

நாற்பது ஆண்டுகளைக் கடந்து நடைபோட்டு வரும் சென்னைக் கலைக் குழுவுக்குத் தலைமை வகிப்பவர் பிரளயன். அடிப்படையில் கவிஞர், எழுத்தாளர், பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆனால், ஓய்வறியா நாடகக் கலைஞர் என்பதுதான் அவருடைய முதன்மையான அடையாளம். தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழ் நாடகத் துறையில், வீதி நாடகத்தை மிக முக்கியமான ஓர் அங்கமாக, போராட்ட ஆயுதமாக மாற்றிக் காட்டிய கலைஞர். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
1984இல் தொடங்கி 40 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது ‘சென்னைக் கலைக் குழு’. ஒரு மாற்று நாடகக் குழு வெற்றிகரமாக இயங்குவதே வியப்பானது... இது எப்படிச் சாத்தியமானது? - எங்களைவிட மூத்த குழுக்கள் பல இருக்கின்றன. அவை ஆண்டுக்கு இரண்டு நிகழ்வுகள் நடத்தினாலே சாதனை என்கிற நிலை இருக்கும்போது, நாங்கள் மாதத்துக்குக் குறைந்தது மூன்று நிகழ்வுகளை நடத்துகிறோம். காரணம், எங்கள் நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துவரும் ஆதரவு.