Published : 09 Jun 2017 09:40 AM
Last Updated : 09 Jun 2017 09:40 AM

மத்திய கிழக்கையே மாற்றிய போர்!

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே 50 ஆண்டுகளாகத் தொடரும் நிகழ்வுகளின் தொடக்கப் புள்ளி இந்தப் போர்.

ஜூன் 5, 1967. காலை 7:10 அளவில் இஸ்ரேலின் ஹட்ஸோர் விமான தளத்திலிருந்து விமானங்கள் பறக்கத் தொடங்கின. 7.30 மணிக்குள் வானம் முழுவதும் விமானங்களால் மறைக்கப்பட்டதுபோலத் தோன்றியது. சிறிது நேரத்தில் குண்டு வீசும் விமானங்கள் எகிப்திய விமான தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின. முதலில் விமானங்களின் ஓடுபாதைகளின் மீது குண்டுகள் வீசப்பட்டன.

அரை மணி நேரத்தில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்காமலேயே பலியாயின. காலை 10.30-க்குள் எகிப்தின் 286 விமானங்கள் அழிக்கப்பட்டன. எகிப்தின் விமானப் படையின் மூன்றின் இரண்டு பங்கு விமானங்கள். இஸ்ரேலின் இழப்பு ஒன்பது விமானங்கள்.

‘எகிப்தின் விமானப் படை இறந்து விட்டது’ என்று இஸ்ரேலியத் தலைவர் ஒருவர் சொன்னார். உண்மை, உலக வரலாற்றிலேயே இது போன்ற சாகசம் நிகழ்ந்ததில்லை. இஸ்ரேலியர்களாலேயே நம்ப முடியவில்லை. ஜூன் 5-க்கு முன்னால் நிலைமை வேறு மாதிரி. இஸ்ரேலிய நகரங்கள் அனைத்தும் அரேபிய நாடுகளின் விமானங்கள் பொழியும் குண்டுமாரியில் அழியும் அபாயத்தில் இருந்தன. ஜூன் 10-ல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இஸ்ரேலிய வீரர்கள் சூயஸ் கால்வாயின் கிழக்குப் பகுதியைப் பிடித்துவிட்டார்கள். கெய்ரோ 65 மைல் மட்டுமே. அமைதி திரும்பினால் போதும் என்ற பயத்தில் ஜோர்டான் இருந்தது. சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் நகரத்தைப் பிடித்துவிடும் நிலையில் இஸ்ரேலிய துருப்புக்கள் இருந்தன. கிழக்கு ஜெருசலேம் நகரம் இஸ்ரேலியர் கையில்.

ஏன் இந்தப் போர்?

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், இந்தியாவைப் பிரித்ததைப் போலவே பிரிட்டனின் ‘மேற்பார்வை’யில் இருந்த பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் விதமாக ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 29 நவம்பர் 1947-ல் நடந்த வாக்கெடுப்பில் 72% நாடுகள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தன. (இந்தியா பிரிவினைக்கு எதிராகவும் சோவியத் ஒன்றியம் பிரிவினைக்கு ஆதரவாகவும் வாக்களித்தன). இந்தத் தீர்மானத்தின்படி பாலஸ்தீனம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் ஒரு பகுதி யூதர்களுக்கு; ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கு; மூன்றாவது பகுதியில் சர்வதேச நகரமாக ஜெருசலேம். பிரித்தானியர்கள் விலகிக்கொண்டதுமே இஸ்ரேல் பிறந்ததாக 1948 மே14-ல் பென் குரியன் அறிவித்தார்.

அறிவிப்பு வெளியானவுடன் போர் மூண்டது. பல அரேபிய நாடுகள் ஒன்றுசேர்ந்து தாக்குதல்களைத் தொடுத்தன. ஒரு வருடப் போருக்கு பின்னால் சமாதானம் ஏற்பட்டது. இஸ்ரேல் பிழைத்துக்கொண்டது. ஆனால், பாலஸ்தீனம் பிறக்கவேயில்லை. மேற்குக் கரை என்று அழைக்கப்பட்ட ‘வெஸ்ட் பேங்க்’ பகுதியும் (இது இஸ்ரேலுக்கு கிழக்கில் இருந்தது!) கிழக்கு ஜெருசலேமும் (அதன் முக்கியமான புனிதப் பகுதிகள் இருந்த பழைய நகரம் உட்பட) ஜோர்டானின் கீழ் வந்தது. மத்தியத் தரைக்கடல் ஓரத்தில் ‘காசா ஸ்ட்ரிப்’ என்று அழைக்கப்பட்ட நிலத் துண்டு எகிப்தின் கைக்கு வந்தது. அதாவது, இஸ்ரேலின் வடபுறத்தில் சிரியா. அதன் கையில் இருந்த ‘கோலன் ஹைட்ஸ்’ எனப்படும் மேட்டுப் பகுதியிலிருந்து, இஸ்ரேலின் வடபகுதி நகரங்களை நெருக்க முடியும். கிழக்குப் புறத்தில் ஜோர்டான். மேற்குப் புறத்தில் மத்தியத் தரைக்கடல். தெற்கிலும் மேற்கில் காசா பகுதியிலும் எகிப்து. அதற்குச் சொந்தமான சைனாய் பாலைவனம் இஸ்ரேலின் தெற்குப் பகுதியைத் தொட்டுக்கொண்டிருந்தது.

மக்கள் தலைவர் நாசர்

அந்தக் காலகட்டத்தில் எகிப்தை நாசர் ஆண்டு கொண்டிருந்தார். அவரைப் போன்று அரேபிய மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் இன்று வரை இல்லை. ஆனால், 1967-ல் எகிப்தின் பொருளாதாரம் இறங்குதிசையில் இருந்தது. அமெரிக்கா வியட்நாமில் மாட்டிக்கொண்டிருந்தது போல எகிப்தும் ஏமனில் மாட்டிக்கொண்டிருந்தது. 50,000 எகிப்திய வீரர்கள் அங்கிருந்தார்கள். அமெரிக்காவிடம் பணம், தொழில்நுட்பம், படைபலம் இருந்தது. எகிப்திடம் எதுவும் இல்லை. இருந்தாலும், 1967-ல் இஸ்ரேலை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அரபு நாடுகள் தீர்மானித்தன.

அந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கு இடையே இருந்த சைனாய் பாலைவனத்தில் ஐநா துருப்புகள் அமைதி காத்துக்கொண்டிருந்தன. அதன் தலைவராக ஜெனரல் ரிக்கி என்ற இந்தியர் இருந்தார். துருப்புகளை வெளியேறச் சொல்லி நாசர் உத்தரவிட்டார். இஸ்ரேலுக்கு எதிராக சைனாய் பாலைவனத்தில் லிபியா, துனிசியா, மொராக்கோ, மற்றும் சவுதி அரேபிய படைகள் திரண்டன. ஜோர்டானில் சிரியா, இராக், ஜோர்டான் படைகள் குவிக்கப்பட்டன. 900 விமானங்கள், 5,000 டேங்குகள், ஐந்து லட்சம் துருப்புகள்.

இவர்களுக்கு எதிராக 2.75 லட்சம் துருப்புகள், 230 விமானங்கள், 1,100 டேங்குகளுடன் இஸ்ரேலிய ராணுவம். இஸ்ரேலின் அன்றைய மக்கள்தொகை 28 லட்சம் மட்டுமே.

சண்டை செய்ய விரும்பவில்லை!

இஸ்ரேல் சமாதான முயற்சிகளைக் கைவிடக் கூடாது என்று பென் குரியன் சொன்னார். அமெரிக்காவும் இஸ்ரேல் முதல் தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தின. அரபு நாடுகளுக்கு ஆதரவாக இருந்த சோவியத் ஒன்றியமும் போர் மூண்டால் இஸ்ரேல் மூட்டைப் பூச்சி போல நசுக்கப்படும் என்றது. பிரதமர் எஷ்கோலும் இரண்டும்கெட்டான் நிலையில்தான் இருந்தார். ஆனால் தாக்காவிட்டால் தப்ப முடியாது என்ற உண்மை உறைத்ததும் இஸ்ரேல் தாக்கியது.

அரபு நாடுகளின் தோல்விக்குக் காரணம், அவர்களது தலைவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அரேபிய வீரர்களில் பலர் திறமையாகப் போர் புரிந்தார்கள் என்று இஸ்ரேலிய ராணுவ வரலாறே சொல்கிறது. ஆனால், அரபுத் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை. நாசரைத் தவிர மற்றவர்களுக்கு தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

ஆறு நாட்களில் வெற்றி

இஸ்ரேலே எதிர்பார்க்காத வெற்றி ஆறு நாட்களில் கிடைத்துவிட்டது. மூன்று நாடுகளின் விமானப் படைகளும் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டன. சைனாய் பாலைவனம் எகிப்திய டேங்குகளின் மயானமாக மாறிவிட்டது. பாலைவனம் முழுவதும் இஸ்ரேல் கைக்கு வந்துவிட்டது. 132 மணி நேரத்தில் இஸ்ரேல் 4,20,000 சதுர மைல்கள் நிலத்தைக் கைப்பற்றியது. அதன் பரப்பளவைவிட 3.5 மடங்கு அதிகம். காசா துண்டு, மேற்குக் கரை, கோலன் மேடு போன்றவை தவிர ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் கைவசம் வந்தது. அதன் புனிதப் பகுதிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் யூதர்களிடம் வந்தடைந்தன. இன்று வரை, சைனாய் பாலைவனத்தைத் தவிர மற்றைய பகுதிகள் எல்லாம் இஸ்ரேலின் வசத்தில்தான் இருக்கின்றன. பெயரளவில்தான் பாலஸ்தீனம் இயங்குகிறது. நாசர் மனம் உடைந்து மூன்றே வருடங்களில் இறந்துபோனார். இந்திய ஜெனரல் ரிக்கி போருக்கு முன்னால் பத்திரிகையாளர்களிடம் சொன்னார். ‘நாம் பார்க்கப்போவது ஒரு பெரிய மத்திய கிழக்குப் போர். இதனால் வரப்போகும் பிரச்சினைகளின் தீர்வுகளை நாம் 50 வருடங்களுக்குப் பின்பும் தேடிக் கொண்டிருப்போம்”

நாம் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x