

தமிழில் நவீனத்துவத்தின் பயணம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலாரிலிருந்து தொடங்குகிறது. வள்ளலார் அவரது படைப்புத் திறனின் உச்சத்தை எட்டிய சமயத்தில்தான் காலனியாதிக்க நிர்வாகம் ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்’ என்னும் அமைப்பைக் கையகப்படுத்திக்கொண்டது. 1852-ல் அலெக்ஸாண்டர் ஹுண்டர் என்பவரின் முயற்சியால் உருவான தனியார் அமைப்பு இது.
சுதந்திரப் போராட்டம் பரவிக் கொண்டிருந்த காலம் அது. பலவிதமான சமூக இயக்கங்கள் தோன்றிக்கொண்டிருந்தன. மதராஸ் மாகாணத்தின் அரசியல் களம் பெரும் மாறுதலுக்கு உள்ளானது. நமக்கேயான பாணியைக் கண்டடையும் தேடல், அனைத்து விதமான கதையாடல்களின் படைப்பு சார்ந்த முனைப்புகள் மாற்றம்கொள்வதில் பெரும் பங்காற்றின.
டி.பி.ராய் சவுத்ரி, கே.சி.எஸ். பணிக்கர் ஆகிய இரு ஓவியர்களும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபாடும் செயலூக்கமும் கொண்டவர்கள். மேற்கத்திய உணர்வியல்புகளை இங்கே நகல் எடுக்காமல் இந்தியாவுக்கான நவீனத்துவம் என்னும் கருத்தியலை உருவாக்க வேண்டும் என அவர்கள் முடிவுசெய்தார்கள். காலனியாதிக்கத்துக்கு எதிரான காங்கிரஸின் போராட்டத்தைப் போலவே இவர்களது அணுகுமுறையும் நாடு தழுவியதாக அமைந்தது. தமிழ் மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருந்த இன்னொரு போராட்டத்தையும் இந்தக் கல்லூரி கூர்ந்து கவனித்தது. அதுதான் சுயமரியாதை இயக்கம்.
சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பு
சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் இந்தியப் படைப்பாற்றலின் பன்மொழி சார்ந்த தன்மையைத் தக்கவைத்துக்கொள்வதில் பல விதங்களிலும் பங்காற்றின. பன்முகத் தன்மை கொண்ட துணைக் கண்டத்து மரபு ஒற்றைப்படைத் தன்மை கொண்டதாக மாறிவிடாமல் தடுத்த பண்பாட்டுரீதியான முதல் முயற்சி என்று சுயமரியாதை இயக்கத்தைச் சொல்லலாம். திரைப்படம், நாடகம், இலக்கியம், இசை, காட்சிக் கலை ஆகிய அனைத்து விதமான கதையாடல்களிலும் இந்த இயக்கத்தின் பண்பாட்டுத் தளம் பரவியிருந்தது. ‘இண்டியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷன்’, ‘புரோக்ரஸிவ் ஆர்டிஸ்ட்ஸ் குரூப்’ ஆகிய இந்திய இடதுசாரிக் கலை இயக்கங்களின் பங்களிப்புகள் செறிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டு வரலாறு அவ்வாறு எழுதப்படவில்லை.
பெருமைமிகு வழித்தோன்றல்
ராய் சௌத்ரியும் பணிக்கரும் இந்தியக் கலையின் அனைத்திந்திய அளவிலான எழுச்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள் என்றால் எஸ்.தனபால், ஏ.பி.சந்தானராஜ், எ.முனுசாமி போன்றோர் சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த கூடுதலான நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். தனபால் சுயமரியாதை இயக்கத்தவர்களுடனும் தமிழ் உணர்வியல்புகளைப் பிரதி நிதித்துவப்படுத்திய ப.ஜீவானந்தம் போன்ற இடதுசாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
அற்புதமான ஓவியர் என்னும் நிலையிலிருந்து தொடங்கி நவீன சிற்பியாக மாறிய தனபால், பன்முக ஊடகங்கள் மற்றும் கலை சாதனங்களைத் திறமையுடன் கையாள்வது குறித்த கருத்தியலைச் சென்னைக் கலைக் கல்லூரிக்கு அளித்தார். சந்தானராஜின் அபாரமான கோடுகள் ஓவியம் தீட்டுவது குறித்த கோட்பாடுகளில் உறுதியான பிடிமானத்தை அளித்தன. மைய நீரோட்டத் திரைப்படங்களிலிருந்தும் சமூக அரசியல் இயக்கங்களிலிருந்தும் உத்வேகம் பெற்ற முனுசாமியின் கலை சமூகத்தில் ஆழமாக வேர்கொள்ளும் கருத்தியலை அளித்தது.
இந்த மரபின் பெருமைமிகு வழித்தோன்றலாக விளங்கினார் ஆதிமூலம். ஓவியங்கள், கோட்டோவியங்கள் ஆகியவற்றை அவர் உருவாக்கினார். கறுப்பு வெள்ளையிலும் வண்ணங்களிலும் பரிசோதனைகள் செய்தார். அரூப ஓவியங்களைத் தீட்டினார். பல்வேறு தனிக் கருத்துகளின் அடிப்படையில் பணிபுரிந்த அவர் கோட்பாட்டு ரீதியாக அவற்றை விரிவுபடுத்தினார்.
அவரது கருத்தியல்சார் பிரபஞ்சம் அற்புதமான அடுக்குகளால் ஆனது. கலை சார்ந்த உணர்வியல்புகளில் சமகாலத் தன்மை கொண்டது. தமிழ் நவீனத்துவம் குறித்த விரிவான பரிசோதனைகளின் எல்லைகளுக்குள் உள்ளூர் பாணிகளிலிருந்தும் தன் கலைக்கான கருத்துகளைப் பெற்றார். எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார்.
ஆதிமூலம் பள்ளி
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகளுடன் ஆதிமூலம் நெருக்கமாகப் பணிபுரிந்திருக்கிறார். அவர் கூர்மையான அரசியல் பார்வை கொண்டவர். சுயமரியாதை இயக்கத்தின் விடுதலைநிலைப் பண்புகளை உணர்ந்துகொண்டவர். சாதிரீதியான சகிப்பின்மைக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்களின் மொழி மற்றும் பண்பாட்டில் உள்ள உயிர்த்துடிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அதே நேரம், கலையை ஜனநாயகபூர்வமாக முன்னெடுத்துச்செல்வதற்கும் வெகுஜனத் தோரணைகளுக்கும் இடையில் உள்ள கோடு அவருக்குத் தெரியும். ஒருபோதும் இந்தக் கோட்டை அவர் தாண்டியதில்லை. வாழ்வு மற்றும் கலை குறித்த தனது அணுகுமுறையில் எவ்விதமான முதிர்ச்சியின்மையும் வெளிப்பட அவர் இடம்கொடுக்கவில்லை.
திருச்சி அருகேயுள்ள கீராம்பூர் கிராமத்தில் தொடங்கி உலகின் பல முக்கியமான கலை அரங்கங்கள் வரை ஆதிமூலத்தின் கலை பயணம் செய்திருக்கிறது. இந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்கது அவரது கலை நேர்மை. பல ஊடகங்களையும் பல பரப்புகளையும் அவர் பயன்படுத்தி யிருக்கிறார். எண்ணெய், பென்சில், பேனா, கரித்துண்டு, பிரஷ், கத்தி, கைக்குட்டை, நுனிவிரல் போன்றவற்றைப் பயன்படுத்திக் கல், பீங்கான், கான்வாஸ், சுவர்கள், துணி என்று எதிலும் வரையவும் தீட்டவும் செய்வார். ஊடகம் எதுவாயினும், அவரது கலையின் தனித்த ஆளுமை வெளிப்பட்டது.
வெகுஜன ஊடகங்களுக்கான அவரது படைப்புகள் பலரும் அணுகும் தன்மையோடு இருந்தாலும் அதில் எந்த விதமான சமரசமும் இருந்ததில்லை. 1968 முதல் 2008 வரை வாழ்ந்த இரண்டு தலைமுறை தமிழர்களுக்கு அவர் ஒரு தனிநபர் கலைரசனை வகுப்பாகத் திகழ்ந்தார். சமகாலத் தமிழ்ப் பதிப்பகங்களிடம் தற்போதுள்ள துடிப்பையும் நேர்த்தியையும் வர்ணங்கள் பற்றிய சீரிய கருத்தமைவையும் தந்ததில் ஆதிமூலம் முக்கியப் பங்கு வகித்தார்.
© ஃப்ரண்ட்லைன், தமிழில்: அரவிந்தன், கவிதா முரளிதரன். (ஜன. 15 ஆதிமூலம் நினைவு நாள்).