அவர்களின் அணுகுமுறை, மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் விதம், தங்களைச் சுற்றியுள்ளவர்களை அவர்கள் பார்த்த விதம் எல்லாமே எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தின. உண்மையில், சினிமாவை இவர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும்தான் கற்றுக்கொள்ள வேண்டும். யதார்த்தவாதம், அதை அழகுணர்ச்சியோடு சொல்லுதல் இதுதான் முக்கியம். அழகுணர்ச்சி என்பதற்காகப் போட்டு மூளையைக் கசக்க வேண்டியதில்லை. மக்களின் கண்கொண்டு பார்த்தாலே இயல்பான அழகுணர்ச்சி பிடிபடும்.

உங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் சினிமா இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு உறைநிலையில் - கிட்டத்தட்ட ஈடுபாடின்மைபோல - நீங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒருவேளை ‘உதிரிப்பூக்கள்’ படமே உச்சம் என்று திருப்தியடைந்துவிட்டீர்களா?

வழக்கமாகப் பலரும் திரைப்படங்களுக்குள் நுழையும் போது பெரும் கனவுகளுடனும் சினிமா மீது ஈடுபாட்டுடனும் வருவார்கள். நான் இதற்கெல்லாம் நேரெதிர். தமிழ் சினிமா மீது ஈடுபாடே இல்லாமல் இருந்தவன் நான். கட்டாயமாகத்தான் அழைத்துவரப்பட்டேன். இங்கே வந்த பிறகும்கூட எனக்குக் கிடைத்த ஸ்தானத்தை ஒரு வியாபாரஸ்தலமாக ஆக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. இதனால், நான் மற்றவர்களைக் குறை சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு விருப்பம் இல்லை அவ்வளவுதான். ஒரு படம் முடிந்துவிட்டால் நான் பாட்டுக்கும் போய்த் தூங்குவேன், புத்தகங்களைப் படிப்பேன், அடுத்து என்ன வேலை என்பதில் நான் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்.

வழக்கமாக ஒரு இலக்கியப் படைப்பைத் திரைப் படமாக்கும்போது அந்தப் படைப்பின் வாசகர்களுக்குத் திருப்தி ஏற்படாது. அதைத் தாண்டி ‘உதிரிப்பூக்கள்’ வென்றது எப்படி?

திரைக்கதை எப்படி எழுதுவதென்று நான் யாரிடமும் போய்க் கற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், நாவல், சிறுகதை போன்றவற்றை எப்படித் திரைப் படம் ஆக்குவதென்றும் யாரிடமும் போய்க் கற்றுக் கொள்ளவில்லை. ஒரு பொறி போதும், எனக்குக் கதையை உருவாக்கிக்கொள்ள. ‘உதிரிப்பூக்கள்’ படத்திலுள்ள காட்சிகள், முக்கியமாக தாயில்லாப் பிள்ளைகள் என்ற விஷயம் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது. நானும் அங்கிருந்துதான் எனக்கான பொறியை எடுத்துக்கொண்டேன். புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலில் சுந்தரவடிவேலு வாத்தியார் பூட்ஸ் காலால் தனது பிள்ளையை உதைக்கும் இடத்தில் நான் அதிர்ந்துவிட்டேன். நானும் சிறு வயதில் அதுபோன்ற சூழலில் வளர்ந்தவன்தான். அங்கிருந்து விஸ்தரித்துக்கொண்டதுதான் ‘உதிரிப்பூக்கள்’.

அதேபோல், பம்பாயில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது காலையில் கதவைத் திறந்தேன். ஒரு பெண் ஜாகிங் போய்க்கொண்டிருந்தாள். இன்று உடல் ஆரோக்கியத்துக்காக ஓடும் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் எதெற்கெல்லாமோ ஓட வேண்டியிருக்கும். பிறந்த வீட்டிலிருந்து புருஷன் வீட்டுக்கு, அப்புறம் புருஷனுக்காக, மண வாழ்க்கை சரியாக அமையவில்லையென்றால் விவாகரத்துக்காக, அப்புறம் மறுபடியும் தாய்வீட்டுக்கு. இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறாள். இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கான கதையை எழுதிவிட்டேன்.

இந்திய திரைப்படங்களுக்கு மத்தியிலும் உலகத் திரைப்படங்களுக்கு மத்தியிலும் வைத்துப் பார்க்கும்போது உங்கள் படங்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் நான் பாடல்கள் வைத் திருந்தேன், தயாரிப்பாளரின் விருப்பத்துக்காக. ஒரு வேளை பாடல்களே இல்லாமல் அதை நான் எடுத்து வெற்றிபெற்றிருந்தால் உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லலாம். பாடல்களை வைத்துவிட்டு, அந்தப் படத்தை உலகப் படங்களோடு ஒப்பிட்டுக்கொண்டிருக்கக் கூடாது.

தமிழ்த் திரைப்படங்களிலும் சரி, இந்தியத் திரைப் படங்களிலும் சரி, பாடல்கள் பொருத்தமற்றவையாகவே படுகின்றன. ‘ஜானி’ மாதிரியான மியூஸிக்கல் படங்களுக்கு வேண்டுமானால் பாடல்கள் தேவைப்படலாம். மற்ற படங்களுக்கு அவசியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

பாடல்கள் என்ற நெருடலான விஷயத்தையே சாதக மான அம்சமாக மாற்றுவதற்குத்தான் எனது இசையமைப் பாளர் இளையராஜாவைப் பயன்படுத்திக்கொண்டேன். அவரின் இனிமையான பாடல்களை அழகாகப் படமாக்கினேன்.

திரைப்படங்கள் மனதுக்கு சந்தோஷம் கொடுக்க வேண்டும். அதே சமயம் பாட்டும் நகைச்சுவையும்தான் சந்தோஷம் கொடுக்கும் என்று அர்த்தமில்லை.

உங்கள் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள், உதாரணத்துக்கு குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தாமரை, சாமிக்கண்ணு போன்றவர்களின் எளிமையான நடிப்பு உங்கள் திரைமொழிக்குக் கூடுதல் அழகு சேர்த்திருக்கிறது அல்லவா...

யார் சார் சின்னச் சின்ன பாத்திரங்கள்? தினசரி நம் வீட்டுக்குப் பால் பாக்கெட் போட வருபவர்கள், துணிகளை சலவை செய்து கொண்டுவருபவர்கள், வீட்டுப் பணியாட்கள், ஏதோ ஒரு மூலையில் இருக்கும் விவசாயிகள், எல்லையில் காவல் காத்துக்கொண்டிருக்கும் ராணுவத்தினர் போன்றோரெல்லாம் இல்லையென்றால், நம் பாடு திண்டாட்டம்தான் இல்லையா? பாதாளச் சாக்கடையில் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் கொடுமை இந்த 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு அநியாயம் இது. இப்படி எல்லோரையும் நாம் நம்பி வாழும்போது, ‘ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தான், ஒருத்தி இருந்தாள்’ என்று இரண்டு பேரை மட்டும் மையப்படுத்திப் படம் எடுப்பது அநியாயமில்லையா?

இளையராஜா பாடல்களைக் கண்ணை மூடிக்கொண்டே கேட்டால் என்ன மாதிரியான காட்சிகள், நிலப்பரப்புகள் நம் மனதில் தோன்றுமோ அதே போன்று நீங்கள் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

பாடல் பதிவுக்குப் பிறகு, ஒரு மாதம் ஒன்றரை மாதம் கழித்துதான் அந்தப் பாடல்களுக்கான படப் பிடிப்பு நடக்கும். அதுவரை அந்தப் பாடல்களை மனதில் ஓட்டிக்கொண்டே இருப்பேன். அப்போது என் மனதில் வரும் உணர்வுகளை, எண்ணங்களைத்தான் படப்பிடிப்பின்போது பதிவுசெய்வேன்.

‘பருவமே புதிய பாடல்’ ஒளிப்பதிவு செய்யும்போது பெங்களூரில் காலைப் பனியில் படப்பிடிப்பு எடுத்தோம். படப்பிடிப்பு நேரத்திலும் சரி; வேறு எங்கும் சரி; என் கண்கள் நான்கு புறமும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். கதைக்குத் தேவைப்படுகிற விஷயம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். சாப்பிடப் போகும் நேரத்தில், ஒரு சிறுமி கையில் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு சற்று தூரத்தில் வருவது என் கண்ணில் பட்டது. சாப்பிடத் தயாராக இருந்த அசோக்குமாரிடம் ‘தயாராகுப்பா, அதை ஷூட் பண்ணணும்’ என்றேன். அந்தக் குழந்தைக்கே தெரியாமல் லென்ஸ் வைத்து தூரத்திலிருந்தே படம்பிடித்துக்கொண்டோம். அப்புறம் படப்பிடிப்பெல்லாம் முடிந்து, படத்தொகுப்பு செய்யப்படும் வேளையில் பாடலில் வரும் ஹார்மோனியம் துணுக்கு இசைக்கு ஒரு காட்சி தேவைப்படுகிறதே என்றார் எடிட்டர். 15 அடிக்கான ஒரு ஷாட். தேடியெடுத்து அந்த சிறுமி காட்சியைக் கொடுத்தேன். படம் வெளியாகி ஒரு வருடம் ஓடி, பாட்டும் பெரிய ஹிட்டானது.

ஒவ்வொரு பாடல் எடுக்கும்போதும் இப்படித்தான். என்னுடைய வேகத்துக்கு ஏற்றாற்போல் என்னுடைய ஒளிப்பதிவாளரும் அதற்குத் தயாராக இருப்பார். நான் சொன்னதும் கேமராவைத் தூக்கிக்கொண்டு என்னுடன் ஓடிவருவார். அதுதான் என்னுடைய அதிர்ஷ்டம். (சட்டென்று அசோக்குமார் குறித்த நினைவுகளில் மூழ்குகிறார்.) அசோக்குமார் ஒரு குழந்தை மாதிரி. எவ்வளவு பெரிய ஒளிப்பதிவாளர். அவ்வளவு வெற்றிகரமாக இருந்துவிட்டு, கடைசியில் நிராதரவாகச் செத்துப்போய்விட்டார். அவ்வளவுதான் இந்த இண்டஸ்ட்ரி… (கண்கள் கலங்குகின்றன.) நான், ராஜா, அசோக்குமார் எல்லாம் ஈகோ இல்லாமல் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். அதனால்தான், அசோக்குமாரின் மறைவு என்னை மிகவும் துயரத்துக்குள்ளாக்கியது. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சில சமயங்களில் ‘வாழ்க்கையின் அர்த்தமே என்ன?’ என்று கேள்வி எழுகிறது.

‘ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லும் காட்சியில் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்துவிட்டு வியந்துபோய் ‘அந்தப் பொண்ணோட நடிப்போட என்னால போட்டிபோட முடியலை’ என்று ரஜினி மாய்ந்துமாய்ந்து பேசினாராமே?

பாராட்டுவதில் எப்போதுமே முதல் ஆளாக நிற்பார் ரஜினி. அன்றைக்கு நடந்தது இதுதான். ஊட்டியில் 11.30 மணிக்கு ஒரு வீட்டுக்குள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். ஸ்ரீதேவி சோஃபாவில் உட்கார்ந் திருக்க, அவருக்கு எதிரே குளோஸப்பில் கேமரா வைக்கப்பட்டிருந்தது. கேமராவின் வியூஃபைண்டரில் பார்த்துவிட்டு ‘ஸீ திஸ் மகேந்திரன். ஸீ ஹெர் அக்ளி நோஸ்யா’ என்று சொல்லிவிட்டார் அசோக்குமார். நானோ ரொம்பவும் பதறிவிட்டேன். பக்கத்து அறைக்கு அசோக்குமாரை வரச் சொல்லி, ‘என்னய்யா இது... என்ன மாதிரி சீன் எடுக்கிறேன். இந்தச் சமயத்தில் மூக்கு சரியில்லை, அதுஇதுன்னு சொல்லுறியே. அந்தப் பொண்ணு மனசு எவ்வளவு பாடுபடும்’ என்று அவரிடம் நொந்துகொண் டேன். ‘சாரி, மகேந்திரன், சாரி…’ என்று அவரும் பதறிப்போய் மன்னிப்பு கேட்டார். அவர் குழந்தை மாதிரி, மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். அதில் பெரிய விஷயம் என்னெவென்றால், அசோக்குமார் அடித்த கமெண்ட் தன் காதில் விழுந்தும் எதுவுமே நடக்காததுபோல் அந்தப் பெண் அந்தக் காட்சியை அழகாக நடித்துக்கொடுத்ததுதான். படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வந்ததும் ரஜினி விடிய விடிய புலம்பித்தள்ளிவிட்டார். ‘அந்தப் பொண்ணோட நடிப்புக்கு முன்னால என்னால ஒண்ணும் பண்ண முடியல சார். ஹெல்ப்லெஸ்ஸா நின்னுட்டிருந்தேன்’ என்று புலம்பினார். ‘நீங்க ஹெல்ப்லெஸ்ஸா நின்னுட்டிருக்கிறதுதான் அந்த சீனுக்குத் தேவை. அது இயல்பா, அட்டகாசமா வந்திருக்கு. உங்களுக்கும் கூடுதல் அழுத்தம் கொடுத்து ஸ்ரீதேவியுடன் போட்டிபோடுவதுபோல் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்காது’ என்று சொன்னேன். அப்படியும் ஒரு இடத்தில் ஸ்ரீதேவியைத் தாண்டிச் சென்றிருப்பார். ‘என்ன படபடான்னு கொஞ்ச நேரத்துல என்னென்னமோ பேசிட்டிங்க’ என்பார். மனதைத் திறந்து அடுத்தவர்களைப் பாராட்டுவதில் ரஜினி மன்னன். ஸ்ரீதேவியைப் பொறுத்தவரை எதையும் மனதில் போட்டுக்கொள்ளாமல் தேவையானதை நடித்துக் கொடுத்தது ஒரு கலைஞருக்குரிய பக்குவத்தைக் காட்டியது. அதுதான் அவரின் மகத்துவம். அவர் மூக்கு ஆபரேஷன் செய்துகொண்டதற்கு அசோக்குமார்கூட ஒரு காரணமாக இருக்கலாம் (சிரிக்கிறார்).

‘மோகமுள்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தீர்கள் அல்லவா…

ஆம். ‘மோகமுள்’ நாவலை வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் நான் ஒன்பது தடவைக்கும் மேல் படித்திருக்கிறேன். ஒன்பதாவது தடவை படித்து முடித்த பிறகுதான் அந்த நாவலின் விஸ்தீரணம் எனக்கு முழுமையாகப் புரிந்தது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குள் பதிந்துபோயின. அப்புறம் 10 நாட்கள் உட்கார்ந்து திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன். நடிகர்கள் தேர்வு எல்லாம் முடிந்து, படமாக எடுக்கப் போனபோது தயாரிப்பாளர் குறுக்கே புகுந்து எல்லாவற்றையும் நாசமாக்கிக் கடைசியில் அந்தப் படத்தை எடுக்க முடியாமலே போய்விட்டது. அதற்குப் பிறகுதான், ஞானராஜசேகரன் படமாக எடுத்தார்.

அந்தப் படத்தைப் பார்த்தீர்களா?

இல்லை. எனது படம் கைவிடப்பட்டு ஞானராஜசேகரன் படம் வந்தபோது, ‘சார், மோகமுள் படம் பாத்துட்டீங்களா’ என்று பி.சி.ஸ்ரீராம் என்னை அழைத்துக் கேட்டார். நான், ‘பார்க்க மாட்டேன்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘சார், நாம் காதலிச்ச பொண்ணு பக்கத்துத் தெருவுல நடக்குற கல்யாணத்துக்கு அவ புருஷனோட வந்திருந்தா அவள் நல்லா வாழ்றதைப் போய்ப் பார்ப்போம் இல்லையா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘ நல்லா வாழ்ந்தா சரி. உதிரிப்பூக்கள் அஸ்வினி மாதிரி, கொடுமைக்காரப் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, வத்தலும் தொத்தலுமா வந்து நின்னா நம்ம மனசு தாங்குமா? நம்மளால போய்ப் பார்க்க முடியுமா?’ என்று நான் பதிலுக்குக் கேட்டேன். இன்று வரை நான் பார்க்கவேயில்லை அந்தப் படத்தை.

எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவை தி.ஜானகிராமனின் படைப்புகள். அழுக்கில் கூட அழகைப் பார்க்கக் கற்றுக்கொடுத்தவர் அவர். எப்போதுமே மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பார்ப்பதைவிட, அவர்களின் அழகைப் பார்ப்பது சிறந்தது இல்லையா? எனக்கு இப்போதும்கூட ஆசை விடவில்லை. எப்படியாவது அந்த நாவலைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இன்றைய தமிழ்த் திரைப்படப் போக்கு உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?

நீங்கள் என் வாயைப் பிடுங்கப்பார்க்கிறீர்கள். தமிழ் சினிமா என்றில்லை, இந்திய சினிமாவே போதுமான அளவு வளர்ச்சி பெறவில்லை என்றுதான் சொல்வேன். வடக்கிலாவது தேவலாம்... எல்லாவற்றுக்கும் இலக்கியம் என்பது ரொம்பவும் முக்கியம். கேரளத்துடன் ஒப்பிடும்போது இங்கே இலக்கியம் என்பது அந்த அளவுக்கு இல்லை. ஒரு காலத்தில் வளமாக இருந்தது. அதெல்லாம் இப்போது போய்விட்டது. மேலை நாடுகளில் சினிமாவுக்குச் செல்வாக்கு இருப்பதுபோல நாடகங்களுக்கும் செல்வாக்கு இருக்கிறது. இங்கே அப்படியா? கேரளம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இலக்கியம், நாடகம் எல்லாம் நன்றாக இருப்பதால் அதன் விளைவாக திரைப்படமும் நன்றாக இருக்கிறது. எப்போது இதையெல்லாம் நீங்கள் அடைத்துவிடுகிறீர்களோ அப்போது சாக்கடையில் அடைப்பு வந்ததுபோல்தான் ஆகிவிடும்.

நான் எடுத்ததுபோல் யதார்த்த பாணி திரைப்படங் கள்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ‘பாகுபலி’, ‘அவதார்’ போன்ற படங்களும் எடுக்க வேண்டும், திகில் படம், நகைச்சுவைப் படம், அறிவியல் புனைகதைப் படம், வரலாற்றுப் படம் என்று எல்லா வகையிலும் எடுங்கள்! ஆனால், தனித்துவத்தோடு எடுங்கள். அசலாக எடுங்கள்... அவ்வளவுதான்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

இயக்குநர் மகேந்திரன்ஸ்ரீதேவிரஜினிமோகமுள்ஜானிஉதரிப்பூக்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x