

‘பட்டாசு மீதான தடையை ஏன் நாடு முழுவதும் நீட்டிக்கக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த ஒற்றைக் கேள்விக்குப் பின்னால், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம், தொழில் கட்டமைப்பு, வெகுமக்கள் கொண்டாடும் பண்டிகை, மாநிலப் பொருளாதார வளர்ச்சி, உற்பத்திச் சங்கிலி எனப் பல்வேறு அம்சங்களில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்துப் பேசப்பட்டாக வேண்டும்.
பின்னணி என்ன? - சுற்றுச்சூழலைக் காரணம்காட்டி பட்டாசுகளுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015 செப்டம்பர் 24ஆம் தேதி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2020 முதல் அனைத்து வகைப் பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு ஆகியவற்றுக்கும், பட்டாசு வெடிப்பதற்கும் டெல்லி அரசு தடை விதித்தது. உச்ச நீதிமன்றமோ ஒருபடி மேலே போய் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை குறித்தும் பரிசீலிக்கப் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஹரியாணா மாநிலப் பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சில தளர்வுகள் கோரி மனுத் தாக்கல் செய்தது.