

ஆமை புகுந்த வீடு விளங்காது என்றொரு நம்பிக்கை. ஆமை இறையனாரின் அவதாரம் என்பதால் போற்றி வழிபடத்தக்கது என்பது மற்றொரு நம்பிக்கை. ஆமைக்கறி தின்று பெருமை கொள்வார் ஒருபுறம். ஆமையைப் பேணிவளர்த்துப் பெருமை கொள்வார் மறுபுறம். தமிழ்க் காதல்மரபிலோ ஆமை அழியாமை பெறுகிறது.
பரணர் பாட்டில் விரியும் காட்சி இது: தெருவில் நடந்துகொண்டிருந்த தலைவியின் கையைக் கதக்கென்று பிடித்தான் ஒருவன். திடுக்கிட்டவள் ‘அம்மா’ என்று கூவினாள். திகைத்துப்போனவன் கையை விடுவித்து விலகிப் போய்விட்டான். கையைப் பிடித்தபோது அம்மாவைக் கூவியவள், நடந்ததை அம்மாவிடம் சொல்ல வேண்டாமா? சொல்லவில்லை. சொல்வதற்கு நாக்கு எழாமல் மேல்அண்ணத்தோடு ஒட்டிக்கொண்டுவிட்டதாம்.