

அக்காலத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள காளையை அடக்குதல், கல்லைத் தூக்குதல் போன்ற சவால்களை ஆண்கள் எதிர்கொண்டதாக நாம் அறிந்திருப்போம். காலமாற்றத்தில் அதுபோன்ற சோதனைகள் காணாமல் போய்விட்டன. இந்தியா போன்ற நாடு களில் ஆண்கள் வரதட்சணை பெற்றுப் பழகிவிட்டபோதிலும், பெண் வீட்டுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் வழக்கமும் பல இடங்களில் இருந்து வருகிறது.
அதில் பெண்ணின் தந்தை கேட்கும் வரதட்சணையை மணமகன் கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும்.
அரபு நாடுகளில் ஒன்றான யேமனிலும் பெண் வீட்டுக்கு மணமகன் வரதட்சணை கொடுக்கும் முறையே உள்ளது.
இந்த வரதட்சணையால் இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டார் யேமன் நாட்டு மாப்பிள்ளை ஒருவர்.
விரும்பிய பெண்ணை மணமுடிப்ப தற்காக வீடு தேடிச் சென்று பெண் கேட்ட அவருக்கு மாமனார் கேட்ட வரதட்சணை யைக் கேட்டு தலை சுற்றாத குறைதான்.
அப்படி என்ன அதிகம் கேட்டு விட்டார் அந்த பேராசை பிடித்த மாமனார் என்ற கேள்வி எழுகிறதா?
என்ன ‘ஸ்டேட்டஸ்’ போடுவீர்களோ, எந்தப் படத்தை ‘அப்லோட்’ செய்வீர்களோ எனக்குத் தெரியாது. உங்கள் ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒட்டு மொத்தமாக 10 லட்சம் ‘லைக்’குகளை வாங்கி விட்டு வாருங்கள். அடுத்த நாளே திருமணத்துக்கு நாள் குறித்துவிடலாம் என்பதுதான் சலீம் அயாஸ் என்ற பெயர் கொண்ட அந்த மாமனார் கேட்ட வரதட்சணை.
சலீம் அயாஸ், யேமனில் கொஞ்சம் பிரபலமான கவிஞர். இதுவரை யாருமே கேட்காத வித்தியாசமான வரதட்சணையை அவர் கேட்ட செய்தி காட்டுத்தீ போல பரவத் தொடங்கியது. விஷயம் அறிந்த உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் சலீமின் வீட்டை முற்றுகையிட்டு அவரிடம் பேட்டி எடுக்கத் தொடங்கிவிட்டன.
தனது வித்தியாசமான வர தட்சணைக்கு சலீம் கூறிய தன்னிலை விளக்கம் இதுதான்: யேமனில் வரதட்சணை பிரச்சினை அதிகரித்து வருகிறது. கொடுக்க முடியாத அளவுக்கு பணத்தையும், தங்கத்தையும் கேட்டு இளைஞர்களை கஷ்டப்படுத்துகிறார்கள். இது தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பணத்தையோ நகையையோ கேட்காமல் பேஸ்புக் லைக்குகளை வரதட்சணையாகக் கேட்டேன். எனது நோக்கம் வெற்றிகரமாகவே நிறைவேறி வருகிறது. யேமனில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் எனது இந்த நூதன வரதட்சணை கவன ஈர்ப்பைப் பெற்று வருகிறது என்று கூறிவிட்டார்.
வரதட்சணை கூடாது என்று கூறும் நீங்கள், 10 லட்சம் பேஸ்புக் லைக்குகளை வரதட்சணையாகக் கேட்டு ஓர் இளைஞரை கஷ்டப்படுத்துவது நியாயமா என்பது செய்தியாளர்களின் அடுத்த கேள்வியாக இருந்தது.
இப்போதைக்கு 10 லட்சம் லைக்கு களை கேட்டுள்ளேன். பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் எனது மகளை பெண் கேட்டவரை ‘பாலோ’ செய்து வருகிறேன்.
என் மகள் மீது அவர் எந்த அளவுக்கு விருப்பத்துடன் இருக்கிறார் என்பதைக் கண்டறியவே இந்த வரதட்சணை சோதனை. இதில் அவர் முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும், எந்த அளவுக்கு தீவிரமாக முயற்சிக்கிறார் என்பதன் அடிப்படையில் அவருக்கு எனது மகளைக் கொடுப்பேன் என்றார் சலீம்.
அவர் இவ்வாறு கூறிவிட்டுப் போய்விட்டார். ஆனால் மாப்பிள்ளையின் பாடுதான் பெரும் திண்டாட்டமாகிவிட்டது. யேமனின் மக்கள்தொகையே சுமார் இரண்டரை கோடிதான். இதில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 3-ல் ஒரு பங்கு இருந்தாலே பெரிய விஷயம். அதில் எத்தனை பேர் பேஸ்புக்கில் தனக்கு லைக் போடுவார்கள் என்பது அவரது கவலை.
எனினும் மனம் தளராத அவர் பேஸ்புக்கில் புகுந்து பல்வேறு கருத்துகளை அள்ளி வீசி லைக்கு களுக்கு வலைவீசத் தொடங்கி விட்டார். இச்செய்தி சர்வதேச ஊடகங்களில் பரவத் தொடங்க பல்வேறு நாடுகளில் இருந்து பேஸ்புக்வாசிகள் பலர் மாப்பிள்ளைக்கு லைக்குகள் மூலம் ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கிவிட்டனர். இப்போதைய நிலையில் ஏறக்குறைய 5 லட்சம் லைக்குகளை வாங்கிக் குவித்து, மாமனார் கேட்ட ‘டிஜிட்டல் டவுரி’யில் பாதியை எட்டிவிட்டார்.
இது சலீமின் ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’ என்று எதிர்ப்புக் கருத்துகள் எழுந்தாலும், சமூக வலைத்தளங்களில் இப்போது இது ஒரு ‘ஹாட் டாப்பிக்’ ஆக உள்ளது.