

டெல்லியில் 6 வயது சிறுமி நாய் கடித்து உயிரிழந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இதில் 2 மாதங்களுக்குள் டெல்லியில் நாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நாய்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்க வேண்டும். பிடிக்கப்படும் நாய்களை அடைக்கவும், இனவிருத்தியை கட்டுப்படுத்தும் ஊசி செலுத்தவும் உரிய வசதிகளுடன் கூடிய காப்பகங்களை உடனே உருவாக்க வேண்டும்.
சுமார் 5,000 நாய்களை அடைக்கும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். நாய்களைப் பிடிப்பதற்கான சிறப்பு படையை உருவாக்க வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தெரு நாய்கள் தொல்லை என்பது டில்லிக்கு மட்டும் உள்ள பிரச்சினையல்ல. நாடு முழுவதும் இந்தப் பிரச்சினை உள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக கூறி, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
நாய்களைப் பிடிப்பதற்கும், அதற்கு ஊசி செலுத்தவும் தேவையான ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக உள்ளாட்சி அமைப்புகள் புலம்புகின்றன. நாய்களைப் பிடித்தால் அவற்றை கொல்லக் கூடாது, ஊசி செலுத்திய பின்னர் மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள உத்தரவு அதற்கு மாறாக புதிய உத்தரவாக அமைந்துள்ளது.
இந்த புதிய உத்தரவு நாய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அதேநேரம், நாய்களைப் பிடிப்பதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதன் மூலம், இதுவரை நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ‘பீட்டா’ போன்ற அமைப்புகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.
நரி இனத்திலிருந்து வந்தவை தான் நாய்கள் என்றும், அவை குழுவாக சேர்ந்து வேட்டையாடும் குணம் படைத்தவை என்றும் கூறப்படுகிறது. மற்ற விலங்குகளை விட நாய்கள் மனிதர்களின் உணர்வுகளை அதிக அளவில் புரிந்து கொண்டதால், மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக, வீட்டு விலங்காக மாற்றப்பட்டு மனிதர்களுடன் வாழப் பழகி விட்டது. அதன் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிக எண்ணிக்கையில் வளரும்போது இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, கிராமங்களை விட நகரங்களில் வீணாகும் உணவுப் பொருட்களின் சதவீதம் அதிகமாக இருப்பதால், அவற்றை உண்பதன்மூலம் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதை தடுப்பதன் மூலமும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வரலாம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காப்பகங்கள் அமைத்து பராமரிப்பதிலும் பல சிக்கல்கள் வர வாய்ப்புண்டு. அதிகப்படியான எண்ணிக்கையில் உள்ள நாய்களைப் பிடித்து வனப்பகுதிகளில் விட முடியுமா என்பது குறித்தும் உரிய நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்.