Published : 13 Apr 2025 09:23 AM
Last Updated : 13 Apr 2025 09:23 AM

கரிசல் பூமியில் கோயில் கொண்டுள்ள ‘நல்லதங்காள்’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் - 12

கரிசல் வட்டாரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் நடந்த ‘நல்லதங்காள்’ கதை மிகவும் பிரபலமானது. ‘நல்லதங்காள் சரித்திரம்’ தெருக்கூத்துகளிலும் நாடகமாக நடத்தப்பட்டது. இது ஒரு துன்பியல் கதையாகும். நல்ல தங்காள் கதையை பாக்களோடு. உணர்ச்சி பொங்க புகழேந்தி புலவர் எழுதியுள்ளார். கதையின் நாயகியின் பெயர் நல்ல தங்காள். அவளது அண்ணன் நல்ல தம்பி. செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தார்கள். தனது தங்கை நல்லதங்காளுக்கு மானாமதுரையை ஆண்ட சிற்றரசன் காசிராஜனுக்கு சீறும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தான் நல்ல தம்பி.

நல்ல தங்காளுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், நாட்டில் மழை பெய்யாமல் ஏற்பட்ட பஞ்சத்தால் உண்ண உணவின்றி மக்கள் வறுமையால் அவதிப்பட்டனர். மக்களைக் காப்பாற்ற சொத்துகள், ஆபரணங்கள் என அனைத்தையும் விற்றான். கஜானா காலியானது. வறுமை அரச குடும்பத்தையும் ஆட்டிப் படைத்தது. தன்னுடைய குழந்தைகளைக் காப்பாற்றும் எண்ணத்தில், கணவனின் சொல்லையும் மீறி அண்ணனிடம் புகலிடம் தேடி வந்தாள் நல்ல தங்காள். ஆனால், அண்ணனின் மனைவியால் நயவஞ்சகமாகத் துரத்தியடிக்கப்படுகிறாள். தன் குழந்தைகள் படும் கஷ்டங்களைப் பார்க்க சகிக்காது, பாழுங்கிணற்றில் குழந்தைகளைத் தள்ளி கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டாள். இவ்வாறு அந்தக் கதை முடியும்.

பின்னாட்களில் நல்லதங்காள் கிராம தெய்வமாக அங்குள்ள மக்களால் வணங்கப்பட்டாள். பச்சை ஆடை போர்த்திய வயல்களுக்கு மத்தியில் அர்ஜுனாபுரத்தில் கோயில் கொண்டுள்ளாள் நல்லதங்காள். இன்றைக்கும் நல்ல தங்காளுக்கு விழாக்கள் நடத்தி வணங்கி வருகிறார்கள் அவளின் வழித்தோன்றல்கள். இதுபோன்று, அய்யனார், முனி, கருப்பசாமி, இசக்கியம்மாள், மாரியம்மாள், பேச்சியம்மாள், ரேணுகாதேவி, அக்கம்மாள் போன்ற கிராம தெய்வங்களையும் குல தெய்வங்களாக கரிசல் பகுதி மக்கள் வழிவழியாக வழிபட்டு வருகின்றனர்.

கிராமங்களில் குடிசை வீடுகள் பெரும்பாலும், தென்னை கிடுகுகள், பனையோலைகள், சோளத் தட்டைகள் வேயப்பட்டு இருக்கும். அதேபோல், தகரம் அல்லது நாட்டு ஓடுகள், சீமை ஓடுகள் வேயப்பட்ட வீடுகளும் உண்டு. ‘மெட்ராஸ் டெரஸ்’ என்று சொல்லக் கூடிய செங்கல் தளமிட்ட வீடுகள் ஒன்றிரண்டு காணப்படும்.

கிராமங்களில் மல்லிகைப்பூ பிரதானமாக இருக்கும். மாலையில் வெயில் தாழ்ந்தவுடன் கருக்கல் நேரத்தில் மல்லிகைப் பூக்களைப் பறித்து, சரமாகக் கட்டி, வீடுகளில் பூஜை அறைகளில் விளக்குகளிலும், சுவாமி படங்களிலும் அலங்கரிப்பார்கள். பெண்கள் தங்கள் கூந்தலிலும் சூடிக் கொள்வார்கள்.

மனதை மயக்கும் வாசனை மல்லிகைப் பூவுக்கு உண்டு. கி.ரா.வுடன் உரையாடும்போது கூறுவார்: ‘பொண்டாட்டி தலையில் மல்லிகைப்பூவைச் சூடிக் கொண்டால், கணவன் மேல் அன்றைக்கு கூடுதல் அன்பும், காதலும் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அதை கணவன் புரிந்து கொண்டு அவளை சந்தோஷப்படுத்த வேண்டும். ஒருவகையில் பூக்கள் மூலம் பெண்கள் விடும் தூது அது...” என்று கிண்டலாகக் கூறுவார்.

அப்போதெல்லாம் கோடை காலங்களில் பகல் நேரங்களில் வயதானவர்கள் ஆலமரத்தடியிலும், வேப்ப மரத்தடியிலும் துண்டை விரித்து ‘அப்பாடா’ என்று படுத்துவிடுவார்கள். காற்று ஜிலுஜிலுவென்று வரும். இரவு வேளையில் ஒரு சிலர் வீடு இருந்தும் மடம், சாவடி போன்ற இடங்களில் படுத்துக் கொள்வதுண்டு.

ஆலமரம், அரசமரத்தின் அடியில் திண்டு கட்டியிருப்பார்கள். பகல் நேரங்களில் அங்கு அமர்ந்து ஆடுபுலி ஆட்டம், தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். 18 ஆடுகள் சேர்ந்து 3 புலிகளை அடைத்தல், அல்லது 3 புலிகளை வைத்து, 18 ஆடுகளைக் கொல்லுதல் என்ற வகையில் அந்த விளையாட்டு இருக்கும்.

கிராமங்களில் அன்னியர் எவரேனும் வந்துவிட்டால், அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாரைப் பார்க்க வந்திருக்கிறார்? என்ன உறவு என்று விசாரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் தேடி வந்த நபரின் வீட்டுக்கே கொண்டு போய் விடுவார்கள்.

பகல் முழுவதும் வயல், காடுகளுக்குச் சென்று வேலை பார்த்து விட்டு மாலை வீடு திரும்பியதும் குளித்து விட்டு பஞ்சாயத்து ஊர் சாவடிகளில் கூடி விடுவார்கள். அங்கு படிப்பதற்கு செய்தித் தாள்கள் இருக்கும். மேலும் பஞ்சாயத்து ரேடியோவில் ஒலிபரப்பாகும் செய்திகளையும் கூர்ந்து கவனிப்பார்கள்.

கிராமங்களில் ஒவ்வொருவரையும் பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழக்கம். தெக்கு வீட்டார், வடக்கு வீட்டார், கீழ வீட்டார், மேல வீட்டார், கிணத்து வீட்டார் என பொதுவாகவும் குறிப்பிட்டு அழைப்பார்கள்.

அதேபோல் தெருச்சண்டைகள் சரளமாக நடக்கும். பெரும்பாலும் பெண்களுக்கிடையேதான் சண்டைகள்தான் அதிகமாக நடைபெறும். எடுபட்டவள், வெக்கங்கெட்ட கழுதை, அருதலி, தரித்திரம், பாதகி, பாதகன், எழவெடுத்தவன், பலபட்டறை என்ற வசவு வார்த்தைகள் சண்டையில் ஈட்டி போல் மற்றவர்களைத் தாக்கும். அதேநேரம் பகலில் நடக்கும் சண்டை மாலையில் நட்பாக மாறிவிடும். அக்கா, தங்கச்சி, மதினி... என்று உறவு கொண்டாடுவார்கள்.

கணவன் - மனைவிக்குள் இடையே நடக்கும் ஊடல் சுவாரசியமாக இருக்கும். கணவன் வீட்டை விட்டுக் கிளம்பியதும், ‘இதோ... ஜில்லா கலெக்டரு கிளம்பிட்டாரு...’ என்று மனைவி கிண்டலாகக் கூறுவாள். அதேபோல், கல்யாணமாகாத இளைஞர்கள் நல்ல உடை உடுத்திக் கொண்டு போனால், ‘ஊர் மேய கிளம்பியாச்சு’ என்று மற்றவர்கள் நக்கலடிப்பார்கள்

சிலர் எப்பொழுதும் கோழி இறக்கையும் கையுமாக இருப்பார்கள். நடந்து செல்லும்போதும், மற்றவர்களிடம் பேசும்போதும் கூட இறகைக் கொண்டு காதைக் குடைந்து கொண்டே இருப்பார்கள். இறகால் காதைக் குடைவதில் அப்படியொரு சுகம்...

கிராமங்களில் வெற்றிலை பாக்கு, பொடி போடும் பழக்கம் ஆண்கள் பெண்கள் மத்தியில் சரளமாக இருந்தது. காய்ந்த வாழைநார் பட்டையிலோ அல்லது சிறிய டப்பிகளிலோ மூக்குப் பொடியை வைத்திருப்பார்கள். அதில் ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை எடுத்து ஒரு தட்டு தட்டி லாவகமாக மூக்கால் உறிஞ்சுவார்கள். சிலர் அண்ணா எவ்வாறு மூக்குப் பொடியை போடுவாரோ அதேபோல் போடுவதுண்டு. அப்போதெல்லாம் டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி, என்.வி.எஸ். சண்முகம் பட்டணம் பொடி பிரபலமாக இருந்தன. கடைகளில் பெரிய ஜாடியில் பொடியை வைத்திருப்பார்கள். அதை எடுப்பதற்கு ஒரு நீண்ட மெல்லிய கரண்டி இருக்கும். அதன் நுனியில் குழி போன்று இருக்கும். அதைக் கொண்டு பொடியை எடுத்து கொடுப்பார்கள்.

அதேபோல் வெற்றிலைப் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை வைப்பதற்கு தனித் தனி அறைகளுடன் கூடிய ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். அதற்கு ‘வெத்தலைப்பெட்டி’ என்று பெயர். அது பித்தளை, சில்வரில் இருக்கும். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வெள்ளியிலான வெத்தலைப்பெட்டி வைத்திருப்பார்கள். அதற்குள் வெற்றிலை, அங்குவிலாஸ் கருப்பட்டி புகையிலை, பன்னீர் புகையிலை, சீவல் மற்றும் களிப்பாக்கு, வாசனை சுண்ணாம்பு இருக்கும்.

எங்காவது வெளியூருக்கு கிளம்பும்போது மறக்காமல் வெத்தலைப் பெட்டியையும் கூடவே எடுத்துச் செல்வார்கள். அதேபோல் தாத்தா, பாட்டிகள் வெற்றிலை போட சிறிய அளவிலான உரல் வைத்திருப்பார்கள். அது இரும்பிலோ, பித்தளையிலோ இருக்கும். அதில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து இடித்து பின்னர் வாயில் குதப்பிக் கொள்வார்கள்.

கிராம வாழ்க்கையில் வெற்றிலை பாக்குக்கென்று முக்கியத்துவம் உண்டு. இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்ட பகை, முரண்பாடுகள் பேசித் தீர்க்கப்பட்டால் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்வார்கள். அதேபோல் திருமணத்தை நிச்சயப்படுத்துவதற்கும் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்வது சடங்காக இருந்தது.

கிராமங்களில் புதுமனை புகுவிழா நடத்தும்போது பசு மாடு மற்றும் கன்றை வீட்டுக்குள்ளே ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் செல்வார்கள். மகாலட்சுமியே வீட்டுக்குள் பிரவேசிப்பதாக ஒரு ஆத்ம திருப்தி அவர்களுக்கு. அதுபோல் பசுவின் பாலை விற்கக் கூடாது; அதை விற்பது குலதெய்வத்துக்கு ஆகாது என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவியது. பசுவின் வெண்ணெய்யை ‘மிதப்பு’ என்று சொல்வார்கள்.

காய்ச்சிய பாலுடன் உரைமோர் சேர்த்து தயிராக்குவார்கள். மாலையில் விளக்கேற்றிய பிறகு யார் வீட்டிலும் உரை மோர் கேட்கக் கூடாது என்ற வழக்கம் கிராம மக்களிடையே இருந்து வந்தது.

புதிதாக கறவை மாடு வாங்குபவர்கள், வீட்டில் முதன்முறையாக அந்த மாட்டில் இருந்து பால் கறந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து நீர் நிறைந்திருக்கும் கிணற்றில் ஊற்றுவார்கள். அது கடவுளுக்குப் படைக்கப்பட்ட பால் என்று கூறுவார்கள்.

வெண்ணெய்யை உருக்கும்போது அதில் கறிவேப்பிலை, வெற்றிலை, முருங்கைக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றைப் போட்டு உருக்குவார்கள். நெய் உருகியவுடன் வேறு பாத்திரத்துக்கு நெய்யை மாற்றிய பின் அடியில் தங்கும் அந்த இலையை சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். சிறுவயதில், அதைச் சாப்பிடுவதற்காக நெய்யை உருக்கும்போது அடுப்பங்கரையையே சுற்றிச்சுற்றி வந்ததெல்லாம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.

பசுவின் சாணத்தை சேகரிப்பதில் பெண்களிடையே போட்டா போட்டி இருக்கும். வயலுக்கு உரமாகவும், காலையில் தண்ணீரோடு கரைத்து வாசல் தெளிப்பதற்கும் சாணத்தைப் பயன்படுத்துவார்கள். மேலும் கிராமங்களில் பெரும்பாலான வீடுகளின் தரை, மண் தரையாகவே இருக்கும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சாணம் கரைத்த தண்ணீரால் தரை மற்றும் அடுப்பு மேடையை மெழுகுவார்கள்.

மில்களில் நெல் அரவை செய்யும்போது உமி தனியாக விழும். அரிசி போலவே அந்த உமியையும் சாக்குகளில் கட்டி வைப்பார்கள். அதை யாகசாலைகளிலும், அடுப்பு எரிக்கவும் பயன்படுத்துவார்கள். அதேபோல் உமியை எரித்த கரியைக் கொண்டு பல் துலக்கவும் செய்வார்கள். மேலும், எரு வறட்டி தட்டும்போது உமியையும் அதனுடன் கலந்து தட்டுவார்கள்.

கிராமங்களில் பெரும்பாலும் மாட்டிறைச்சியை விரும்ப மாட்டார்கள். ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறியைத்தான் பயன்படுத்துவார்கள். மழைக் காலங்களி்ல் குளங்கள், ஏரிகளில் மீன்கள் கிடைக்கும்.

மாடுகளை இயற்கை முறையிலேயே சினைப்படுத்துவார்கள். 1970-க்குப் பிறகுதான் கால்நடை மருத்துவர்கள் ஊசி போட்டு சினையாக்கும் நடைமுறை வந்தது. பசும்பாலை தங்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, எருமைப் பாலையே அருகே உள்ள நகரத்து ஓட்டலுக்கு விலைக்கு விற்பார்கள். 70-க்குப் பிறகு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வந்தபின், ஒவ்வொரு ஊரிலும் பாலை வாங்கி, அருகாமையில் உள்ள ‘சில்லிங் சென்டருக்கு’ அனுப்புவார்கள். அன்றைக்கு எங்கள் பகுதியில் விருதுநகரில் மட்டும்தான் அந்த சென்டர் இருந்தது.

வீட்டில் மாடு இறந்துவிட்டால், வீடே கண்ணீரும், கம்பலையுமாக மாறிவிடும். யாரேனும் உறவினர் இறந்துவிட்டால், எவ்வாறு ஒப்பாரி வைப்பார்களோ அதேபோல், பெண்கள் குழுமி இருந்து அழுவதை சிறுவயதில் நான் நேரில் பார்த்துள்ளேன்.

கிராமத்தில் உள்ள ஊர் பொதுச் சாவடியில் மாலை நேரங்களில் கூட்டமாக அமர்ந்து ஊர்க் கதைகள் பேசுவார்கள். அதோடு அரசியலையும் அலசி ஆராய்வார்கள். ஓமந்தூரார், காமராஜர், நேரு, இந்திரா காந்தி, அண்ணா, கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம் மட்டுமல்லாது, லோகியோ, ஜெயப்பிரகாஷ் நாராயணன், கிருபளானி என பல அரசியல் தலைவர்கள் குறித்தும் பேசுவார்கள்.

அதேபோல், அமெரிக்க நாட்டின் கென்னடி முதல், சோவியத் நாட்டின் குருசேவ் வரை உலக அரசியலையும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள். ஒருசிலர் கதை அளப்பதும் உண்டு.

1983-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருமண விழா நிகழ்ச்சியில் கலைஞர், மதுரை ஆதீனம், முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் அமர்ந்திருக்கும் மேடையில் பேசுகிறார் முன்னாள் துணை சபாநாயகரும், காமராஜரை தேர்தலில் தோற்கடித்தவருமான பெ.சீனிவாசன்.

1967-ல் நடைபெற்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் தோல்வியடைந்து விட்டார் என்று வானொலியில் செய்தி ஒலிபரப்பானது. அப்போது சிலர், ‘ஏல... இந்த பெட்டி தப்பா சொல்லுது... காமராசர் தோத்திருக்க மாட்டார்... ஒரு தட்டு தட்டுல... சரியாச் சொல்லும்” என்று கூறியதை நான் நேரில் கேட்டேன். மேலும், “எதுத்து நின்னது அப்பய நாயக்க பல்ல ஊரு சீனிவாசன்தானே... இந்த சீனிவாசன் நம்ம பயலாச்சே.... இவன் எப்படி காமராசரை ஜெயிச்சான்...” என்று அந்த மக்கள் வெள்ளந்தியாக கேள்வி எழுப்பினார்கள்.

அப்போதெல்லாம் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் பெரும்பாலும் கைவைத்தியத்தாலேயே குணப்படுத்தி விடுவார்கள். எனக்கு 10 - 12 வயது இருக்கும்போது எங்கள் ஊரில் இருந்த கிணற்றில் நீச்சல் பழகுவோம். எங்களை விட வயதில் மூத்த ஒருவர் நீச்சல் சொல்லித் தருவார். அப்போது காதுக்குள் தண்ணீர் போய்விடும். காது கம்மென்று இருக்கும். மற்றபடி ஒன்றும் தெரியாது. ஆனால், நடு இரவில் காது பயங்கரமாக வலிக்கும். வலியால் துடித்து விடுவேன். உடனே என் தாயார் இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெய்யுடன் மிளகாய் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெய்யை சொட்டு சொட்டாக காதில் விடுவார். ஐந்து நிமிடத்தில் அந்த வலி காணாமல் போய்விடும்.

அதேபோல், அம்மைக்கட்டு ஏற்படும்போது, வேப்ப இலையை அரைத்து கழுத்தில், கன்னங்களில் போட்டுவிடுவார்கள். மஞ்சள் காமாலை நோய் வந்தால், உடனே கீழாநெல்லியைக் கொடுத்து மூன்றே நாளில் குணப்படுத்திவிடுவார்கள். ஆனால் மூன்று நாளும் கடும் பத்தியம் இருக்க வேண்டும். மோர் சாதம்தான் சாப்பிடவேண்டும். சட்னி சாம்பார், குழம்பு, ஊறுகாய் என எதையும் தொட்டுடக் கூடாது.

ஒருமுறை மதுரை திருமங்கலம் வழக்கறிஞர் அய்யாதுரை, போலீஸாரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனால் கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டோம். அது மாணவர் பருவம். அப்போது எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. எங்கள் ஊருக்கு வந்தேன். டாக்டர்கள் ஏதேதோ மருந்துகள் எழுதிக் கொடுத்தார்கள். ஆனால் நோய் குணமாகவில்லை.

எனது தாயார் கீழாநெல்லியை பக்குவமாக எனக்கு கொடுத்தவுடன். மூன்றே நாளில் காமாலை நோய் காணாமல் போய்விட்டது. மூன்று நாட்களும் பத்தியச் சாப்பாடுதான். இப்படியாக அன்றைக்கு நாட்டு வைத்தியம் பிரமிக்கச் செய்தது.

கிராமங்களில் வேலையில்லாமல் சிலர் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். காலையில் வீட்டில் இருந்து கிளம்பினால் இரவில்தான் வீடு வந்து சேர்வார்கள். எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்று வீட்டாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஊரில் ஐந்தாறு பெரிய வீடுகள் இருக்கும். ஒரு வீட்டில் காலையில் எதாவது சாப்பிடுவார்கள். எங்கள் வீட்டுக்கு வந்தால் இட்லி, தோசை என கொடுப்போம்.
மத்தியானம் இன்னொருவர் வீடு, இரவில் வேறு வீடு என அவரது அன்றாட போஜனம் கழிந்துவிடும். யாரும் அவர்களை ‘வேலையில்லாதவன்’, ‘வெட்டிப்பயல்’ என கிண்டலோ, கேலியோ செய்ய மாட்டார்கள்.

இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் நபர்கள் கல்யாணம் ஆகிவிட்டால், அவர்களுக்கு பொறுப்பு வந்துவிடும்; மனைவி திருத்தி விடுவாள் என்ற எண்ணத்தில் ஊராரே சேர்ந்து திருமணம் செய்து வைப்பதும் உண்டு. திருமணத்துக்குப் பின் அவர்கள் பொறுப்புடன் வாழ்ந்ததையும் நான் பார்த்துள்ளேன்.

அருகில் உள்ள கழுகுமலையில் இருந்து திருநீர் பட்டை, ருத்ராட்சம், காவி உடை தரித்து சாமியார்கள் சிலர் அடிக்கடி எங்கள் ஊருக்கு வருவதுண்டு. தங்களை சிவபக்தர், முருக பக்தர் என்று சொல்லிக் கொள்வார்கள். இரண்டு மூன்று நாட்கள் அங்கு தங்குவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டில் போஜனம் நடக்கும். பின்னர் அடுத்த ஊர்களுக்குச் செல்வார்கள். இது தொடர்ந்து நடைபெறும். அவர்கள் காவடிச் சிந்து, திருப்புகழ் பாடல்களை உரத்த குரலில் அற்புதமாகப் பாடுவார்கள்.

அதேபோல் ஒரு குடையை கையில் பிடித்துக் கொண்டு புலவர்கள் என்ற பெயரில் கிராமங்களுக்கு சிலர் வருவார்கள். ஊரின் முக்கிய இடங்களில் அமர்ந்து, தமிழ்ப் பாடல்களை, குறிப்பாக சீவகசிந்தாமணி, தேவாரப் பதிகங்கள், நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருக்குறள் போன்ற இலக்கிய நூல்களை எல்லாம் படித்துக் காட்டுவார்கள். அவர்கள் ஊர் திரும்பும்போது, வெற்றிலை, பாக்கு பழத்தோடு தட்சணையாக பணம் வைத்து அவர்களுக்கு பொதுமக்கள் வழங்குவார்கள்.

கிராமங்களில் மார்கழி மாதம் இறுதியில் நெல், துவரை, உளுந்து அறுவடை நடக்கும். களங்களில் அவற்றைத் தட்டி தானியங்கள், பருப்பு வகைகளை காய வைப்பார்கள். 2 - 3 நாட்கள் வெயிலில் நன்றாகக் காய்ந்தால்தான் பக்குவப்படும். இதற்காக களத்து மேட்டில் இரவு பகலாகக் காவல் காக்க வேண்டும். இரவில் மார்கழி குளிர் வாட்டி எடுத்துவிடும்.

இரவில் காவல் காப்பவர்கள், பெரிய ஜமுக்காளத்தைப் போர்த்திக் கொண்டு, 3 கற்களை வைத்து அடுப்பு மூட்டி அலுமினியப் பாத்திரத்தில் கருப்பட்டி டீ போட்டு குடித்துக் கொண்டு இருப்பார்கள். குளிருக்கு இதமாக இருக்கும். இவ்வாறு விடிய விடிய விழித்திருந்து, அவ்வப்போது டீயை சூடுபடுத்தி குடித்துக் கொண்டும், ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டும் காவல் காப்பார்கள்.

கிராமத்து மக்கள் ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் வீட்டுத் திண்ணையில் சாய்வு ஈசி சேர்களைப் போட்டுக் கொண்டு அதில் சாய்ந்து கொண்டும், திண்ணையில் பாயை விரித்து அதில் உட்கார்ந்து கொண்டும் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசுவது வழக்கம். இப்போது அந்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

கிராமங்களில் வேலைகளைப் பொறுத்தவரை உழுதல், பயிரிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், களை பறித்தல், மருந்து தெளித்தல், அறுவடை போன்ற விவசாயப் பணிகள், கிணறு தோண்டுதல், மேட்டார் பம்ப் செட் சரிபார்த்தல், தச்சு, கொல்லு வேலை, கொத்தனார் வேலை இவைதான் பிரதானமாக இருந்தன. வருடத்தில் 10 மாதங்கள் இத்தகைய வேலைகளில் ஈடுபடுவார்கள். மீதமுள்ள 2 மாதங்கள் திருவிழாக்கள், பொங்கல் என்று கழிந்துவிடும்.

குறைந்த ஊதியத்திலும் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் அன்றைய கிராம மக்கள்.

(தொடர்வோம்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x