

டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது. நாய் ஆர்வலர்கள், நாய் எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்ற உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திருத்தப்பட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘தெருவில் திரியும் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும்; மீண்டும் தெருக்களில் விடக் கூடாது’ என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அத்துடன், நாய் ஆர்வலர்கள் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க கூடாது, அதற்கென உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்ற உத்தரவும் பாராட்டுக்குரியதாகும்.
தெரு நாய்களால் கடிபடும் சம்பவங்கள் ஆங்காங்கே ஒன்றிரண்டு நடந்து வருவது வருத்தத்துக்குரியதே. தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகும் வகையில் சாலைகளில் திரியும் நாய்களுக்கு உணவளிக்க கூடாது என்பதும், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதும் இப்பிரச்சினைக்கான தீர்வாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.
அதை முறையாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தாததே தெருநாய்கள் பெருகிவரும் சம்பவங்களுக்கு அடிப்படை. உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், ரேபிஸ் தொற்றுள்ள நாய்கள் மற்றும் ஆபத்து விளைவிக்க வாய்ப்புள்ள நாய்களை காப்பகத்தில் அடைக்கலாம் என்று உத்தரவிட்டிருப்பது மிகவும் நியாயமான, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உத்தரவாகும். இந்த வழக்கை டெல்லியோடு நிறுத்தாமல் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தி அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க கேட்டிருப்பதன் மூலம், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று நம்பலாம்.
எங்கோ ஒரு மனிதன் தவறு செய்துவிட்டால், உடனே மனிதகுலம் அனைத்தையும் பிடித்து சிறையிலடைக்க உத்தரவிடுவது எப்படி நியாயமற்றதாக இருக்குமோ, அதேபோன்று எங்கோ ஒரு நாய் ஒருவரை கடித்துவிட்டால், நாய்கள் அனைத்தையும் காப்பகத்தில் அடைத்து வதைப்பதும் நியாயமற்ற நடவடிக்கையாகவே அமையும். அத்தகைய மனிதநேயமற்ற வரலாற்றுத் தவறை உச்ச நீதிமன்றம் திருத்திக் கொண்டு, மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அதேநேரம் நாய்கள் துன்பத்துக்கு ஆளாகாதபடியும், பிறப்பித்துள்ள உத்தரவு பாராட்டுக்குரியது.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் நாய்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு குரல் கொடுத்தவர்களுக்கும், எந்த தவறும் செய்யாமல் தண்டனை அனுபவிக்க தயாராக இருந்த தெரு நாய்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே இந்த உத்தரவு அமைந்துள்ளது. இந்த உத்தரவு தமிழகத்துக்கும் பொருந்தும் என்பதால், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்வதுடன், கருத்தடை, தடுப்பூசி மற்றும் காப்பகவசதிகளை துரிதமாக மேற்கொண்டு மனிதர்கள் – நாய்களிடையே சுமுக சூழலை உருவாக்க வேண்டும்.