

தவணைக் கடனை செலுத்தவில்லை என்பதற்காக, வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டரை விவசாயியிடம் இருந்து பறித்துச் சென்றார்கள் என எத்தனையோ முறை செய்திகளைப் படித்திருக்கிறோம். கிரெடிட் கார்டு தவணை செலுத்தவில்லை என்பதால் செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள், அவதூறான வார்த்தைகளால் அவமானப்படுத்தும்படி பேசிய சம்பவங்கள் பற்றி நிறைய கேட்டிருக்கிறோம். கடன் வாங்கியவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த வசூல் முகவர்கள், வீட்டில் இருந்த பெண்களிடம் அசிங்கமான வார்த்தைகளைப் பேசிச் சென்றது பற்றிய கதைகள் பல கேட்டிருக்கிறோம்.
வாகனக் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், தனி நபர் கடன் என வங்கிகளில், நிதி நிறுவனங்களில் வாங்கிய எந்தக் கடனாக இருப்பினும், தவணை தவறாமல் திரும்பச் செலுத்துவது கடன் வாங்கியவரின் சட்ட பூர்வமான கடமை. அதே நேரத்தில், தவிர்க்க முடியாத காரணங்களால் தவணை செலுத்த முடியாத சூழலில் பலர் சிக்கிக் கொள்கின்றனர். அதுபோன்ற நேரங்களில், கடன் தவணையை வசூலிக்க சட்டத்துக்குட்பட்ட வழிமுறைகளை மட்டுமே கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.