

கார்ல் டைசராட், பீட்டர் ஹேகமன், கேயார்க் நாகெல்
மனித மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று மின்னியல் - வேதியியல் சமிக்ஞைகள் மூலம் தொடர்புகொள்கின்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட நினைவு, உணர்வு, நடத்தை அல்லது நோய்க்கு எந்த நரம்பு செல்கள் காரணமாகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது நீண்ட காலமாகச் சவாலாக இருந்தது.
இந்தச் சவாலுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சியதற்காக கார்ல் டைசராட் (Karl Deisseroth), பீட்டர் ஹேகமன் (Peter Hegemann), கேயார்க் நாகெல் (Georg Nagel) ஆகிய மூன்று அறிவியலாளர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான உடலியல்-மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியின் மூலம் நரம்பு செல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ‘ஆப்டோஜெனிடிக்ஸ்’ (Optogenetics) என்னும் புதிய அணுகுமுறையை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பாசியில் கிடைத்த ரகசியம்!
இந்தக் கண்டுபிடிப்பின் சுவாரசியம், ‘கிளமிடோமோனாஸ்’ (Chlamydomonas) என்னும் ஒற்றை செல் பாசியில் இருக்கிறது. வெளிச்சம் வரும் திசையை நோக்கி நீந்தும் திறன் இதற்கு உண்டு. அதற்குக் காரணம், அவற்றின் உடலில் இருக்கும் மிகச் சிறிய ‘ஒளிப்புள்ளி’ (Eyespot).
கண்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு மிக நுண்ணியதாக இருந்தாலும், வெளிச்சத்தை உணர்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஒளிப்புள்ளியில் ரெட்டினல் (Retinal) என்கிற ஒளியைப் பிடிக்கும் மூலக்கூறு உள்ளது. ஒளி இந்த மூலக்கூறைத் தாக்கும்போது, பாசிக்குள் ஒரு சமிக்ஞை உருவாகிறது.
அந்தச் சமிக்ஞையின் உதவியுடன் ஒளி எந்தத் திசையில் இருந்து வருகிறது என்பதைப் பாசி உணர்ந்து, அந்தத் திசையை நோக்கி நீந்துகிறது. இயற்கையில் காணப்படும் இந்தச் சிறிய ‘ஒளி உணரும்’ அமைப்புதான் மூளையின் நரம்பு செல்களை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தும் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக அமைந்தது.
2005இல் அமெரிக்க அறிவியலாளர் கார்ல் டைசராட் இந்த ஒளிப்புள்ளியில் இருந்து ‘சேனல்ரோடாப்சின்-2’ (Channelrhodopsin-2) என்கிற புரதத்தைப் பிரித்தெடுத்தார். மரபணுப் பொறியியல் மூலம் இந்தப் புரதத்தை எலியின் மூளையில் செலுத்தி, மூளை நரம்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று உறுதிப்படுத்தினார்.
இதே முறையில் மனிதர்களின் மூளை நரம்பு செல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் உறுதிப்படுத்தினார். இந்தப் புரதம் ‘ஆப்டோஜெனிடிக்ஸ்’ என்னும் புதிய அறிவியல் துறைக்கு அடித்தளமாக அமைந்தது.