

உண்மைக்கே உரிய அபாரமான வசீகரத்தினால் கோடிக் கணக்கானவர்களை ஈர்த்தவர் காந்தி.
நீங்கள் ஏன் மகாத்மா என்று அழைக்கப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு காந்தி சொன்னார்: “மகாத்மா என்ற பட்டம் என்னைப் பலமுறை கடுமையான மனவலிக்குத் தள்ளியிருக்கிறது. எனக்கு இந்த உலகத்திடம் சொல்ல புதியதாக ஏதும் இல்லை. உண்மையும் அகிம்சையும் புராதனமான மலைகளைப் போன்றவை. என்னால் முடிந்தவரை நான் அவ்விரண்டையும் என் சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயன்றேன் என்று மட்டுமே சொல்ல முடியும்.
ஆனால், நான் அந்தச் சோதனைகள் மூலம் அடைந்த அனுபவங்களை விளக்குவதற்கு எப்போதுமே தயாராக இருப்பேன். அதன் மூலம் நான் அரசியலில் செயல்படுவதற்கான வலிமையை அடைந்தேன். ஏராளமான மனிதர்கள் என்னை மதிப்பதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், நான் வேறு எவரையும்விட அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.”
ஒரு தேசமே அவரது காலில் விழுந்து கிடந்தது. அவர் காலில் தொட்டு வணங்கியவர்களால் அவர் பாதங்கள் புண்ணாக ஆயின. அவரைக் கேட்டுப் புரிந்துகொண்டு அல்ல; அவரைக் கண்டு உள்வாங்கியே கோடிக் கணக் கானவர்கள் அவர் பின்னால் சென்றார்கள். அவர் சொல்வது சரி என்று புரிந்துகொண்டதனால் அல்ல, அவர் சரியானவர் என்று புரிந்துகொண்டதனால்!
அரசியல் புகட்டியவர்
அந்த மாபெரும் விந்தையை என்றாவது எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? ஒரு தொன்மையான தேசம். குறைந்தது இருபது நூற்றாண்டுகளாக நிலப்பிரபுத்துவம் விளங்கிய பகுதி. முக்கால் பங்குக்குமேல் நிலத்தில் மன்னராட்சி அப்போதும் நிலவிய மண்.
அங்கே வெறும் பதினைந்து வருடங்களுக்குள் ஒரு தனிமனிதர் மொத்த சமூகத்தையே ஜனநாயக அரசியலுக்குக் கொண்டுவருகிறார்! காந்தியின் காங்கிரஸ்தான் இந்திய வரலாற்றிலேயே அதிகமான பெண்களை அரசியலுக்குக் கொண்டுவந்த இயக்கம் தெரியுமா? அதனுடன் ஒப்பிடும்போது கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலுமெல்லாம் பெண்களின் பங்கேற்பு என்பது அநேகமாக எதுவுமே இல்லை.
காந்தியை நம்பி லட்சக் கணக்கில் எளிய, நடுத்தரவர்க்க மக்கள் அலையலையாகச் சிறைக்குச் சென்றார்கள். லட்சக் கணக்கான பெண்கள் சிறைக்குச் சென்றார்கள். வீட்டை விட்டு வெளியே செல்வதே பெரும் பாவம் என விலக்கப்பட்டவர்களாக நூற்றாண்டுகளாக வாழ்ந்த பெண்கள்! அவர் சொன்னார் என்று அப்பட்டமான சாதிவெறிப் பின்னணியில் பிறந்து வளர்ந்த லட்சக் கணக்கானவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் சேரிகளுக்குச் சென்று வாழ்ந்தார்கள். அவர்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வந்தார்கள்.
இந்தியாவின் முதல் மக்களியக்கம் காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டமே. அந்த அலைமூலம்தான் நிலப்பிரபுத்துவ மனநிலையில் அரசியலின்றி பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்திருந்த இந்திய சமூகம் அரசியல் மயமாக்கப்பட்டது.
என்னை ஆய்வுசெய்து பார்!
அந்த அரசியல் எழுச்சியை உருவாக்கியது எது? இன்று தகவல்தொழில்நுட்ப அலையில்கூட இந்தியாவை முழுக்கத் தொடர்புகொள்வது பெரும் சவாலாக இருக்கிறது. அன்றைய இந்தியாவில் அச்சு ஊடகங்கள் மிகமிகக் குறைவு. வானொலி இன்னும் பரவலாக ஆகவில்லை. ஆயிரக் கணக்கான ஊர்களில் மின்சாரம் இல்லை, ஆகவே ஒலிபெருக்கி இல்லை. எப்படி காந்தி இந்த தேசத்துடன் பேசி அதைக் கருத்தியல்ரீதியாக ஒருங்கிணைத்தார்?
அவர் தன்னையே தன் செய்தியாக ஆக்கிக்கொண்டார். தன் வாழ்க்கையே தன் செய்தி என்று கூற ஒரு தலைவனுக்கு அபாரமான மனத்தைரியம் தேவை. என் தனி வாழ்க்கையில் ரகசியங்கள் இல்லை என்று அறிவிக்க, ‘என்னை ஆய்வுசெய்து பார்’ என வரலாற்றின் முன்பு வந்து நிற்க, தன் நேர்மைமேல் ஆணித்தரமான நம்பிக்கை தேவை. எல்லையற்ற ஆன்ம வல்லமை தேவை.
இந்திய அரசியலின் நூறு வருட வரலாற்றில் ஒரே ஒரு மனிதனைத் தவிர, எவருமே அப்படிச் சொல்ல முடியாது. சந்தேகமிருந்தால் நீங்கள் நம்பும் எந்த ஒரு தலைவனுடைய அந்தரங்க வாழ்க்கையையும் காந்தியின் அந்தரங்க வாழ்க்கை ஆராயப்பட்டதுபோலத் தோண்டித்துருவிப்பாருங்கள். அவரது ஆன்மா கதறும்!
தன்னையே செய்தியாக்கியவர்
தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக் கணக்கான ரயில் நிலையங் களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த, கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கிக் கும்பிட்டார். அதுவே, இந்தியா முழுக்கச் சென்று சேர்ந்த செய்தி. அதுவே இந்த நாட்டை ஒன்றாகத் திரட்டி ஜனநாயக அரசியலுக்குக் கொண்டுவந்த கருத்தியல் பேரலை. அந்த இடத்தை அவருக்கு அளித்தது அவரது மகாத்மா என்ற அடைமொழி.
எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? தான் வாழ்ந்த காலகட்டத்தில் காந்தி எத்தனை லட்சம் பேரை ஆழமாகப் பாதித்திருக்கிறார் என்று? அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அளவிலேயே ஒருவகை மகாத்மாக்கள் என்று தெரியுமா உங்களுக்கு? சிலர் அவரிடம் ஒருசில சொற்களே பேசியிருக்கிறார்கள், லாரி பேக்கர்போல. சிலர் அவரைப் பார்த்தார்கள் அவ்வளவுதான், வைக்கம் முகமது பஷீர்போல.
அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை தரிசனத்தையே அது மாற்றியமைத்திருக்கிறது. எத்தனை சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள்! அவர் வாழ்ந்த காலத்தின் மகத்தான மனங்களில் அவரது அழுத்தமான பாதிப்பில்லாதவர்கள் அநேகமாக எவருமே இல்லை. ஐன்ஸ்டைன் முதல் சார்லி சாப்ளின் வரை.
அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்மா என்று நம்ப வேண்டும். அல்லது உங்களை நம்பவைத்தவரை அதிமகாத்மா என்று நம்ப வேண்டும். மன்னிக்கவும், அதைவிட காந்தியை நம்புவதற்கே அதிகமான ஆதாரங்கள் இருக்கின்றன.
நான் காந்தியை மகாத்மா என்ற சொல்லால் சொல்வ தில்லை. ஒரு மனிதரை நாம் அறிய முயலும்போது அவருக்கு அடைமொழிகள் போடுவதென்பது முன்முடிவு களை நிறுவி அவரை நம்மிடமிருந்து மறைத்துவிடும் என்பதனால்தான் அது. ஆனாலும், “பாழ்பட்டு நின்றதா மோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க” என என் மொழியின் நவகவிஞனுடன் சேர்ந்து கூத்தாடுவதற்கு எனக்குத் தயக்கமில்லை.
- ஜெயமோகன் எழுதி, தமிழினி பதிப்பகம் வெளியிட்ட ‘இன்றைய காந்தி’ நூலிலிருந்து சில பகுதிகள்.
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com