

புதுமைப்பித்தன், க.நா.சு., சு.ரா., பிரமிள் என்று நீளும் தமிழ் விமர்சன மரபு இன்று தேக்க நிலையை அடைந்துவிட்டதோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. தமிழின் தற்போதைய விமர்சன மரபு குறித்து எழுத்தாளர்கள், விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம்.
சி. மோகன்
எந்த ஒரு துறையிலும், அத்துறை சார்ந்து செயல்பட பயிற்சியும் ஞானமும் அவசியம். அப்படியான அவசியத்தை இணைய விமர்சகர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. உதிரியான, மேம்போக்கான அபிப்ராயங்களே சிதறி விழுகின்றன. மரபும் செழுமையும் அறியாத பேதமையும் அம்பலமாகின்றன. தீவிர மனோபாவமும் அடிப்படை நெறிமுறைகளும் அற்ற இந்தப் போக்கு ஒரு விபரீத விளையாட்டு. க.நா.சு. ரசனை சார்ந்து, செல்லப்பா பகுப்பாய்வு முறையில் விமர்சனம் செய்துகொண்டிருக்கையில், பிரமிள் முதன்முறையாகக் கோட்பாட்டுரீதியிலான அணுகுமுறையில் தரநிர்ணயம் செய்தார். இணையங்களில் எதையும் உணர்ந்தோ, கருத்தாக்கங்கள் சார்ந்தோ விமர்சனங்கள் உருவாகவில்லை.
மாலதி மைத்ரி
பெண்கள் அதிகம் விமர்சனம் எழுத வரவில்லை என்று சொல்கிறார்கள். அது உண்மைதான். அவர்கள் படைப்பிலக்கியத்தில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். கல்வித் துறை சார்ந்தும், முனைவர் பட்டத்துக்காகவும், பெண்ணியம், தலித்தியம் சார்ந்தும் சிலர் இயங்கவே செய்கிறார்கள். ஆனால், கோட்பாட்டைச் சாராமல் குழு சார்ந்தும், ரசனை சார்ந்தும் இயங்குவதே அதிகம் நிகழ்கிறது.
க.மோகனரங்கன்
விமர்சன மரபு உயிர்ப்புடன் இல்லை என்பது தவறான வாதம். அது எப்போதும்போல உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அதன் பலன்தான், சிற்றிதழ்களிலிருந்து பெருமளவு இணைய வெளிக்கு மாறியிருக்கிறது. நீண்ட கட்டுரைகளுக்குப் பதிலாக, உரையாடல்களும், சிறு விவாதங்களுமாக வடிவம் மாறியிருக்கிறது.
ஜெயமோகன்
கல்வித் துறை, கோட்பாடு, அரசியல் சார்ந்து வருகிற விமர்சன மரபு, ரசனை சார்ந்த விமர்சன மரபு என்று தமிழில் இரண்டு வகை விமர்சன மரபுகள் உண்டு. சமீப காலமாக முதல் மரபு மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறது. ரசனை சார்ந்த விமர்சன மரபு தன்போக்கில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஏனென்றால், அதைச் செய்பவர்களில் பலர் எழுத்தாளர்களாவும் இருக்கிறார்கள். அதை வெளிப்படுத்துவதற்கு இணையம் இடவசதி அளிப்பதால், இணையத்தில் நிறைய விமர்சனக் கட்டுரைகள் வருகின்றன. க. மோகனரங்கன், ராஜகோபாலன், சுனில் கிருஷ்ணன் என்றொரு பட்டியல் சட்டென்று நினைவுக்கு வருகிறது.
எம்.டி. முத்துக்குமாரசாமி
விமர்சனம், அணுக்கமான வாசிப்பிலிருந்து உருவாக வேண்டும். அதற்கு உன்னிப்பான வாசிப்பு தேவை. ரசனை விமர்சனம் என்ற பெயரில் எழுதி விமர்சனத் துறையையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். வெறும் பாராட்டுரைகள், புகழுரைகள் வாசகர்களுக்கு உதவாது. அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற தத்துவங்கள் மூலம் எப்படி நுட்பங்களை வெளிப்படுத்துவது என்றிருந்த விமர்சனத் துறையை, ரசனை விமர்சனக்காரர்கள் நுண்ணுணர்வு அற்றதாக மாற்றிவிட்டார்கள். கூர்மையான விமர்சனத்தை மீட்டெடுக்கப் பெரிய முயற்சி தேவைப்படுகிறது. அதற்குப் பத்திரிகைகளுக்கும் பங்கிருக்கிறது.