

இந்திய விளம்பரத் தயாரிப்பு உலகின் திசைவழியைத் தீர்மானித்த முன்னோடியான பியூஷ் பாண்டேவின் மறைவு வர்த்தகத் துறை, கலைத் துறையினர் மத்தியில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரிக்கெட் வீரரான தனது காதலனின் வெற்றியைக் கொண்டாடப் பார்வையாளர் பகுதியிலிருந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டே வரும் பெண் (கேட்பரி டெய்ரிமில்க் சாக்லெட்), பல முஸ்தீபுகளுடன் மீன் பிடிக்க வந்திருக்கும் பணக்காரர் முன்பு ஒரு குச்சியில் இரண்டே இரண்டு ஃபெவிகால் சொட்டுகளை விட்டு நீருக்குள் வைத்துச் சடுதியில் மீன் பிடிக்கும் சாமானியர், சிறுவன் எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடரும் ‘பக்’ ரக நாய் (ஹட்ச்) என பியூஷின் சுவாரசியமான கற்பனைச் சித்தரிப்புகள், விளம்பரங்களின் பரம ரசிகர்களாகப் பார்வையாளர்களை மாற்றியவை.