

கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு (Anne Carson) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், விமர்சகர், செவ்வியல் பேராசிரியர் என்று பல முத்திரைகளைக் கொண்டு ஆன் கார்சனை நாம் அடையாளப்படுத்தலாம்.
‘செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமாக உரையாடியபடி சமகால இலக்கியத்துக்குப் புதிய வடிவங்களை அளித்த துணிச்சலும் புத்தாக்கமும் மிக்க படைப்புகளுக்காக இந்த விருது’ என்கிறது ஸ்வீடிஷ் அகாடமியின் அறிவிப்பு.
விருதுச் செய்தியைச் சொல்ல அகாடமியின் நிரந்தரச் செயலர் அழைத்தபோது ஆன் கார்சன் பெரிதும் ஆச்சரியப்பட்டாராம். தான் இப்போது ஐஸ்லாந்தில் இருப்பதாகவும், காற்றைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொல்ல மட்டுமே அவருக்கு நேரம் இருந்ததாம். அவரது எழுத்தைப் படித்தவர்களுக்கு இதுவும் அவர் இயல்புடன் பொருந்தியதாகவே இருக்கும்.
தத்துவ விசாரணையும் கவித்துவமும்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கய் டாவன்போர்டின் (Guy Davenport) உந்துதலால் ஆன் கார்சனை மீண்டும் படிக்க நேர்ந்தது. அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘ஆன்டிகோனிக்’ (Antigonick) என்கிற புத்தகம் வழியே அவர் எனக்கு அறிமுகமாகி இருந்தார்.
அந்தப் புத்தகம் எனக்குப் பிடித்தமானதுதான். ஏனோ தெரியவில்லை, அதன் பிறகு அவரைத் தொடர்ந்து படிக்காமல் விட்டுவிட்டேன். அதைப் பேரிழப்பாக உணர்ந்த அந்த ஆண்டில் அவரது ‘கண்ணாடி, நகைமுரண், கடவுள்’ (Glass, Irony and God) என்கிற கவிதைத் தொகுப்பையும், யூரிபிடீஸின் நான்கு நாடகங்களின் மொழிபெயர்ப்பான ‘துயரத்தின் பாடங்கள்’ (Grief Lessons) தொகுதியையும் படித்தேன்.
தத்துவ விசாரணை சார்ந்த அவரது கட்டுரைகள் கவித்துவமானவை. அவரது கவிதைகளோ தத்துவ விசாரணையின் சாயல் கொண்டவை. அவரது பண்டைய கிரேக்க நாடக மொழிபெயர்ப்புகள் நவீனக் கவிதையின் சாயல் கொண்டவை.
அவற்றின் அபாரமான முன்னுரைகள் இலக்கிய விமர்சனம், நாடகம், வரலாறு, தத்துவம், மொழியியல் என்று பல துறைகளை ஒருங்கிணைக்கும் ருசிகர அவியல். யூரிபிடீஸைப் பற்றி எழுத முயன்றபோது, அந்த முன்னுரைகளைக் கடந்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நான்கு முன்னுரைகளையுமே நான் மொழிபெயர்த்தேன். அவற்றின் கூட்டுத்தொகையே யூரிபிடீஸின் உலகுக்கான கச்சிதமான அறிமுகம் என்று நம்புகிறேன்.
இடைவெளியில் நிகழும் எழுத்து ஆன் கார்சனின் முதல் நூல் ‘கசந்தினிக்கும் ஈராஸ்’ (Eros the Bittersweet, 1986). அதன் முன்னுரையிலேயே அவர் காஃப்காவின் ‘பம்பரம்’ என்கிற சிறுகதையை எடுத்துக்கொள்கிறார்.