பாகிஸ்தானை பலவீனப்படுத்த இந்தியாவுக்கு ஒரு துருப்புச்சீட்டு இருக்கிறது! -  முனைவர் ராமு மணிவண்ணன் நேர்காணல்

பாகிஸ்தானை பலவீனப்படுத்த இந்தியாவுக்கு ஒரு துருப்புச்சீட்டு இருக்கிறது! -  முனைவர் ராமு மணிவண்ணன் நேர்காணல்

Published on

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதில் நடவடிக்கையாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின. மூன்று நாள்கள் நீடித்த இந்தத் தாக்குதல், மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக இரு தரப்பும் அறிவித்துவிட்டன. சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் - பொது நிர்வாகத் துறை முன்னாள் தலைவர் ராமு மணிவண்ணனோடு நடத்திய நேர்காணலில் இருந்து...

பாகிஸ்தானுடனான இந்தியாவின் மற்ற போர்களில் இருந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ வேறுபட்டது எனச் சொல்லப்படுகிறது. இதை விளக்க முடியுமா? - இதற்கு முன்​பும், இந்​தி​யா​வில் பொது இடங்​களில் குண்​டு​வீச்​சுத் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. பஹல்​காமில் மக்​களைத் தனிமைப்​படுத்​தித் தீவிர​வாதத் தாக்​குதல் நடத்​தப்​பட்​டிருப்​பது கவனிக்​கப்பட வேண்​டும். காஷ்மீர் பகு​திக்​குக் கடந்த இரண்டு ஆண்​டு​களில் மட்​டும் 1 கோடியே 80 லட்​சம் சுற்​றுலாப் பயணி​கள் சென்​றிருக்கிறார்​கள். இந்​நிலை​யில், உளவியல்​ரீ​தி​யாக மக்​களிடத்​தில் ஒரு பீதியை உண்​டாக்க இத்​தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ள​தாகவே தெரி​கிறது.

தாக்​குதல் நடப்​ப​தற்​குச் சில நாள்​களுக்கு முன்​பு, அப்​போது பாகிஸ்​தானின் ராணுவத் தளப​தி​யாக இருந்த அசீம் முனிர் இன, மத அடை​யாளங்​களைச் சார்ந்​து, வன்​முறையைத் தூண்​டும் வித​மாகப் பேசி இருந்​தார். இந்​துக்​களும், இஸ்​லாமியர் களும் இரண்டு இனங்​களைச் சேர்ந்​தவர்கள் என வேறு​படுத்தி ‘இரு நாடு​கள்’ என்​கிற கோட்​பாட்டை முன்​வைத்​திருந்​தார். பாகிஸ் தானின் ஆதர​வோடு இந்​தத் தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கின்றன என்​ப​தற்​குப் போது​மான சாட்​சி​யங்​கள் இருப்​ப​தால், இந்​தியா எதிர்​வினை ஆற்​றி​யுள்​ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் அமெரிக்காவின் பங்கு எப்படிப் பார்க்கப்படுகிறது? - வேறு எந்த நாட்​டின் தலை​யீடும் இல்​லாமல் போர் நிறுத்​தம் கொண்​டு​வரப்​பட்​டது எனவும் இது இடைக்​காலப் போர் நிறுத்​தம்​தான் எனவும் இந்​தியா அறி​வித்​துள்​ளது. உண்​மை​யில் அமெரிக்​கா​வின் தலை​யீட்​டால் அல்​லது இந்​தியா - பாகிஸ்​தான் எல்​லைப் பாது​காப்பு அதி​கரி​கள் மூல​மாகப் போர் நிறுத்​தம் கொண்டு வரப்​பட்​டதா என்​ப​தில் குழப்​பம் நீடிப்​ப​தால் இதற்​கான விளக்​கம் தேவைப்​படு​கிறது என நினைக்​கிறேன். அண்​மை​யில் பாகிஸ்​தானுடன் இந்​தியா போரிட்​டுக் கொண்​டிருந்​த​போது, சர்​வ​தேசச் செலா​வணி நிதி​யம் (ஐஎம்​எஃப்) ஏறக்​குறைய 4 பில்​லியன் அமெரிக்க டாலர்​களைப் பாகிஸ்​தானுக்கு நிதிக்​கட​னாக வழங்கியுள்ளது.

இப்​படி, இந்​தி​யா​வுக்கு ஆதர​வாகப் பேசிக்​கொண்​டு, இன்​னொரு பக்​கம் பாகிஸ்​தானுக்​குத் தேவை​யான ஆயுதங்​களை​யும் பண பலத்​தை​யும் வேறொரு வகை​யில் ஏற்​பாடு செய்​வது ஏற்​றுக்​கொள்​ளப்​படக் கூடாதது. பாகிஸ்​தான் உடனான போரை நிறுத்​து​வதும் தொடர்ந்து நடத்​து​வதும் இந்​தி​யா​வின் கணிப்​பில்​தான் இருக்​கிறது என நினைக்​கிறேன்​.

பலூசிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் செயல்பாடுகளால் இந்தியாவுக்குச் சாதகமா... பாதகமா? - பலூசிஸ்​தான் விடு​தலை இயக்​க​மானது ஒரு காலக்​கட்​டத்​தில் பலவீன​மாக இருந்து மீண்​டும் எழுச்சி பெற்​றுள்​ளது. அதி​கக் கனிம வளங்​கள் கொண்ட பலூசிஸ்​தான், பாகிஸ்​தானின் வளத்​தில் முக்​கியப் பங்கு வகிக்​கிறது. ஆனால், அப்​பகு​தி​யின் வட்​டார வளர்ச்சி மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட நிலை​யில்​தான் இப்​போதும் இருக்​கிறது. எனவே, பாகிஸ்​தான் அரசு தங்​களை ஏமாற்​று​வ​தாக அப்​பகு​தி​யினர் நம்புகின்றனர். அண்​மைக் காலங்​களில் பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ராக மிகப் பெரும் எதிர்ப்பு அலை அப்​பகு​தி​யில் உரு​வாகி​யுள்​ளது. பலூசிஸ்​தான் தனி நாடு கோரிக்​கை​களும் வலுத்​துள்​ளன.

இந்​தச் சூழலில், இந்​தியா பாகிஸ்​தானுடன் போரிட்​ட​போது பலூசிஸ்​தான் அமைப்பு உள்​நாட்​டுப் போரை அறி​வித்​தது. இந்​தியா தங்​களை அங்​கீகரிக்க வேண்​டும் எனக் கோரிக்​கை​யும் விடுத்​தது. ஒரு​வேளை, பலூசிஸ்​தானை இந்​தியா அங்​கீகரித்​தால், மிகப் பெரிய புவி​சார் மாற்​ற​மாக​வும், பாகிஸ்​தானையே திருப்​பிப்​போடக்​கூடிய நிகழ்​வாக​வும் அது அமை​யும். 1971இல் வங்​கதேச உரு​வாக்​கத்​தில் இந்​தியா பெரும் பங்​காற்​றியது.

தற்​போதைக்கு அது போன்ற ராணுவத் தலை​யீடு இல்லை என்​றாலும் உலக அரசி​யல், தெற்கு ஆசிய பிராந்​திய
அரசி​யல், பாகிஸ்​தான் அரசின் நிலைப்​பாடு​களைக் கருத்​தில் கொண்டு பார்க்​கும்​போது, புதி​யதொரு அரசி​யல் மாற்​றத்​தை​யும், நிலப்​பரப்பு சார்ந்த அரசி​யல் மாற்​றத்​தை​யும் இந்​தியா உரு​வாக்க முடி​யும் அல்​லது உரு​வாக்கிவரு​கிறது எனலாம். இது பாகிஸ்​தானைப் பலவீனப்​படுத்த இந்தியாவுக்கு ஒரு துருப்புச்சீட்டாகவும் அமைய​லாம்.

எல்​லைப் பகு​தி​களில் தொடரும் தீவிர​வாதத்தை ஒழிப்​ப​தற்கு உள்ள சாத்​தி​யம் என்ன? - பிரிட்​டிஷ் காலனி ஆதிக்​கத்​துக்​குப் பிறகு ரத்த ஆற்​றில்​தான் இரு நாடு​களும் உரு​வாகின. ஒரு நிலை​யான அரசாங்​கத்தை உரு​வாக்க முடி​யாத​தா​லும், மத அடிப்​படை​யில் மட்​டுமே ஒரு தேசத்​தைக் கட்​டமைக்க முடி​யும் என்​கிற சித்​தாந்​தத்தாலும் பாகிஸ்​தான் பல சவால்​களைச்
சந்​திக்​கிறது. பாகிஸ்​தா​னால் இந்​தி​யா​வுக்​குப் பல பாதகங்​கள் ஏற்​படு​கின்​றன. பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வாத அமைப்​பு​களின் வன்​முறை, தீவிர​வாதத் தாக்​குதல்​களை முடிவுக்​குக் கொண்​டு​வ​ரு​வது இந்​தி​யா​வுக்​குச் சவாலான காரிய​மாகவே இருக்​கிறது.

எனவே, தீவிர​வாதத்தை ஒழிக்​கும் பயணத்​தில் முழு​மை​யாக வெற்றி கண்​டு​விட்​டோம் என்​கிற நிலை இந்​தி​யா​வுக்கு வரப்​போவ​தில்​லை. இலங்​கை, நேபாளம், வங்​கதேசம், மாலத்​தீவு நாடு​களோடும் இந்​தி​யா​வுக்​குப் பிரச்​சினை​கள் இருக்​கின்​றன. ஆனால், பிரச்​சினையைப் பொறுத்து ஒவ்​வொரு நாட்​டுக்​கும் எதி​ராகக் கையாளும் முறை​கள் மாறு​படும். புவி​யியல்​ ரீ​தி​யாக இந்​தி​யா​வின் மிக அரு​கில் இருக்​கும் பாகிஸ்​தான் ஏற்​படுத்​தும் சவால்​கள் நமக்கு அதி​கம்.

அணு ஆயுத மோதல் குறித்து இரு நாடு​களின் நிலைப்​பாடு என்ன? - இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் அணு ஆயுதங்​களை நோக்​கிச் சென்​றதற்கு வெவ்​வேறு காரணங்​கள் இருக்​கின்​றன. சீனா அணு ஆயுத நாடாக இருக்​கும்​போது, இந்​தியா அணு ஆயுதங்​கள் இல்​லாமல் இருக்க முடி​யாது. அதே சிந்​தனை​யில்​தான் இந்​தியா அணு ஆயுத நாடானதற்​குப் பின்பு பாகிஸ்​தானும் அணு ஆயுதங்​களை வாங்​கியது. ஆனால், எல்​லாப் பிரச்​சினை​களுக்​குமே அணு ஆயுதத்​தைப் பயன்​படுத்த வேண்​டும் என்​கிற எண்​ணம் ஏற்​புடையதல்ல. 1971ஆம் ஆண்​டுக்​குப் பிறகு பாரம்​பரிய போர் முறை​யில் இந்​தி​யாவை வெல்ல முடி​யாது எனத் தீர்​மானித்​தற்​குப் பிறகு, தீவிர​வாதத்​தைப் பயன்​படுத்தி பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​திவ​ரு​கிறது.

இந்​தி​யா​வில் ‘ஆயிரம் வெட்​டுக்​களை உரு​வாக்​கு​வோம்’ என்​பதே பாகிஸ்​தானின் கொள்​கைத் திட்​டம். தேவைப்​பட்​டால், அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்​து​வோம், அது​வும் முதலா​வ​தாகப் பயன்​படுத்​து​வோம் என பாகிஸ்​தான் சொல்​லிவ​ரு​கிறது. இந்​தி​யா​வைப் பொறுத்​தவரை அணு ஆயுதம் இல்​லாத நாடு​களுக்கு எதி​ராகப் பயன்​படுத்த மாட்​டோம் என்​ப​தி​லும், அணு ஆயுத பலம் மிக்க நாடு​களுக்கு எதி​ராக முதலா​வ​தாகப் பயன்​படுத்த மாட்​டோம் என்​ப​தி​லும் உறு​தி​யாக இருக்​கிறது.

தீவிர​வாதத்தை ஒழிக்கப் போர் மட்​டுமே தீர்​வாகு​மா? - இந்​தியா - பாகிஸ்​தான் பிரிந்த காலக்​கட்​டத்​தில் இருந்து கடந்த 75 ஆண்டு களுக்​கும் மேலாக காஷ்மீர் பகு​தி​யில் அமைதி கிடை​யாது. இந்த விவ​காரத்​தில் இந்​தியா என்ன நிலைப்பாட்டை எடுக்​கிறது என்​ப​தை​விட, எதிரி​யின் நிலைப்​பாடு எப்​படி​யானது என்​ப​தைப் பொறுத்​துத்​தான் முடிவு​களை எடுக்க முடி​யும். வரலாற்​றில் அமை​தி​யைத் தேடி​யும் போர்​கள் நடத்​தப்​பட்​டிருக்​கின்​றன. இது முரணான ஒரு வாத​மாக இருந்​தா​லும் அமை​தியை வேண்​டி​யும் போர் நடத்த வேண்​டித்​தான் இருக்​கிறது. எனினும், தொடர் போரின் மூல​மாக மயான அமை​தி​தான் கிடைக்​குமே தவிர, நிரந்​தர​மான அமைதி கிடைக்​காது!

போர்ச் சூழலின்​போது இணையம் வழி​யாக ஏற்​படக்​கூடிய சவால்​கள் குறித்​து... ‘போரில் முதலில் பாதிக்​கப்​படு​வது உண்​மை​தான்’ என்​கிற பிரபல சொற் றொடரை நினை​வு​கூர வேண்​டும். போர்ச் சூழலின்​போது பரப்​பப்​படும் பொய்ப் பிரச்​சா​ரம், வதந்​தி​கள் ஆகிய​வற்​றைக் கவன​மாகக் கையாள வேண்​டும். ஒரு செய்​தியை ஒன்​றுக்கு இரண்டு முறை பரிசீலனை செய்த பின்​னரே பகிர வேண்​டும். இது நாட்​டை​யும், நாட்டு மக்​களை​யும் சார்ந்த விஷ​யம் என்​ப​தால்​, ஒவ்​வொரு தனிமனிதருக்​கும்​ அதி​கக்​ கவன​மும்​ பொறுப்​பும்​ அவசி​யம்​. இதை அனைவரும்​ உணர வேண்​டும்​!

- தொடர்புக்கு: karthiga.rajendran@hindutamil.co.in

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in