

ஒல்லையூர் நாடு என்று அன்றைக்கு ஒரு நாடு இருந்தது. இன்றைக்குப் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில் ஒரு சிற்றூராக அடங்கிவிட்ட ஒலியமங்கலம்தான் அன்றைக்குப் பல சிற்றூர்களை அடக்கிய ஒல்லையூர் நாடாக விளங்கியதாக உ.வே.சாமிநாதையர் குறிக்கிறார்.
ஒல்லையூர் நாட்டில் ஆளுமை செலுத்திவந்த பெருஞ்சாத்தன், மைய அரசாகிய பாண்டிய நாட்டின் மேல்ஆளுமையை உதறி, ஒல்லையூர் நாட்டைத் தனி அரசு ஆக்கிக்கொண்டான். பொறுக்கமாட்டாத பாண்டிநாட்டரசன் பூதப்பாண்டியன் போர்தொடுத்து, ஒல்லையூர் நாட்டை மீண்டும் தன் அரசுக்குள் அடக்கிக்கொண்டான். தனி அரசான ஒல்லையூரைப் பிடித்துத் தன் அரசுக்கே தந்ததனால், ‘ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்’ ஆனான்.