

வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பாக, சட்டரீதியிலும் சமூகரீதியிலும் நீண்ட போராட்டத்தை எதிர்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற ஒரு நெடிய, மக்கள் பொதுக் கருத்தாக வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலைக் கோரிக்கை எழுந்ததில்லை. மனித உரிமைப் பார்வையில் சிறைவாசிகளின் முன்விடுதலை பார்க்கப்படுவது இல்லை. பெரும்பாலும் பொதுச் சமூகத்தில் அதுகவனம் பெறுவதில்லை; சிறைவாசிகளின் தனிப்பட்ட குடும்பம் சார்ந்த போராட்டமாக மட்டுமே சுருக்கப் படுகிறது.
மறையும் நம்பிக்கை வெளிச்சம்: தேசியக் குற்ற ஆவணப் பதிவேட்டின் 2019ஆம் அண்டு அறிக்கையின்படி, நாட்டில் தண்டனை சிறைவாசிகளில் 53 சதவீதத்தினர் ஆயுள் சிறைவாசிகள். நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்பச் சிறைகள் விரிவுபடுத்தப்படவில்லை. இடநெருக்கடி, காலனிய காலப் பழமைவாத நடைமுறைகள், சுகாதாரச் சீர்கேடுகள் தொடர்கின்றன. வளர்ந்த சமூக நிலைக்கு ஏற்பச் சிறைத் துறை தன்னைத் தகவமைத்துக்கொள்ளவில்லை. ஒரு சராசரி ஆயுள் சிறைவாசி குறைந்தபடசம் 14 ஆண்டுகள் தனது வாழ்நாளை அங்கு கழிக்க வேண்டும்.