

கடந்த சில வாரங்களில் இந்தியாவில் இரண்டு தனியார் பேருந்துகள் தீ விபத்துகளில் சிக்கியிருக்கின்றன. இந்த விபத்துகளில் 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். படுக்கை வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட இந்தப் பேருந்துகள் அதிகாலையில்தான் விபத்தில் சிக்கின. பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இத்தகைய அசம்பாவிதம் நேர்ந்தது பெருந்துயரம்.
கடந்த அக்டோபர் 24ஆம் தேதி, ஹைதராபாத்தில்இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னடேகூரு கிராமத்தை நெருங்கும்போது, சாலையில் கிடந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.