தேசிய பிரச்சினையாகும் நாய்க்கடி விவகாரம்!

தேசிய பிரச்சினையாகும் நாய்க்கடி விவகாரம்!
Updated on
1 min read

டெல்லியில் 6 வயது சிறுமியை நாய்கள் கடித்ததில் அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது. இந்த விஷயத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.

நாய்க்கடி விவகாரம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதால், இதுகுறித்து நீதிமன்றமே வழக்காக எடுத்து விவாதிப்பது வரவேற்கத்தக்க விஷயமே. கடந்த ஆண்டுமட்டும் நாடு முழுவதும் 37 லட்சத்துக்கும் அதிகமானோர் நாய்க்கடி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாய்களால் பாதிக்கப்படுவோரில் குறிப்பாக குழந்தைகள், முதியோர் இருப்பதால், இந்த விவகாரத்தை குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையமும் தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நாட்டில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

நாய்களுக்கு விரும்பி உணவளிப்போர் ஒருபுறம், நாய்களை விரும்பாமல் அதனால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் மறுபுறம் என இருதரப்பாக நாம் இருப்பதால், இந்த விவகாரத்தில் அரசும், நீதிமன்றங்களும் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றன. நாய்களை கொல்லக் கூடாது என்று வாதிடுவோர் அதிகம் இருப்பதால் அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க முடிவதில்லை.

மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ், மிருக இனவிருத்தி தடுப்பு நடைமுறைகள் 2023 உருவாக்கப்பட்டு, அதன்படி நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றிற்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நாடு முழுவதும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், நாய்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, நாய்களைப் பிடித்துவந்து இனவிருத்தி தடுப்பு அறுவை சிகிச்சை செய்துமீண்டும் அதே இடத்தில் விடுவதற்கான போதிய ஆட்கள் இல்லாதது, மருத்துவ வசதிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சி அமைப்புகள் இந்த நடவடிக்கைகளை தேவைப்படும் அளவில் செயல்படுத்த முடிவதில்லை.

நாய் ஆர்வலர்கள் ஆங்காங்கே சாலைகளில் உணவளித்து நாய்களின் எண்ணிக்கை பெருக ஒருபுறம் காரணமாக உள்ளனர். இதுதவிர, சமீபகாலமாக புற்றீசல் போலவளர்ந்துள்ள சாலையோர அசைவ சிற்றுண்டிகள் மூலம்நாய்களுக்கு தேவைக்கு அதிகமாகவே உணவு கிடைப்பதால்,சாலைகளில் அவற்றின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கிறது.

தெருக்களில் விளையாடும் சிறுவர், சிறுமிகள், அதிகாலை நேரம் நடைபயிற்சி மேற்கொள்வோர், ஆள்நடமாட்டம் இல்லாத சாலைகளில் செல்லும் முதியோர், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நாய்கள் இனவிருத்தியை தடுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களை அதிகப்படுத்துவதுடன், நாய்களுக்கு உணவளிப்போருக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, சாலையோர உணவகங்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வந்தால் மட்டுமே நாய்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in