

வாழ்க்கையை மாற்றிய வாசிப்பு!- உமேஷ்: இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இளைஞர்
நான் உமேஷ். வயது 25. இன்னும் சில நாட்களில் கேரளத்தில் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்கப் போகிறேன். என்னை இந்த உயரத்துக்குச் சுமந்துவந்ததில் கல்விக்கூடங்களுக்கு என்ன பங்கு உண்டோ, வாசிப்புக்கு அதைவிட அதிகமான பங்கு உண்டு. எல்லோரும் சிவில் சர்வீஸ் எழுத வேண்டும் என்பதற்காக நிறைய படிக்கத் தொடங்குவார்கள். நான் நிறைய வாசித்ததால் சிவில் சர்வீஸ் பக்கம் வந்தவன்!
மதுரை என் சொந்த ஊர். அப்பா, அம்மா இருவருமே வங்கியில் பணிபுரிபவர்கள். இருவருமே நல்ல வாசகர்கள். அம்மா மூலமாகத்தான் சுஜாதா எனக்கு அறிமுகமானார். அவரது ‘கற்றதும் பெற்றதும்’ தொடரின் தீவிர வாசகனானபோது நான் ஏழாம் வகுப்பு மாணவன். எனது முதல் குரு அவர்தான்.
தமிழ், ஆங்கில எழுத்தாளர்கள் பலரை சுஜாதாவின் எழுத்துகள்தான் அறிமுகப்படுத்தின. மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொகுப்பு பற்றிப் பேசுவார், பில் பிரைஸனின் ‘எ ஷார்ட் ஹிஸ்டரி ஆப் நியர்லி எவ்ரிதிங்’ பற்றியும் பேசுவார். நான் 10-ம் வகுப்பு முடிப்பதற்குள் அவர் அறிமுகப்படுத்திய புத்தகங்கள் மூலம் எழுத்தாளர்களின் உலகத்துக்குள் நுழைந்துவிட்டேன்.
பள்ளி நாட்களில் எனது ஆசிரியைகள் வத்சலா, ஜெயந்தி, துர்கா பவானி ஆகிய மூவரும் எனது வாசிப்புலகத்தில் வழிகாட்டிகளாக இருந்தனர். வகுப்பு நேரத்திலும் ஒரு முறையாவது பாடத்தைத் தாண்டி, இலக்கியம், சமகால எழுத்தாளர்கள் என்று எங்களையும் ஞான உலகத்தை நோக்கி நகர்த்தியவர்கள். ‘அவுட்லுக்’, ‘இந்தியா டுடே’ போன்ற ஆங்கில இதழ்கள் எனது வாசிப்பின் தளத்தைப் பிரம்மாண்டமாக்கின. குறிப்பாக, ‘அவுட்லுக்’ இதழைச் சொல்ல வேண்டும். நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் பற்றிய விமர்சனங்கள் வரும். வினோத் மேத்தா ஆசிரியராக இருந்த சமயத்தில் மிகச் சிறப்பான விமர்சனங்கள் வந்தன. குஷ்வந்த் சிங் தொடர்ந்து புத்தக விமர்சனம் எழுதுவார். நான் + 2 முடித்த காலத்தில் ராமச்சந்திர குஹா எழுதிய ‘இந்தியா ஆப்டர் காந்தி’ புத்தகம் வந்தது. அந்தப் புத்தகம்தான் இந்திய வரலாறு குறித்த எனது பார்வையை விசாலமாக்கியது. அவரது புத்தகங்களின் அடிக்குறிப்பில் இருக்கும் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன். அவரை வாசிக்கும் அனைவரும் இதைச் செய்திருப்பார்கள். தமிழில் சுஜாதாவைப்போல் ஆங்கிலத்தில் எனக்கு குரு குஹா!
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மின்னணுவியல், தகவல் தொடர்பு பொறியியல் படித்தேன். கல்லூரி நாட்களிலும் புத்தகங்கள்தான் வழித்துணை. இந்திய வரலாறு, சமகால நிகழ்வுகள் என்று இந்தியாவைப் பற்றிய புத்தகங்கள் பலவற்றை வாசித்தேன். கல்லூரி முடித்த பின்னர் எனது வாசிப்பு இன்னும் தீவிரமானது. எனது அடுத்தகட்ட வாழ்க்கையைத் தீர்மானித்தது, சுஜாதா எழுதிய ஒரு வாசகம்தான். “நவஇந்தியாவின் எதிர்காலம் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது” என்று சுஜாதா எழுதியதை வாசித்தபோது நான் செல்ல வேண்டிய திசை தீர்க்கமானது!
இந்தச் சமூகத்தில் நமது பங்கு என்ன; நாம் இந்தச் சமூகத்துக்குச் செய்ய வேண்டியது என்ன? என்று பல்வேறு கேள்விகளை நான் வாசித்த புத்தகங்கள்தான் என்னுள் எழுப்பின என்பேன். பெருமைக்காகச் சொல்லவில்லை, 2012 முதல் இந்த நான்காண்டு காலத்தில் குறைந்தபட்சம் 300 புத்தகங்களை வாசித்துவிட்டேன். சிவில் சர்வீஸ் தேர்வில் அரசியல் அறிவியல்தான் துணைப்பாடம். வரலாறு, சமூகம், இலக்கியம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் என்னுள் இறங்கியிருந்த எழுத்துகள் பெரிய அளவுக்குக் கைகொடுத்தன!
சிவில் சர்வீஸுக்காகப் படிக்கும் நேரம் போக, ஓய்வு நேரங்களில் தமிழ் புத்தகங்கள்தான் வாசித்துக்கொண் டிருப்பேன். இலக்கியப் படைப்புகளிலிருந்தே எனக்குத் தேவையான நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டேன். ஜெயகாந்தன் எழுதிய ‘தவறுகள், குற்றங்கள் அல்ல’ சிறுகதையைப் படித்துவிட்டு நான் எந்த விதத்திலாவது காயப்படுத்தியிருப்பேன் என்று கருதிய நண்பர்களிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அந்த அளவுக்கு இலக்கியம் என்னைச் செழுமைப்படுத்தியது!