

திரையுலகுக்கு வர நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அகிரா குரோசவா, ஜேம்ஸ் கேமரூன், கிறிஸ்டோபர் நோலன் போன்றவர்கள் முன்மாதிரியான இயக்குநர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் எவ்வளவு பெரிய படிப்பாளிகள் எனத் தெரியுமா? பெரிய இயக்குநர்கள் பலர் படிப்பாளியாக இருந்துதான் படைப்பாளியாக மாறினார்கள். எனவே, வாசிப்புதான் அனைத்துக்குமே ஆதாரம்.
என்னைப் பொறுத்தவரை உணவைவிட படிப்பு அவசியமானது. என்னுடைய திரைக்கதை அமைப்புக்கும் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் புத்தக வாசிப்பு மட்டும்தான் காரணம். இப்போது நான் படமாக்கிவரும் 'துப்பறிவாளன்' கதைக்காக மட்டுமே ஒரு நூறு புத்தகங்கள் படித்திருப்பேன். அதாவது ஒரு ’துப்பறிவாளன்’ என்றால் யார்? எப்படி இருப்பார்கள்? ஷெர்லாக் ஹோல்ம்ஸ் என்பவர் யார்? ஃபாதர் ப்ரௌன், ஜெஸ்டோகன் போன்றோர் யார்? ஆகியவற்றைப் படித்து, அதைக் கொண்டு என்னுடைய தமிழ் மக்கள் ஒரு துப்பறிவாளனைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று ஒரு பாத்திரத்தை உருவாக்கியுள்ளேன். அதில் எனது கருத்துக்களை புகுத்தினேன்.
ஒரு நாளைக்குக் குறைந்தது ஐம்பது பக்கங்களாவது படிப்பேன். அப்படிப் புத்தகம் படிப்பதால் என் வாழ்க்கை அழகாகிறது, என் அறிவு அகலப்படுகிறது, நான் வாழ்வதற்கான அர்த்தம் கிடைக்கிறது, அளவில்லா சந்தோஷத்தை கொடுக்கிறது. ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அந்த ஆசிரியரின் அறிவைப் படிக்க முடிகிறது; அவரது காலம் எப்படி இருந்தது என்று பல வருடங்கள் பின்னோக்கிச் சென்று பார்க்க முடிகிறது.
தமிழில் நான் சிலப்பதிகாரம் போன்ற அடிப்படையான நூல்கள் மட்டுமே படித்துள்ளேன். கல்கி, கி. ராஜநாராயணன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஜெயகாந்தன் போன்றோரின் நூல்களைப் படித்துள்ளேன். ஒப்பீட்டளவில் நான் தமிழில் படித்த நூல்கள் குறைவே. ஏனென்றால் எனக்கு 18 வயது இருக்கும்போதே வெளிநாட்டு நூல்களைத் தேடிச் சென்றுவிட்டேன். தற்போது நான் திரைக்கடல் ஓடி திரவியம் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியும், என் தாய் வீடு இருக்கிறது, அங்கு நிறைய முத்துக்கள், வைரங்கள் இருக்கின்றன என்று. 50 வயதுக்குப் பிறகு அத்தகைய தமிழ்ப் புத்தகங்களைப் படித்து என் வாழ்க்கையை ஓட்டிக்கொள்வேன்.