

பத்திரிகையாளர் நண்பர் ஒருவர். முன்னாள் குடிநோயாளி. இப்போது அறவே நிறுத்திவிட்டார். அது ஓர் ஆச்சர்யம். காரணம், அவர் குடித்த குடி அப்படி. உட்கார்ந்து எழுந்தால் ஒன்றரை முழு பாட்டில் காலி. அப்புறம் பல்லை நறநறவென்று கடிப்பார். கண்களை உருட்டி மிரட்டுவார். யாரிடமும் பேசாமல் தனிமையில் ஒளிந்துகொள்வார். மற்றொரு சமயமோ குடித்தால் குழந்தையாகிவிடுவார். குடிக்கும்போது சைடிஷ் கூட தொட்டுக்கொள்ள மாட்டார். பக்கத்தில் இருப்பவரிடம், “ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கிறேன், அதுபோதும் செல்லம்” என்பார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் பாடல்கள் அத்துப்படி அவருக்கு. அழகாகக் குரலெடுத்துப் பாடுவார். கவிதைகள் வடிப்பார். அவரது எழுத்துக்காக ஏங்கியிருக்கிறேன். அலுவலக நேரத்திலேயே குடித்ததற்காக அவர் மீது பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதும் அசராமல் “கலைஞன் குடிக்கத்தான் செய்வான்” என்பார்.
இப்படி இன்னும் நிறையப் பேரை நம்மிடையே உதாரணம் காட்ட முடியும்.
கலைஞர்களின் சாபம்
இப்போது மட்டுமல்ல, காலம்காலமாகக் கலைஞர்கள் பலரும் குடிநோய்க்கு ஆளாகிவருகின்றனர். இன்றும் பத்திரிகை, சினிமா துறைகளில் மது அருந்தும் பழக்கத்தால் அழிந்துபோனவர்கள், அழிந்துகொண்டிருப்பவர்கள் என்று நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். இழப்பு அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும்.
டாக்டர் விரிவாகப் பேசினார்: “பொதுவாகவே நுட்பமான பணிகளைச் செய்பவர்கள், கலைஞர்கள் அதிகம் குடிநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக அவர்கள் அத்தனை பேருமே குடிநோயாளிகள் என்று சொல்ல வரவில்லை. இவர்களில் பலருக்கும் இருப்பது இரு துருவ மனநிலைக் கோளாறு (Bipolar mood disorder). தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தால் வரும் கோளாறுகளில் இதுவும் ஒன்று. அதாவது, உணர்ச்சிகளின் அதீத எழுச்சி நிலைக்கும் - உணர்ச்சிகளின் அதீத தாழ்ச்சி நிலைக்கும் மாறிமாறிப் பயணிப்பது. ஒரு சமயம் குடிநோயாளி ஒரேயடியாக உற்சாகமாக இருப்பார். மலையையே புரட்டிவிடும் தன்னம்பிக்கை இருக்கும்; திறமைகள் பளிச்சிடும்; நகைச்சுவை உணர்வு ததும்பும்; எடுத்த வேலையை முடிக்காமல் தூங்க மாட்டார். பேச்சிலேயே எதிராளியை வசப்படுத்திவிடுவார். கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்வார். இது சில நிமிடங்கள், சில மணி நேரங்கள், சில நாட்கள், சில மாதங்கள்கூட நீடிக்கும்.
மாதம் நான்கு லட்சம் ரூபாய்
உணர்ச்சிகளின் அதீதத் தாழ்ச்சி நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் மிகவும் மோசம். ஆபத்து. கதறி அழுவார். நான் ஏன் பிறந்தேன் என்பார். சாப்பிடாமல், தூங்காமல், யாரிடமும் பேசாமல் தனிமையை அடைகாப்பார். காரணமே இருக்காது. ஆனால், கடுமையாகப் பயப்படுவார். படபடப்பு அதிகம் இருக்கும். தற்கொலைக்குக்கூட முயற்சிக்கக் கூடும்.
அதற்கு இங்கேயே உதாரணம் காட்ட முடியும். நீங்கள் ஓர் இரவு இங்கு தங்கியபோது நடு ராத்திரியில் ஒருவர் மானாவாரியாக டிபன் ஆர்டர் செய்துகொண்டிருந்தாரே, மிகப் பெரிய தொழிலதிபர் அவர். சொந்த ஊரில் ஹோட்டல் நடத்துகிறார். தமிழகத்தின் பிரபல பால் தொழிற்சாலை ஒன்றுக்கு மூன்று வேளையும் உணவு விநியோகம் செய்கிறார். இதுபோக ஏழெட்டுக் கல்லூரிகளில் கேன்டீன் நடத்துகிறார். ஆனால், தொடர்ந்த குடிப்பழக்கத்தால் இங்கு வந்து சேர வேண்டியதாகிவிட்டது.
அவருக்கு இருப்பது இருதுருவ மனநிலைக் கோளாறு. அவர் போனில் டிபன் ஆர்டர் செய்வது வெறும் பிதற்றல் அல்ல. உண்மையிலே அவர் சின்சியராகத் தொழில் செய்துகொண்டிருக்கிறார். இங்கு அமர்ந்துகொண்டு நூற்றுக் கணக்கான தொழிலாளர்களை நிர்வாகம் செய்கிறார். போன் உரையாடலிலேயே உப்பு, காரம் சரிசெய்கிறார். நினைத்துப் பாருங்கள், ஒருவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மாதம் நான்கைந்து லட்சம் ரூபாய் சம்பாதிப்பது என்பது சாத்தியமா? அவருக்கு இருப்பது இருதுருவ மனநிலைக் கோளாறு.
இப்போது அவர் இருப்பது அதீத எழுச்சி நிலையில். இதுவே, சோர்வு நிலை வந்தால் தொழில் மொத்தமும் போய்விடும். தான் ஒரு தொழிலதிபர் என்பதையே அவர் மறந்துவிடுவார். கதறி அழுதுகொண்டிருப்பார். இப்போது அவரை எழுச்சி நிலையிலேயே வைத்திருக்கிறோம். ஆனாலும், அதுவும் ஆபத்தே. சிகிச்சை மூலம் அவரது மன உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களைச் சமன்செய்வோம். விரைவில் அவர் சரியாகிவிடுவார். என்ன, மீண்டும் குடிக்காமல் இருக்க வேண்டும்” என்றார்.
வரலாற்றில்…
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இருதுருவ மனநிலைக் கோளாறு காலம் காலமாக இருப்பது தெரிகிறது. அதில் சிலருக்கு மது அருந்தும் பழக்கத்தால் ஏற்பட்டிருக்கிறது. சிலருக்கு மரபுரீதியாகவும் பிற காரணங்களினாலும் வந்திருக்கிறது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இருதுருவ மனநிலைக் கோளாறால் அவதிப்பட்டிருக்கிறார். காலை உணவுக்கு முன்பு அவருக்கு இரண்டு பெக் மது தேவைப்பட்டிருக்கிறது. இசைக் கலைஞர் பீத்தோவனுக்கு மதுவுடன் மருந்து மாத்திரைகளைக் கலந்து சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. அவருக்கும் இருதுருவ மனநிலைக் கோளாறு இருந்திருக்கிறது. எழுத்தாளர் ஷிட்னி ஷெல்டன், ஓவியர் வின்சென்ட் வான்காஃப், ஹாலிவுட் நடிகர் மெல் கிப்ஸன்... இப்படி நீள்கிறது இருதுருவ மனநிலைக் கோளாறு கொண்டவர்களின் பட்டியல்.
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in