

தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வரை இயங்காது; கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்டு, அந்த அறிவிப்பு செயல்வடிவத்திற்கும் வந்துவிட்டது. பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படுகிறது. மீறி தாம்பரம் வரும் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், அரசின் அறிவிப்பு பேருந்துகளில் பயணித்து சென்னைக்குள் வரும் பயணிகளுக்கும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் எந்த அளவுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் சென்னை நகரின் உட்பகுதிகளில் இருந்து தங்களது சுமைகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடையவே ரூ 500 முதல் ரூ.1000 வரை செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடுதலாக இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. கிளாம்பாக்கம் வந்திறங்கும் பயணிகள் நகருக்குள் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கும் இதேபோன்று பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கும் நிலை உள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. வரும் மே மாதம் தான் இப்பணி முழுமையடையும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து துறையின் இத்தகைய திடீர் அறிவிப்பு பயணிகளை சிரமத்திற்குள்ளாக்குகிறது. ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மூட்டை முடிச்சுகளுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஜிஎஸ்டி சாலையைக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நடைமேம்பாலம் அமைக்கும் பணியும் இன்னும் நிறைவேறவில்லை.
பணிகள் அரைகுறையாக நிற்கும் நிலையில், பயணிகளின் இன்னல் குறித்து சற்றும் கருத்தில் கொள்ளாமல், பேருந்துகளை கிளாம்பாக்கத்துடன் நிறுத்துவது முறையல்ல. கிளாம்பாக்கத்தில் இருந்து நகரில் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை கோயம்பேட்டில் இருந்ததைப் போன்ற கால இடைவெளியில் இயக்கப்படுவதில்லை. ஒரு பேருந்து நடைக்கும் அடுத்த பேருந்து நடைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால், பயணிகள் ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
காலை நேரத்தில் வெளியூர்களில் இருந்து வந்திறங்கும் பயணிகளிடமும், இரவு நேரங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் வரும் பயணிகளிடமும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கருத்து கேட்க வேண்டும். பயணிகளுக்கு என்ன வசதி தேவை என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நடைமுறைகளையும், வசதிகளையும் உருவாக்கித் தர வேண்டும்.
இப்போதைக்கு கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி முடிவடையும் வரையிலாவது, ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளம்பும் சிறப்பு பேருந்துகளை தற்காலிகமாக இயக்கி பயணிகளின் இன்னலை குறைப்பது குறித்து போக்குவரத்து துறை ஆலோசிக்க வேண்டும்.