

நவீனத் தமிழ் இலக்கிய மாபெரும் சர்ச்சைகளில் ஒன்றான ‘மாதொருபாகன்’ சர்ச்சை இலக்கியக் களத்தின் வரம்புகளை உடைத்துக்கொண்டு, வன்மமான முகத்தைக் காட்டியபோது எழுத்துக்கே முழுக்குப்போட்டார் அந்த நாவலின் ஆசிரியர் பெருமாள்முருகன். அது தொடர் பான வழக்கை விசாரித்த நீதிபதி, எழுத் தாளருக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், “எழுத்தாளர் உயிர்பெற்று எழுந்து, தான் சிறந்து விளங்கும் செயலில் எழுதுவதில் மீண்டும் ஈடுபடட்டும்” எனத் தீர்ப்பளித்திருந்தார். அதன்படி மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கும் பெருமாள்முருகன் ஒரு கவிதைத் தொகுப்பு (கோழையின் பாடல்கள்), ஒரு நாவல் (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை) என மீண்டும் இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கிறார்.
மீண்டும் எழுதத் தொடங்கும் உணர்வு எப்படி உள்ளது?
மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கெங்கோ அலைக்கழிந்த சிட்டுக்குருவி தன் சொந்தக் கூட்டை வந்தடைந்துவிட்ட காட்சிப் பிம்பம் மனத்தில் தோன்றுகிறது.
புதிய நாவலைப் பற்றிய குறிப்பைப் பார்க்கும்போது உங்களுக்கு எதிரான சர்ச்சைகளுக்கான எதிர்வினை போலத் தெரிகிறதே?
எதற்குமே படைப்புரீதியாகத்தான் என்னால் எதிர்வினை ஆற்ற முடியும் என்று தோன்றுகின்றது.
இடைப்பட்ட காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
கொஞ்ச காலம் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தேன். அதன்பின் கவிதைகள் என்னை எழுத வைத்தன. ‘கோழையின் பாடல்க’ளாக அவை உருக்கொண்டன. என் மனைவி, பிள்ளைகளோடு நேரம் செலவிட்டேன். மாணவர்களோடும் ஏதேதோ உரையாடினேன். நிறையத்தூங்கினேன். தொடர்பயணத்தின் தொந்தரவுக்கும் ஆட்பட்டேன். ‘சும்மா இருப்பதன் சுகம் அற்புதம்’ என்பதை உணர வாய்த்ததை இக்காலத்தின் பேறாகக் கருதுகிறேன்.
படைப்பு புண்படுத்துதல் குறித்த விவாதங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அத்தகைய விவாதத்தைத் தவிர்க்க இயலாது; விவாதம் அவசியமானதும்கூட. விவாதங்களைக் கடந்து வன்முறை உருக்கொள்வதைத் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றித்தான் ஆழமாக யோசிக்க வேண்டும்.
நெருக்கடியான காலகட்டத்தில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்த படைப்புகள், ஆளுமைகள்?
கடந்த இரண்டாண்டுகள் என்னால் வாசிக்கவே இயலாத காலம். என் மனநிலையைப் புரிந்துகொண்டு என் குடும்பமும் நண்பர்களும் வாசகர்களும் பல்வேறு வழிமுறைகளில் பெரும் ஊக்கம் கொடுத்தனர்.