

நான் சிறுவனாக இருந்த காலகட்டத்தில் என் ஊருக்கு அருகே இருந்தவை மூன்று நூலகங்கள். அருமனை அரசு நூலகம், முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ. நூலகம், திருவட்டாறு ஸ்ரீசித்ரா நூலகம். என்னுடைய இளமைப் பருவத்தைத் தேடலின் கொண்டாட்டம் என்றுதான் சொல்வேன். புத்தகங்களுக்காகவும் கலை அனுபவத்துக்காகவும் புதிய நிலங்களுக்காகவும் தேடியலைந்துகொண்டே இருந்த காலகட்டம். அன்று மூன்று நூலகங்களிலும் முடிந்தவரை புத்தகங்கள் எடுத்து வாசித்துத்தள்ளினேன்.
ஒவ்வொரு நூலகத்தின் வாசனையையும் இருள் வெளிச்சத்தையும் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த விதத்தையும் இன்றும் துல்லியமாக நினைவுகூர்கிறேன். ஒய்.எம்.சி.ஏ. நூலகத்தில் 50-களில் ‘பேர்ல் பதிப்பகம்’தமிழில் வெளியிட்ட அமெரிக்கப் பேரிலக்கியங்களும் திருநெல்வேலி ‘சைவ சித்தாந்தக் கழகம்’ வெளியிட்ட உலக இலக்கியச் சுருக்கங்களும் அடுக்கப்பட்டி ருக்கும். அருமனை நூலகத்தில் நா.பார்த்த சாரதி, அகிலன், மு.வ. நாவல்கள். ஸ்ரீசித்ரா நூலகம் முழுக்க மலையாள நூல்கள். இலக்கியம் என்றால் என்ன என்பதை நான் மலையாளம் வழியாகவே அறிந்தேன். தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் அங்கேதான் அறிமுகம் செய்துகொண்டேன்.
எப்படி உருவானேன்?
கேரளத்தில் வேலைக்குச் சென்றபோது இன்னும் பெரிய நூலகங்களால் சூழப்பட்ட வனானேன். 80-களில் ஒவ்வொரு கேரளத்துச் சிற்றூர்களிலும் நான்கு நூலகங்கள் இருக்கும். இரு கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நடத்தும் நூலகங்கள் மூன்று. அரசு நூலகம் ஒன்று. தொழிற்சங்க அலுவலகங்களில் எல்லாம் நூலகங்கள் உண்டு. நான் பணியாற்றிய தொலைபேசி நிலைய மனமகிழ் மன்ற நூலகமே 15 ஆயிரம் நூல்களைக் கொண்டது. காசர்கோடு அரசு நூலகம் மிகப் பெரியது. என்னை உருவாக்கியவை அந்நூலகங்களும் அன்று இரவு பகலாகச் செய்த நீண்ட விவாதங்களும்தான்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காசர்கோடு வழியாக காரில் வந்துகொண்டிருந்தேன். நான் நூல்களை வாசித்த ஒரு நூலகம் கண்ணில் பட்டது. அதன் பூட்டு துருப்பிடித்துத் தொங்கியது. அதன் ஜன்னல்களில் கொடிகள் படர்ந்திருந்தன.
தமிழகத்தில் மட்டுமல்ல; கேரளத்திலும் கர்நாடகத்திலும் நூலகங்கள் இறந்து மட்கி அழிந்துகொண்டிருக்கின்றன. ஒய்.எம்.சி.ஏ. நூலகம் இருந்த தகவலே இன்றில்லை. திருவட்டாறு சித்ரா நூலகக் கட்டடம் இடிந்து புத்தகங்களோடு சேர்ந்து மட்கி மறைந்த மண்மேட்டைக் கண்டிருக்கிறேன். கேரள மன்னர் சித்திரைத்திருநாள் மகாராஜா அவர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு 80-கள் வரை சிறப்பாக நடந்துவந்த எல்லா சித்ரா நூலகங்களும் அழிந்துவிட்டன.
ஒரு காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் தமிழகத்திலேயே மிகச் சிறந்த நூலகங்கள் பல இருந்தன. திருப்பதிச்சாரம் நூலகம், மருங்கூர் நூலகம், சுசீந்திரம் நூலகம் ஆகியவை புகழ்பெற்றவை. அவை எல்லாமே இன்று அழிந்துவிட்டன. மருங்கூர் நூலகத்தில்தான் பாரதியின் ‘இந்தியா’, ‘விஜயா’ இதழ்களின் பிரதிகள் ஆய்வாளர் அ.கா.பெருமாள் போன்றவர்களால் கண்டெடுக்கப்பட்டன.
ஏன் அழிகின்றன நூலகங்கள்?
நூலகங்களின் அழிவுக்கான சமூகக் காரணங்கள் பல. அன்றெல்லாம் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் இளைஞர்களும் வீட்டில் இருக்கும் பெண்களும்தான். இன்று கிராமங்களில் இளைஞர்களே அநேகமாகக் கிடையாது. எட்டாம் வகுப்பு முதல் பாடப்புத்தகத்தை வரிவரியாகக் கரைத்து விழுங்கும் கல்வி. கல்வி முடிந்ததுமே வேலைநிமித்தம் வெளியூர் செல்கிறார்கள். பெண்கள் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கிறார்கள். எந்த நூலகத்திலும் நூல்கள் வாசிக்கப்படு வதில்லை. தமிழகத்தின் பல்லாயிரம் அரசு நூலகங்களில் பல லட்சம் நூல்கள் கைபடாமல் மடிந்துகொண்டிருக்கின்றன.
நான் பங்குகொண்ட இரு விழாக்கள் நினைவுக்கு வருகின்றன. நான் பயன்படுத்திய அருமனை அரசு நூலகம் அழிந்து பல ஆண்டுகள் கவனிப்பாரின்றிக் கிடந்தது. என் பள்ளி நண்பன் வர்கீஸும் பிறரும் சேர்ந்து அதை மீட்டு புதிய கட்டடம் கட்டினார்கள். அந்த விழாவுக்கு நான் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தேன். அன்று 'நூலகம் என்னும் அன்னை' என ஓர் உரையாற்றினேன்.
சென்ற வருடம் காசர்கோட்டில் என் தோழனாக இருந்த பாலசந்திரன் என்னை அவன் ஊருக்கு அழைத்திருந்தான். அவன் தந்தை மறைந்த கே.பி.சந்தன் அந்தப் பகுதியின் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தவர். அவரது சொந்த ஊரான செறுவத்தூரில் அவரது பெயரால் அமைந்த ஒரு நூலகம் இருந்தது. பல்லாண்டுக் காலம் செயலற்றிருந்த அந்நூலகத்தை பாலசந்திரன் மீண்டும் உயிர்ப்பித்திருந்தான். அதைத் திறந்துவைத்து உரையாற்றினேன்.
ஆனால், ஒன்றைக் கவனித்தேன். இரு விழாக்களிலும் பங்கேற்றவர்கள் அனைவருமே பழைய நினைவை நிலைநிறுத்த விரும்புபவர்களாக இருந்தனர். என் இளமையில் நான் நூலகத்தைப் பயன்படுத்தியதுபோல வாசிப்பு வெறியுடன் வந்து அமர்ந்திருந்த இளைய தலைமுறையே இல்லை. அப்படியானால், நூலகம் என்ற அமைப்பே காலாவதியாகிக்கொண்டிருக்கிறதா?
எல்லாமும் இலவசம்
நான் நூலகங்களை இப்போது பயன்படுத்துகிறேனா? என் வீட்டிலேயே எனக்கான பெரிய நூலகம் ஒன்று உள்ளது. அதை நான் பயன்படுத்துவதே இல்லை. வாசித்த நூல்களை அதில் சேர்த்து வைக்கிறேன் அவ்வளவுதான். ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் எல்லா குறிப்புதவி நூல்களும் இணையத்திலேயே உள்ளன. மிக எளிதாக அவற்றை என்னால் எடுக்கவும் தேவையானவற்றை மட்டும் வாசிக்கவும் முடிகிறது.
பிரசுரமும் மெல்ல மெல்ல மின்னணு வடிவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழில் இன்னும் மின்நூல்கள் பிரபலமாக வில்லை. ஆனால், இன்று வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இணையம் வழியாக மின்நூல் வடிவிலேயே வாசிக்கிறார்கள். எனக்கு இன்றிருக்கும் பல்லாயிரம் வாசகர்களில் என் நூல்களை ஒருமுறைகூடக் காகித வடிவில் வாசிக்காதவர்கள் நாலில் ஒரு பங்கு இருப்பார்கள். ஆனால், நான் எழுதிய பல ஆயிரம் பக்கங்களை அவர்கள் வாசித்துமிருப்பார்கள். மேலும், வசதியான கைபேசிகள் வரும்போது புத்தகம் என்ற ஒன்று எந்த வடிவிலும் தனியாகத் தேவைப்படாது. அது இணையத்தில் இருக்கும் ஒரு தொகுப்புமுறையாக மட்டுமே இருக்கும். வருங்காலத்தில் நூல் வாசிப்பு முழுக்க முழுக்க இலவசமாகவே இருக்கும். அவற்றுக்கு விற்பனை வருமானம் இருக்காது. விளம்பரம் மூலம் மறைமுக வருமானம் மட்டுமே இருக்கும்.
காகித நூல்கள் அழியும்போது நூலகங்களும் பழைய நினைவுகளாக மாறும் என்று தான் நம்புகிறேன். என் முதுமையில் நான் மூன்றாம் தலைமுறையிடம், “அந்தக் காலத்திலே நூலகம் என்று ஒன்று இருந்தது. அதில் காகிதப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள்” என்று சொல்லும்போது அவர்கள் திறந்த வாயுடன் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்.
ஜெயமோகன், எழுத்தாளர் - தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com